தங்க இருப்பு வைத்திருக்கும் நாடுகளைவிட அதிகம்
மும்பை, பிப். 10 இந்திய மக்கள் தான் அதிக அளவில் வீட்டில் தங்கத்தை சேமித்து வைத்திருப் பதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
தற்போது உலகத்தின் பெரும் முதலீடு என்றால் அது தங்கம் தான். அமெரிக்க அதிபர் டிரம்ப் விதிக்கும் அதிரடி வரிகளால் டாலரின் மீது நம்பிக்கை இழந்த நாடுகள் தங்கம்மீது முதலீடு செய்து வருகிறது. இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்துள்ளது. இருந்தாலும், அமெரிக்கா டாலரின் மதிப்பு சரியவில்லை என்று டிரம்ப் கூறி வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சவரனுக்கு ரூ.200, ரூ.300 விலையேறும் தங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ராக்கெட் வேகத்தில் உயர்ந்து தற்போது ஒரு சவரன் ரூ.1,14,000 வரை விற்கப்படுகிறது.
மேலும், பலரும் தற்போது தங்கத்தில் தான் முதலீடு செய்து வருகிறார்கள். சமீபத்தில் தங்கம் விலை குறைந்த நிலையில் தற்போது மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. தங்கத்திற்கு இணையாக வெள்ளியின் விலையும் உயர்ந்து வருகிறது. வருங்காலத்தில் தங்கத்தின் விலை மேலும் உயரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் தங்கத்தை சேமித்து வைத்திருக்கும் மக்கள் (பெண்கள்) மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்திய மக்கள் தான் அதிக அளவில் வீட்டில் தங்கத்தை சேமித்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அய்.அய்.எஃப்.எல் கேப்பிடல்ஸ் அவுட்லுக் அறிக்கையின் படி, இந்திய மக்கள் 25,000 டன் தங்கத்தை வீடுகளில் வைத்துள்ளார்களாம். உலக தங்க கவுன்சிலின் தரவுகளின்படி, அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட 10 முன்னணி நாடுகளின் ஒருங்கிணைந்த மத்திய வங்கி தங்க இருப்புக்களைவிட இது பெரியது.
ஆனால் இந்தியாவின் மத்திய வங்கியின் தங்க இருப்பு என்றால் சுமார் 880 டன்கள் மட்டும் தான். அதிக தங்க இருப்பு வைத்திருக்கும் நாடுகளில் அமெரிக்கா முன்னணி உள்ளது. ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் அடுத்தடுத்த வரிசையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
