திருப்பதி, பிப்.4 ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற கலப்பட நெய் விவகாரம் தற்போது பேருரு எடுத்துள்ளது. இதில் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க விசாரணை ஆணையத்தை அமைக்க ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கலப்பட நெய்
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் கலப்பட நெய் உபயோகப்படுத்தி, பிரசாதம் தயாரிக்கப்பட்டதாக 2024 இல் சந்திரபாபு ஆட்சிக்கு வந்ததும் பகிரங்கமாக அறிவித்தார். ஜெகன் மோகன் ஆட்சி காலத்தில் நடந்த இந்த மாபெரும் குற்றத்தைக் கண்டுபிடிக்க முதலில் ஆந்திர அரசு சிறப்புப் புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்தது.
ஆனால், இக்குழு பாரபட்சமாக விசாரணை நடத்தும் என்பதால் சிபிஅய் விசாரணை தேவை என ஒய்.எஸ். ஆர் காங்கிரசார் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து சிபிஅய் அதிகாரிகள் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு, இதுவரை 14 பேரைக் கைது செய்துள்ளது. இவர்கள் அனைவரும் நெல்லூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு மற்றும் சிபிஅய் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதில் பல்வேறு பால் உற்பத்தி நிறுவ னத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். மேலும், ஏ-34 குற்றவாளியாகத் திருப்பதி தேவஸ்தான அதிகாரி யான விஜய பாஸ்கர் கைது செய்யப்பட்டார்.அப்போது அவர் புலனாய்வுக் குழுவுக்குக் கொடுத்த வாக்குமூலத்தில், “கலப்படம் செய்த நெய்யைப் பரிசோதனை செய்ததும் அதில் கலப்படம் உள்ளது என்பதை அறிந்தேன். இதனை அந்தந்த நிறுவனங்களுக்கு எடுத்துக் கூறி னேன். ஆனால், அவர்கள் எனக்கு லஞ்சம் கொடுத்து நெய்யைத் தொடர்ச்சியாக விநியோகம் செய்து வந்தனர். இதன் மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.118 கோடி இழப்பீடு ஏற்பட்டது. 2023 இல் போலே பாபா நெய் நிறுவனத்தில் இருந்து ரூ.75 லட்சமும், பிரீமியர் நிறுவனத்தில் இருந்து ரூ.8 லட்சமும் லஞ்சமாக வாங்கினேன்’’ என வாக்குமூலம் அளித்தார். இதைத் தொடர்ந்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
விசாரணை ஆணையம்
இதனிடையே, தேவஸ்தான நிர்வாக அதிகாரியாக இருந்த அனில் குமார் சிங்காலை ஆந்திர அரசு அப்பதவியில் இருந்து நீக்கி, அவருக்குப் பதிலாக மூத்த அய்ஏஎஸ் அதிகாரி ரவிச்சந்திராவை நியமனம் செய்துள்ளது. ஆனால், ஜவகர் ரெட்டி, தர்மா ஆகியோர் மீது ஆந்திர அரசு எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரை எடுக்கவில்லை.
மேலும், அப்போதைய அறங்காவலர் குழுக்கள் மீது எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை இல்லை. இது தற்போது ஆந்திர அரசியலில் பெரும் அரசியல் புயலை வீசத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், நேற்று (3.2.2026) அமராவதியில் முத லமைச்சர் சந்திரபாபு தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் குழுவில், கலப்பட நெய் விவகாரம் குறித்துச் சரிவரப் புலனாய்வு விசா ரணை நடக்கவில்லை என்பதால், உண்மையான குற்றவாளி யார் என விசாரிக்க விரைவில் விசாரணை ஆணையம் அமைக்க ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதையடுத்து, ஆந்திர அரசியலில் ‘கலப்பட நெய்’ விவகாரம் மீண்டும் பேருரு எடுத்துள்ளது. இதன் மூலம் பல பெரிய ‘தலைகள்’ சிக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
