சென்னை, பிப். 2– ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கான முக்கியத் திட்டங்கள் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது என்று தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஒன்றிய நிதிநிலை அறிக்கை தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டிற்க்கான சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இந்த ஆண்டாவது ஒன்றிய பாஜக அரசின் கண்களுக்கு தமிழ்நாடு தெரியும்.
அவர்களது காதுகளில் நமது உரிமைக் குரல் விழும் என்று எதிர்பார்த்திருந்தோம். அந்த எதிர்பார்ப்பை பொய்க்கச் செய்து, ஏமாற்றத்தை வழங்கியிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.
ஒன்றிய நிதி அமைச்சர், நாடாளு மன்றத்தில் சமர்ப்பித்த 2026-2027ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டின் நலன் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதோடு, ஏழைகள்- பெண்கள்- விவசாயிகள்- விளிம்பு நிலை மக்கள் என எந்த பிரிவினருக்கும் நன்மை பயக்கும் முக்கிய திட்டங்கள் இதில் இடம்பெறவில்லை.
ஏமாற்றம் தருகிறது
மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு முறையில், தமிழ்நாடு உள்ளிட்ட வளர்ச்சியடைந்த மாநிலங்களை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக் கணித்து வருகிறது என்ற கருத்தை, நாம் வலுவாக முன்வைத்து வருகிறோம். மொத்த வரி வருவாயில் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் பங்கு 41 விழுக்காட்டிலிருந்து 50 விழுக்காடாக உயர்த்தப்பட வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் கோரிக்கை இம்முறையும் புறக்கணிக்கப்பட்டு, மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு தொடர்ந்து 41 விழுக்காடு என்ற அளவிலேயே தொடரும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றத்தையே தருகிறது.
இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டின் நலன் குறித்த திட்டங்கள் இடம்பெறும் என்று நாம் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த வேளையில், புதிய திட்டங்கள் ஏதும் இடம்பெறவில்லை. மும்மொழி கொள்கையை கடைப்பிடிக்காததன் காரணமாக அனைவருக்கும் கல்வி திட்டத்துக்கான ரூ.3,548 கோடி, ஜல் ஜீவன் திட்டத்தை நாட்டிலேயே நாம் சிறப்பாக செயல்படுத்திய போதிலும் ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்காத நிதி ரூ.3,112 கோடி நிதி குறித்து எந்த அறிவிப்பும் இல்லை.
இதுமட்டுமின்றி தமிழ்நாட்டிற்கென புதிய திட்டங்கள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை என்பது தமிழ்நாட்டை ஒன்றிய அரசு தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருகிறது என்பதை வெட்டவெளிச்சமாக்கி இருக்கிறது. வழக்கமாக ஒன்றிய நிதியமைச்சர் வழங்கும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறும் திருக்குறளும் இந்த முறை இடம்பெறவில்லை. தமிழ்நாட்டிறகான எந்த முக்கிய திட்டங்களும் இடம்பெறவில்லை. மொத்தத்தில் ஏமாற்றம். ஏமாற்றம். ஏமாற்றம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு: ஒன்றிய நிதிநிலை அறிக்கை தமிழ்நாடு மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மாநிலத்தின் அடிப்படை வளர்ச்சிக்கான தேவைகள், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், தொழில்துறை முதலீடு போன்ற முக்கிய துறைகளுக்கு தெளிவான அறிவிப்புகள் இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும் தமிழ்நாடுக்கு உரிய பங்கீடு வழங்கப்படவில்லை. இது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை முற்றிலும் புறக்கணித்த நிதிநிலை அறிக்கையாகும்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி: தமிழ்நாட்டின் அடிப்படை வளங்களை சுரண்டும் நிதிநிலை அறிக்கை. தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கான திட்டங்களும் இல்லை, திருக்குறளும் இல்லை. தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது, சிறு, குறு தொழில்களுக்கு ஊக்கம் அளிப்பது தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லை. உருப்படியான திட்டங்கள், நிதி ஒதுக்கீடு இல்லாத மக்கள் விரோத நிதிநிலை அறிக்கை.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்: விவசாயிகள், அடித்தட்டு உழைக்கும் மக்களின் நலன்கள் புறக்கணிக்கப்பட்டு, பெருநிறுவனங்களுக்கு சாதகமான நிதிநிலை அறிக்கையாக ஏமாற்றம் அளிக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்: இந்த நிதிநிலை அறிக்கை, எரியும் பொருளாதார பிரச்சினைகள் எதற்குமே தீர்வு காண்பதாக அமையவில்லை. எளிய நடுத்தர மக்களின் நலனுக்கோ, சிறு தொழில்களை நெருக்கடியிலிருந்து மீட்கவோ, கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்கோ இந்த நிதிநிலை அறிக்கை உருப்படியான முன்மொழிவுகள் எதையும் உள்ளடக்கியதாக இல்லை. எந்த வகையிலும் தேசத்தின் நலனுக்கோ, மக்களின் வாழ்வுக்கோ, தமிழ்நாட்டின் உரிமைக்கோ உதவாத இந்த நிதிநிலை அறிக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் பற்றிய அறிவிப்பும் இல்லை. நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடும் இல்லை.
விசிக தலைவர் திருமாவளவன்: தமிழ்நாட்டிற்கு எந்தவொரு பெரிய திட்டமும் இல்லை. தேர்தலுக்காகக்கூட எந்த அறிவிப்பும் இல்லை. தமிழ்நாட்டிற் குள்ளாக எந்த ரயில்வே திட்டமும் இல்லை.
மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன்: ‘பாட்டு ஒண்ணு பாடு தம்பி பசியக் கொஞ்சம் மறந்திருப்போம். பாரதத்தின் தலைநகரில் தேடு தேடு வேலை தேடு தம்பி’ என கவிஞர் கண்ணதாசன் பாடியிருப்பார். எந்த நிதிநிலை அறிக்கை என்றாலும் இந்த வரிகள் பொருந்தும் போலிருக்கிறது.
மனித நேய ஜனநாயகக் கட்சி தலைவர் மு.தமிமுன் அன்சாரி: இந்த நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்குதேவையான உரிய திட்டங்கள் ஏதுவும் இல்லை. மொத்தத்தில் இந்த நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்: எதிர்பார்த்த வளர்ச்சி திட்டங்கள் ஏதும் இல்லாமல் வரவு, செலவு கணக்குகள் போல சமர்ப்பிக்கப்பட்டிருக்கிற நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. கட்டுக்கடங்காமல் ஏறிக்கொண்டிருக்கிற தங்கம்,வெள்ளி விலையை குறைக்க நடவடிக்கை இல்லை.
