புதுக்கோட்டை, பிப். 6–- புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் செயற்குழு – பொதுக்குழு கூட்டம் அரசு அலுவலர் கட்டடத்தில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்டத் தலைவர் ராஜாங்கம் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் முத்துக்குமார் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில சட்ட ஆலோசகர் ராஜா, மாநில செய்தி தொடர்பாளர் ரகமதுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இச்செயற்குழு – பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர் பெருமக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
பிப்ரவரி 8இல் ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெறும் முதலமைச்சருக்கு நன்றி அறிவிப்பு மாநாட்டில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் அனைத்து மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் குடும்பத்தோடு கலந்து கொள்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2004 முதல் 2006 – தொகுப்பூதிய காலத்தை பணிக் காலமாக அறிவிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உயர்கல்விக்கு ஊக்க ஊதியத்தை பழைய முறைப்படி வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பழனிச்சாமி, ரவீந்திரன், வீரமணி, முருகராஜ், வெள்ளைச்சாமி, உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவாக கல்வி மாவட்ட செயலாளர் முனைவர் ஆ. கலையரசன் நன்றி கூறினார்.
