புதுடில்லி, பிப்.7 ‘‘டிஜிட்டல் மோசடி களில் பணத்தை இழப்பவர் களுக்கு, வங்கி மூலம் ரூ.25,000 இழப் பீடு வழங்கப்படும்’’ என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.
டிஜிட்டல் மோசடி
கடந்த 4-ஆம் தேதி தொடங்கி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழுக் கூட்டம் மும்பையில் 3 நாட்கள் நடந்தது. இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா மும்பையில் நேற்று (6.2.2026) செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2025-ஆம் ஆண்டு நாடு முழுவதும் நடைபெற்ற டிஜிட்டல் மோசடிகளில் சுமார் ரூ.20,000 கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த மோசடிகளால் சுமார் 21 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 2017-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிகளின்படி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் ஏற்படும் இழப்புகளுக்கு வாடிக்கையாளரே பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக டிஜிட்டல் மோசடிகளால் பாதிக்கப்படும் நபர்களுக்கு இழப்பீடு கிடைப்பது இல்லை. இந்தச் சூழலில் டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்க விரைவில் 3 வரைவுக் கொள்கைகள் வெளி யிடப்படும். இதுதொடர்பாக பொதுமக்கள் மற்றும் வங்கித் துறை சார்ந்த நிபுணர்களின் கருத்துகள் கேட்டறியப்படும்.
ரூ.25 ஆயிரம் இழப்பீடு
முதல் வரைவு கொள்கையில், டிஜிட்டல் மோசடிகளால் பாதிக்கப் படும் நபர்களுக்கு இழப்பீடு கிடைக்க வழிவகை செய்யப்படும். டிஜிட்டல் மோசடிகளில் பணத்தை இழக்கும் நபருக்கு சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகம் சார்பில் அதிகபட்சமாக ரூ.25,000 இழப்பீடு வழங்கப்படும்.
முதியோர் பணம்: டிஜிட்டல் மோசடிகளில் பெரும்பாலும் மூத்த குடிமக்களே அதிகம் பாதிக்கப் படுகின்றனர். இதை தடுக்க முதி யோர் மேற்கொள்ளும் டிஜிட்டல் பரி வர்த்தனைகளில் பணப் பரிமாற்றம் தாமதமாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டாவது வரைவு கொள்கையில், டிஜிட்டல் மோசடிகளை தடுக்கக் கடுமையான விதிமுறைகள் வரையறுக்கப்படும்.
மூன்றாவது வரைவு கொள்கையில், வாடிக்கையாளர்களிடம் இருந்து கடனை நியாயமான முறையில் வசூலிக்க விதிகள் உருவாக்கப்படும். குறிப்பாக 3-ஆம் தரப்பு மூலம் கடன் தொகையை வசூலிக்கும் நடவடிக்கை ஒழுங்குபடுத்தப்படும்.
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகளை மேம்படுத்த சஹகாரி வங்கி கஷம்தா நிர்மான் என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்படி 1.4 லட்சம் கூட்டுறவு வங்கிகளின் ஊழியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். குறிப்பாக வங்கி நிர்வாகம், தொழில்நுட்பம் சார்ந்து ஊழியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.
இதன்மூலம் நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் மேம் படுத்தப்படும். கூட்டுறவு வங்கிகள் வழங்கும் தனிநபர் கடன்களின் வரம்பை அதிகரிக்க பரிந்துரை செய்கிறோம். இவ்வாறு ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.
