‘எந்தக் கருத்தையும் திணிக்காதே’ என்பதுதான் – அறிவுப் பூர்வமான, அறிவுச் சுதந்திரம் கொடுக்கக்கூடிய இயக்கமான சுயமரியாதை இயக்கம்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஒப்பற்ற சுய சிந்தனையாளரான தந்தை பெரியார் அவர்கள் எப்படி ஒரு மொழிக்கு எதிரியாக இருக்க முடியும்?
ஒரு மொழியாக மட்டுமே இருந்தால், நமக்கு அதைப்பற்றி கவலையே இல்லை. எதையும் திணிப்பதுதான் தவறு!
புத்தக வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை

சென்னை, பிப்.8  ஒப்பற்ற சுய சிந்தனையாளரான தந்தை பெரியார் அவர்கள் எப்படி ஒரு மொழிக்கு எதிரியாக இருக்க முடியும்? மொழி என்பதற்காக, சமஸ்கிருதத்தையோ, ஹிந்தியையோ அவர் எதிர்க்கவில்லை. எத்தனையோ மொழிகள் இருக்கின்றன; அது மாதிரி அவை ஒரு மொழியாக மட்டுமே இருந்தால், நமக்கு அதைப்பற்றி கவலையே இல்லை. எதையும் திணிப்பதுதான் தவறு! மொழி மட்டுமல்ல, ‘எந்தக் கருத்தையும் திணிக்காதே’ என்பதுதான் –  அறிவுப் பூர்வமான, அறிவுச் சுதந்திரம் கொடுக்கக்கூடிய இயக்கமான சுயமரியாதை இயக்கம்’ என்றார் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents

‘‘அறியப்படாத மொழி இயக்கங்களும் மொழிப் போராட்டங்களும்” புத்தகம் வெளியீட்டு விழா!

பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில், சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் கடந்த 29.01.2026 அன்று மாலை 6 மணியளவில், கலைமாமணி முனைவர் மருத்துவர் தஞ்சை சு.நரேந்திரன் எழுதிய, ‘‘அறியப்படாத மொழி இயக்கங்களும் மொழிப் போராட்டங்களும்” புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புத்தகத்தை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

இன்றைக்குப் பிரான்ஸ் நாட்டிடமோ, இன்னொரு நாட்டிடமோ அல்லது வெளிநாட்டிடமோ தான் போர் ஆயுதங்களை வாங்க வேண்டி இருக்கிறது. அந்த ஆயுதங்கள், ஏவுகணைகள் எப்படி, எங்கிருந்து வரும் என்று சொல்ல முடியாத அளவுக்கு இன்றைக்கு இருக்கிறது. கண்ணுக்குத் தெரிந்து நடக்கக்கூடிய உத்தரவு எல்லாம் மாறிவிட்டது. கண்ணுக்குத் தெரி யாமல் ஒரு சிறிய அறைக்குள் இருந்து கொண்டே உலக யுத்தத்தை நடத்தி விடலாம் என்று சொல்லக்கூடிய அளவிற்கெல்லாம் வேகமாகப் போய்க்கொண்டி ருக்கிறது.

புத்தகத்தை வெளியிடுவதில்
எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

ஆகவே அப்படிப்பட்ட ஓர் அறிவியல் ரீதியான பார்வையில், இந்தப் போராட்டங்கள் ஏன் என்னும்போது, அதற்கு நிறைய செய்திகளை மருத்துவர் சொல்கின்றார். அவர் மேல், தனி மரியாதை வைத்திருக்கின்றவன் நான். அவருக்கு நான் கடமைப்பட்டவன், கடன்பட்டவன். அந்த முறையிலும் அவருக்கு நன்றி செலுத்தக்கூடிய அளவிற்கு இந்தப் புத்தகத்தை வெளியிடுவதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

இந்நூலாசிரியரிடம்
தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி!

அதையும் தாண்டி, ‘அறியப்படாத’ என்று சொல்கிறார் பாருங்கள், இதுதான்  மிக முக்கியமான தலைப்பு. டாக்டர் நரேந்திரன் அவர்கள், எந்தக் கட்டுரை எழுதினாலும், நல்ல கவனிக்கவேண்டும், கட்டுரைகளை செய்தித் தாள்கள், ஏடுகளில் எழுதினாலும், காக்கைச்சிறகினில் எழுதியிருப்பார்; அதே மாதிரி, ‘உங்கள் நூலகத்தில்’ எழுதி இருப்பார். ‘தீக்கதிர்’ நாளேட்டில் எழுதியிருப்பார்; ‘விடுதலை’யில்  எழுதி  இருப்பார். எனக்கு மிகவும் வியப்பான ஒரு செய்தி,  அவருடைய மருத்துவத்தைத் தெரிந்து கொள்வதை விட, அவருடைய சிகிச்சை முறையைத் தெரிந்து கொள்வதை விட, அவரிடம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி, நான் மட்டுமல்ல, இந்த அவையினர்… பேசிக் கொண்டிருப்பதை இங்கே இருந்து கேட்பவர்கள் மட்டும் அவையினர் அல்ல; கேட்பாளர்கள் உலகம் முழுவதும் இருந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டிய செய்தி, அவர் தன்னுடைய நேரத்தை பயனுள்ள முறையில் எப்படிச் செலவழிக்கிறார் என்பது  பெரிய வியப்புக்குரிய ஒரு செய்தி. எல்லோருக்கும் 24 மணி நேரம்தான்; டாக்டருக்கும் 24 மணிநேரம்தான். அதில் அவர், மருத்துவப் பயனாளிகளுக்கும், அவரு டைய பணியை, தொண்டைச் செய்கிறார். அதை முறைப்படி திட்டமிட்டு, எத்தனை மணிக்கு வந்து உட்காருவார், எத்தனை மணிக்கு அவரைச்  சந்திக்கலாம், மருத்துவப் பயனாளிகளுக்கு என்னென்ன சொல்கிறார்; அறுவைச் சிகிச்சையைப்பற்றி என்ன சொல்கிறார், என்ன அறிவுரை சொல்கிறார்  அதற்கெல்லாம் நேரம் ஒதுக்கி நடந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் அவர்,  எப்படி நேரத்தை ஒதுக்கி, இவ்வளவு எழுதுகிறார், இவ்வளவு படிக்கிறார் என்பதை நினைத்தால் எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது.

பெரியார் திடலுக்கு ஒரு பழக்கம் உண்டு!

அவரைப் பாராட்டுகிற இந்த நேரத்தில், நாம் எல்லோரும் ஆண்களையே பாராட்டிப் பழக்கப்பட்ட இடத்தில், பெரியார் திடலுக்கு ஒரு பழக்கம் உண்டு; அது மகளிரையும் சேர்த்து, அவர்களுக்குதான் முதலிடம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு, டாக்டர் அவர்களுடைய வாழ்விணையரை அழைத்து, நாம் பாராட்டுவதற்குக் காரணம் என்னவென்றால், அவர்கள்தான் இதற்கு அடிப்படை. அவருடைய முழு ஒத்துழைப்பு இருந்தாலொழிய, இவர் இவ்வ ளவு பெரிய பணிகளைச் செய்திருக்க முடியாது. அதனால், அவர்களைத்தான் நாம் முதலில் பாராட்டு வேண்டும். அவருக்குத்தான் எல்லோரும் நன்றியைச் சொல்லவேண்டும்.

‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ நிறுவனத்தைப் பாராட்டுகிறோம்!

எவ்வளவு நுண்ணிய செய்திகள்; அதுவும் ‘குடிஅரசு’ இதழில் எப்பொழுது எழுதப்பட்டது? ‘விடுதலை’யில் எந்த ஆண்டு எழுதப்பட்டது? பழைய நூல்களையெல்லாம் எடுத்து,  ஓலைச்சுவடிகள் உள்பட எடுத்துக் குறிப்பிட்டுக் காட்டி, எழுதியிருக்கிறார். அவர் எப்படிக் கண்டுபிடிப்பார் என்று தெரியாது. முழுக்க முழுக்க இயக்கக் குடும்பம், பகுத்தறிவுக் குடும்பம், சுயமரியாதைக் குடும்பம், அவருடைய சகோதரர் உள்பட எல்லாரும் எங்களுக்கு அறிமுகமானவர்கள். நேரத்தை அழகாக அவர் பயன்படுத்துகிறார். முதலில், டாக்டரிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டியது, கற்றுக்கொள்ள வேண்டியது – மருத்துவ சிந்தனை யைவிட இந்தப் பணிகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். இப்புத்தகத்தில் எழுதி இருக்கிற பல கருத்துகள் சிறப்பானவையாகும். இந்தப் புத்தகம் வெளிவரக் காரணமான ‘நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்’ நிறுவனத்தைப் பாராட்டுகிறோம்.

அவர்களே என்ன நினைத்தார்கள், பெரியார் திடலில், ஒரு சிறிய அரங்கத்தில் தானே கூட்டம்; எந்த அளவிற்குப் புத்தகம் விற்கும்? என்று நினைத்துக் கொண்டு வந்தார்கள். ஆனால், அவர்கள் கொண்டு வந்த புத்தகம் முழுவதும் தீர்ந்து போயிற்று. இன்னும் வாங்க வேண்டியவர்கள் இருக்கிறார்கள். ஆகவே, இங்கே வந்திருக்கின்ற கூட்டம் எப்படிப்பட்ட கூட்டம்? எப்படிப்பட்ட அவையினர்? என்பதை உலகிற்கு, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய ஒரு செய்தியாகும்.

 ‘‘நான் ஒரு பூரண பகுத்தறிவுவாதி’’
– தந்தை பெரியார்!

தன்னைப் பற்றி தந்தை பெரியார் அவர்கள்  சொல்லுகிற போது, ‘‘நான் ஒரு பூரண பகுத்தறிவுவாதி’’ என்று சொல்வார். அதுதான் அவருடைய அறிமுகம். நான் சில கூட்டங்களில் சொல்லி இருக்கேன்; ஒரு பகுத்தறிவுவாதி, முழு பகுத்தறிவுவாதி.

ஒப்பற்ற சுய சிந்தனையாளரான தந்தை பெரியார் அவர்கள்  எப்படி ஒரு மொழிக்கு எதிரியாக இருக்க முடியும்? மொழி என்பதற்காக, சமஸ்கிருதத்தையோ, ஹிந்தியையோ அவர் எதிர்க்கவில்லை. எத்தனையோ மொழிகள் இருக்கின்றன; அது மாதிரி அவை ஒரு மொழியாக மட்டுமே  இருந்தால், நமக்கு அதைப்பற்றி கவலையே இல்லை. எதையும் திணிப்பதுதான் தவறு! மொழி மட்டுமல்ல, ‘எந்தக் கருத்தையும் திணிக்காதே’ என்பதுதான் –  அறிவுப் பூர்வமான, அறிவுச் சுதந்திரம் கொடுக்கக்கூடிய இயக்கமான சுயமரியாதை இயக்கம். அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள், தன்னுடைய பேச்சைத் தொடங்கும் போதும்,  ‘‘நான் சொல்கிறேன் என்பதற்காக நம்பாதீர்கள்’’ என்பார். பேச்சை முடிக்கும்போது, ‘‘நான் சொல்வதை அப்படியே ஏற்கவேண்டும் என்பது கட்டாயம் இல்லை’’ என்பார்.

அறிவுச் சுதந்திர இயக்கம்!

சுயமரியாதை இயக்கத்திற்கு வேறு பெயர் வைக்கவேண்டும் என்று சொன்னால், ‘‘நான் சொல்லு வேன், இது ஓர் அறிவுச் சுதந்திர இயக்கம்’’ என்று. நீங்கள் கேட்கவேண்டும், நம்பவேண்டும் என்கிற அவசியம் இல்லை. அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும் என்கிற அவசியம் இல்லை என்று சொல்லி, அறிவுக்குச் சுதந்திரம் கொடுக்கிறார். ஆனால், அறிவுக்குச் சுதந்திரம் கொடுக்காதே, ‘‘நம்பு, நம்பு, நம்பு’’ என்று வரும்போது, வெறுப்பை உண்டாக்குவதற்குக் கூட  அதை ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள்.

சமஸ்கிருதம் என்று சொல்லும்போது, ஆரம்பத்திலி ருந்து உண்மைக்கும், அதற்கும் சம்பந்தமே கிடையாது. எல்லா மொழிகளுக்கும் மூத்த மொழி என்று சொல்கி றார்கள். இந்த மொழிக்கு முன்  பிராகிருதம் இருந்தது என்று சொன்னார் பேராசிரியர் சுப.வீ. அவர்கள். அத னால்தான் அவர் பேராசிரியர். நாங்கள் எல்லாம் ஆசிரியர்தான்.

சமஸ்கிருதத்திற்கு என்ன பொருள்?  தமிழ் என்றால், இனிமை என்று சொல்கிறோம்.

‘‘இமாலயப் புரட்டு!’’

சமஸ்கிருதம் என்றால் என்ன பொருள் என்றால், ‘‘நன்றாக சமைக்கப்பட்டது’’ என்று பொருள். பெரியார் அவர்கள்,  ‘‘இமாலயப் புரட்டு’’ என்ற தலைப்பில்  ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். பெரியாருடைய சிந்தனை எவ்வளவு ஆழமானது,  மறுக்க முடியாதது ஆணித்தரமானதாகும்.

ஒன்றாகச் சேர்த்து ‘சமைக்கப்பட்டது, சீரமைக்கப் பட்டது.’ ‘சீரமைக்கப்பட்டது’ என்றாலே, அதற்கு முன் வேறொரு அமைப்பு இருந்திருக்கிறது. அதைத்தானே சீரமைக்க முடியும். ஆனால், அதுபோன்ற வரலாறு தமிழ் மொழிக்குக் கிடையாது. அது மட்டுமல்ல, பெரியார்  சமஸ்கிருதம் என்பதற்காக எதிர்க்கவில்லை. ஹிந்தி என்பதற்காக எப்படி நாம் எதிர்க்கவில்லை என்று சொல்கிறோமோ,  அப்படி! சமஸ்கிருதம் என்பது மூலம்; அதனால் தனியே ஹிந்தியைச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. ஒரு பண்பாட்டுத் திணிப்பு இன்றைக்கு வருகிறது. எனவே, அறியப்படாத மொழி இயக்கங்கள், மொழி போராட்டங்கள் என்பதை மிகச் சுருக்கமாக, ‘‘அறியப்படாத பண்பாட்டுப் படையெடுப்பு எதிர்ப்புப் போராட்டங்கள்’’ எனலாம். பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்க்கக்கூடியது என்ற அளவில் வருகிறது. அதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டுச் சொல்ல வேண்டுமானால் நண்பர்களே, பெரியார், மொழியை ஒரு கருவியாக பார்க்க வேண்டும் என்று சொன்னார். அந்தக் கருவி போர்கருவியாக இருக்கவேண்டும் என்று சொன்னார்.

வேதமே, பேதத்தை அடிப்படையாகக் கொண்டதுதான்!

ஏற்கெனவே இருப்பதில் பேதம் இருக்கிறது. பேதம் உள்ள ஒரு சமுதாயத்தை மாற்ற வேண்டும். மொழி என்பதில் கருத்துகள் பரிமாறுவதற்காக இருந்தாலும்கூட, பேதமுள்ள ஒரு நிலையை மாற்றவேண்டும். சமஸ்கி ருதமே பேதத்தை அடிப்படையாகக் கொண்டது. எல்லோரும் சொல்லுவார்கள், ‘‘வேதத்தை அடிப்படையாகக் கொண்டது’’ என்று. வேதமே, பேதத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். அதைக் கொண்டதுதான் சமஸ்கிருதம். அதற்கு உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன்.

நான் சொல்வது முழுவதும் பெரியார் சிந்தனைதான். சமஸ்கிருத மொழியைச் சொல்லும்போதே, அந்த மொழிக்கு ஒரு பெரிய பெருமையை உண்டாக்க வேண்டும் என்று நினைத்தது மட்டுமல்லாமல், மற்றவர்களைத் தாழ்த்தினால்தான் தமக்குப் பெருமை நினைத்தார்கள். அப்போது என்ன சொன்னார்கள் என்றால், சமஸ்கிருதம் ‘தேவ பாஷை!’ அப்ப மற்ற பாஷைகள்? தமிழ் எல்லாம் நீச பாஷை, மிலேச்ச பாஷை என்று  ஒரு கோடு போட்டார்கள்.  இங்கிலீைஷப் புறக்கணிக்கிறோம் என்கிற ஆர்வலர்கள் இருக்கிறார்களே, அவர்களிடம் கேட்கிறோம்,  200 ஆண்டுகளாக ஆங்கில ஆதிக்கம்  வந்துவிட்டது என்பதற்கான விளக்கங்களை அழகாக சொல்லிவிட்டார் நம்முடைய சுபவீ அவர்கள். ஆங்கி லத்தைப் பற்றி எல்லாம் சொல்லும்போது, இதனால் நமக்கு பேதம் ஏற்பட்டதா? சமத்துவம் ஏற்பட்டதா? இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். 200 ஆண்டு களுக்கு முன்னால் வந்த ஆங்கிலத்தால், நமக்குப் பேதம் ஏற்பட்டதா? அல்லது சமத்துவ உணர்வு ஏற்பட்டதா?

தமிழில் பேசினால் தீட்டாம்!

சமஸ்கிருதம் என்றால் என்னவென்றால், அந்த மொழியிலேயே, ‘இது புனித மொழி’, இதைப் பேச வேண்டும் என்றால், குறிப்பிட்ட நேரத்தில் தான் பேச வேண்டும். தவம், மந்திரங்கள் இவற்றையெல்லாம் ஓதிவிட்டு, சங்கராச்சாரியார் இருக்கிறார் என்றால், அதற்குப் பிறகு தமிழில் பேசினால் தீட்டு! பிறமொழியில் பேசினால் தீட்டு! அது மட்டுமல்ல, பேசக்கூடாது, தீட்டாயிடும்.

ஆகவே, மந்திரங்கள் சொல்லியாகிவிட்டது; அதுதான் கடவுளிடம் பேசுவது; கடவுள்கிட்டே போகும்போது, ‘புனித’ மான செயல்களைச் செய்யும் போதெல்லாம், தமிழ் மொழி அதற்குப் பயன்படாது என்று சொல்லி, சமத்துவத்திற்கு எதிரான ஒரு அசமத்துவம், பேதம் என்பதை நிலைநாட்டக்கூடிய அளவில் வருவதால் தான், இது மொழியை வைத்து கொண்டிருக்கக்கூடிய பண்பாட்டுப் படையெடுப்பு என்று தந்தை பெரியார் சொன்னார்.

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *