காஞ்சிபுரம், பிப்.5 காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை யில் நேற்று (4.2.2026) செய்தியாளர்களிடம் தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை கூறியதாவது: தமிழ் நாட்டில் ‘இந்தியா’ கூட்டணி வலிமையாக இருப்பதால், தமிழ்நாடு மக்கள் தங்கள் பக்கம் திரும்ப மாட்டார்கள் என்பதை பாஜக அரசு உணர்ந்துள்ளது. அதன் காரணமாகவே, ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்தவித அறிவிப்புகளையும் வெளியிடாமல் வஞ்சித்துள்ளனர்.
கடந்த 12 ஆண்டுகளாக தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதையே பாஜக வழக்கமாக வைத்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ‘தமிழ்நாடு முதலமைச்சரே விசில் சின்னத்திற்குத் தான் வாக்களிப்பார்’ எனக் கூறியிருகிறார். கற்பனைக்கு எட்டாத அளவிற்கு ஒருவர் பேசினால் அதற்கு என்ன பதில் சொல்ல முடியும்?
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ‘இந்தியா கூட்டணி சிதறும்’ என்கிறார். உண்மையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் வலிமையை இழந்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. டி.டி.வி.தினகரன் பாஜகவுடன் கூட்டணி வைத்தவுடன், அவரோடு இருந்தவர்கள் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்குச் சென்றுவிட்டனர். எங்கள் கூட்டணியில் இருப்பவர்கள் யாரும் விலகவில்லை.
ராமதாஸ் தலைமையிலான பாமக உள்ளிட்ட புதிய கட்சிகளை இந்தியா கூட்டணியில் சேர்ப்பது குறித்து தமிழ்நாட்டில் கூட்டணிக்குத் தலைமை ஏற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் முடிவு செய்வார். பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கட்சியின் தேர்தல் பொறுப்பில் இருந்து விலகி இருப்பதற்கு மக்கள் மீதான பயம் தான் காரணம் என்றார்.
நாடாளுமன்றத்தில்
ராகுல்காந்தி பேச அனுமதி மறுப்பதா?
சரத்பவார் கண்டனம்
பாராமதி, பிப்.5 மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது கடந்த 2.2.2026 அன்று விவாதம் நடை பெற்றது.
அப்போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவனேவின் வெளியிடப்படாத “நினைவுக் குறிப்புகளில்” இருந்து மேற்கோள் காட்ட முயன்றார். அதற்கு ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் (பவார்) தலைவர் சரத் பவார் பாராமதியில் செய்தியாளர்களி டம் நேற்று (4.2.2026) கூறும்போது, “பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, லடாக் எல்லையில் சீன ராணுவம் ஊடுருவியது குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச முயன்றார்.
அப்போது, முன்னாள் ராணுவ தளபதி எம்.எம். நரவனேவின் வெளியிடப்படாத “நினைவுக் குறிப்புகளில்” இருந்து மேற்கோள் காட்ட முயன்றார். ஆனால் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அந்தப் புத்தகம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், ராகுல் காந்தி அதன் நகலை வைத்திருந்தார். எனவே அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்” என்றார்.
