இந்திய ஒன்றியத் தலைமையமைச்சர் மலேசியா சென்று ‘‘அனைவரையும் இணைக்கும் பாலமாகத் தமிழ் விளங்குகிறது’’ எனத் தமிழின் உலகளாவிய பண்பைப் பாராட்டிப் பேசினார்.இஃது அறுதிவாய்ந்த உண்மையெனினும், அவர் உளமாரக் கூறினாரா உதட்டளவில் மொழிந்தாரா – என யாமறியோம். திருவள்ளுவர் ஆய்விருக்கை அமைப்பதாகக் கூறினார். எனினும் அஃது ஏற்கெனவே அய்சிசிஆர் எனப்படும் ஒன்றிய அரசின் துறையால் கோலாலம்பூர் பல்கலைக் கழகத்தில் நிறுவப்பட்டுள்ளது. முனைவர்.செல்லபெருமாள் என்னும் புதுவை மத்தியப் பல்கலைப் பேராசிரியர் பணியினின்று நிறைவு பெற்ற பேராசிரியர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
அவர் திருக்குறள் குறித்துக் கருத்தரங்கங்களும் ஆய்வரங்கங்களும் மாணவர்களுக்குப் பயிற்சிப் பட்டறைகளும் நடத்துவார் என எதிர்பார்த்தோம்.ஆனால் அவர் இலக்கியம் பற்றிய சில பொதுவான கருத்தரங்கங்களே இதுவரை நடத்தியுள்ளார்.
அண்மையில் நாட்டுப்புற இலக்கியம் குறித்த ஓர் ஆய்வரங்கம் நிகழ்த்த இருப்பதாக அறிக்கை கொடுத்துள்ளார்.
திருக்குறள் ஆய்விருக்கையில் நாட்டுப்புற இலக்கிய ஆய்வு எதற்காக?
எந்த நோக்கத்துக்காகப் பணியமர்த்தப்பட்டாரோ அதற்குச் சற்றும் தொடர்பற்ற ஆய்வுகளில் ஈடுபட்டு ஆய்விருக்கையின் நோக்கத்தைச் சிதறவிடவேண்டாம் என அன்பு வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் அவர் விடாப்பிடியாக திருக்குறள் அல்லது திருவள்ளுவர் ஆய்விருக்கை என்றாலும் குறளைப் பற்றித்தான் ஆய்வு நிகழ்த்தவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்கிறார்.
மலேசியத் தமிழர்கள் நெடுநாளாக எதிர்பார்த்த இத் துறை ஏமாற்றம் அளிக்கும் வகையில் நடக்கலாமா? என வினவியதும் அவர் விடுத்த விடை இதுதான்;
‘‘ஹியூச்டன் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் ஆய்விருக்கை இருக்கிறது. அங்கேயும் குறளைத் தவிர ஏனைய இலக்கியங்களைத்தான் ஆய்வு செய்கிறார்கள்.”
அய்சிசிஆர் இந்திய ஒன்றியத்தின் நிறுவனம்.நமது வரிப்பணத்தில் இயங்குவது. ஒன்றிய அரசு சொல்வது ஒன்றாகவும், உண்மையில் நடப்பது வேறாகவும் இருக்கிறதே.
திருவள்ளுவர் ஆய்விருக்கையில் திருக்குறள் ஆய்வு நிகழ்த்தவில்லையெனில் இப்படி ஒரு நிறுவனம் தேவையா?
