சென்னை, பிப். 7- தமிழ்நாடு சுகாதாரம், ஊரக வளர்ச்சித் துறை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.1,876 கோடி மதிப்புள்ள கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று (6.2.2026) திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சுகாதாரத் துறை சார்பில் ரூ.348.59 கோடியில், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் கட்டடங்கள், நுண்ணுயிரியல் ஆய்வுக்கூடங்கள், இந்திய மற்றும் ஓமியோபதி பிரிவுக் கட்டடங்கள், நகர்ப்புற, கிராமப்புற மற்றும் பல்வேறு சுகாதார நிலையக் கட்டடங்களை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (6.2.2026) திறந்து வைத்தார்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.42.40 கோடியில் கட்டப்பட்டுள்ள 6 சமத்துவபுரங்கள், நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டி முதல் கெடமலை வரை ரூ.34.12 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சாலை, ரூ.212.86 கோடியில் கட்டப்பட்ட அலுவலக கட்டடங்கள், பாலங்கள், அங்கன்வாடி கட்டடங்கள், பள்ளிக் கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள், பொது விநியோகக் கடைகள் என மொத்தம் ரூ.289.38 கோடியில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின், அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், சென்னையில் மீனவர் குடியிருப்புத் திட்டப் பகுதியில் ரூ.75.22 கோடியில் 520, செனாய் நகர் பழைய பேருந்து நிலைய திட்டப் பகுதியில் ரூ.67.87 கோடியில் 396, செனாய் நகர் நீச்சல் குளம் திட்டப் பகுதியில் ரூ.41.84 கோடியில் 280, நீச்சல்குளம் பகுதி – 2 திட்டப் பகுதியில் ரூ.8.34 கோடியில் 56, மீனாம்பாள் சிவராஜ் நகர் திட்டப் பகுதியில் ரூ.42.54 கோடியில் 240, மணலி புதுநகர் பகுதி – 7 திட்டப் பகுதியில் ரூ.30.46 கோடியில் 200 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (6.2.2026) திறந்து வைத்தார்.
புதிய குடியிருப்புகள்
மேலும், திருவள்ளூர், திருநெல்வேலி, சிவகங்கை, சேலம், தேனி, ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள திட்டப் பகுதிகள் என 19 திட்டப் பகுதிகளில் ரூ.1,238.19 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 9,696 குடியிருப்புகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மேலும் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில், கடல் பல்லுயிர் பாதுகாப்பில் ஒரு முக்கிய மைல்கல்லாக சென்னை கிண்டியில் ரூ.14.50 கோடியில் அமைக்கப்பட உள்ள தமிழ்நாட்டின் முதல் கடல் ஆமை பாதுகாப்பு மய்யத்துக்கு அடிக்கல் நாட்டி, மாநிலத்துக்கான நகர்ப்புற பசுமையாக்கல் கொள்கை 2026-யும் வெளியிட்டார்.
உலகின் 6 கடல் ஆமை இனங்களில், 5 இனங்கள் இருக்கும் இந்தியாவின் ஒரே மாநிலம் தமிழ்நாடு. அழிந்து வரும் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் கூடு கட்டும் வாழ்விடங்களில் மிக முக்கியமான ஒன்று தமிழ்நாடு கடற்கரை பகுதிகளாகும்
கடல் ஆமை பாதுகாப்பு மய்யம்
இதை உணர்ந்து, கடல் ஆமை பாதுகாப்புக்கு வளர்ந்து வரும் அறிவியல் மற்றும் செயல்பாட்டு சிக்கலை நிவர்த்தி செய்ய, உலக வங்கியுடன் இணைந்து தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் (TN-SHORE) திட்டத்தின் கீழ், சென்னை கிண்டியில் ரூ.14.50 கோடியில் கடல் ஆமை பாதுகாப்பு மய்யம் அமைக்கப்படுகிறது.
தவிர நேற்று (6.2.2026) வெளியிடப்பட்ட தமிழ்நாடு மாநிலத்துக்கான நகர்ப்புற பசுமையாக்கல் கொள்கை 2026, நகர வளர்ச்சியில் சூழலியல் அம்சங்கள் அடங்கி இருப்பதை உறுதி செய்யும் அரசின் முடிவை வலுப்படுத்துவதுடன், பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் மாநில அளவிலான பசுமை முயற்சிகளை மேலும் உறுதிப்படுத்துகிறது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், வளர்ச்சி ஆணையங்கள் மற்றும் தொடர்புடைய துறைகள் படிப்படியாக நகர்ப்புற பசுமை பரப்பளவை (Green Cover) அதிகரித்து, பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ற சூழலியலுக்கான கொள்கை வழிகாட்டியாக அமையும்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அய்.பெரியசாமி, தா.மோ.அன்பரசன், ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
