சென்னை.ஜன.31, ”வேதம் பேதத்தை அடிப்படையாகக் கொண்டது. சமஸ்கிருதம் வேதத்தை அடிப்படையாகக் கொண்டது. பேதத்தைச் சொல்லும் சமஸ்கிருதம் சமத்துவத்தைப் பேசும் தமிழின் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்றுதான், இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம்” என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றினார்.
பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில், சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் 29.01.2026 அன்று மாலை 6 மணியளவில், கலைமாமணி முனைவர் மருத்துவர் தஞ்சை சு.நரேந்திரன் எழுதிய, ”அறியப்படாத மொழி இயக்கங்களும் மொழிப் போராட்டங்களும்” புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றினார். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், புத்தகத்தின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு ஆய்வுரை வழங்கினார். கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார்.
215 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் வெளியீட்டு விழாவை முன்னிட்டு, 170 ரூபாய்க்குக் கிடைக்கும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது. கலந்து கொண்ட பார்வையாளர்கள் வரிசையாக வந்து உரிய தொகை கொடுத்து புத்தகத்தை கழகத் தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டனர். விற்பனைக்காக கொண்டு வந்த புத்தகங்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. புத்தகத்தின் வெளியீட்டாளர் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஆகும்.

தஞ்சை மாவட்டக் காப்பாளர் மு.அய்யனார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன். நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்று உரையாற்றினார். மாநில கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, பொருளாளர் தென் மாறன், துணைச் செயலாளர் ஜெ.ஜனார்த்தனம் ஆகியோர் முன்னிலை ஏற்று சிறப்பித்தனர். புத்தக ஆசிரியர் நிறைவாக ஏற்புரை ஆற்றினார்.
அறிவு விடுதலை இயக்கம்
கழகத் தலைவர் தனது உரையில், “மருத்துவர் தனது துறையிலும் சிறப்பாக பணியாற்றிக் கொண்டே குடிஅரசு, விடுதலை, பழைய நூல்கள், ஓலைச் சுவடிகள் உள்பட எல்லாம் படித்து இதுபோன்ற ஆய்வு நூலையும் எழுதியுள்ளது பாராட்டுக்குரியது. இந்த நேரக்கட்டுப்பாட்டை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றும், ”அவர் இந்த அளவுக்கு நேரத்தை கட்டுப்பாட்டுடன் ஒதுக்கி வேலை செய்ததற்கு அவரது வாழ்விணையரும் முக்கியமான காரணம்” என்றும் இருவரையும் பாராட்டினார். மேலும் அவர், “தந்தை பெரியார் தன்னைப் பற்றி சொல்லும் போது, ’நான் ஒரு பூரண பகுத்தறிவுவாதி’ என்று அறிமுகப்படுத்துகிறார்;.பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கும் போது, ‘இந்த இயக்கத்துக்கு வேறொரு பெயர் சொல்ல வேண்டுமானால் – இதுவொரு அறிவு விடுதலை இயக்கம் – என்றார். ஆகவே எந்த ஒன்றையும் திணிப்பதை அவர் விரும்ப மாட்டார். தான் பேசும்போது கூட, ‘நீங்கள் கேட்கணும். நம்பணும் என்று அவசியம் இல்லை’ என்றவர். அப்படிப்பட்டவர், ஏன் ஒரு மொழியை எதிர்க்க வேண்டும்?” என்று ஓர் ஆழமான கேள்வியைக் கேட்டார். தொடர்ந்து, ஹிந்தித் திணிப்பு என்பதும் மறைமுகமாக சமஸ்கிருதத் திணிப்புதான் என்பதை விவரித்து, ”இந்திய சமூகம் பேதம் உள்ளது. அதற்குக் காரணம்? வேதக் கலாச்சாரம். அந்த வேதத்தை அடிப்படையாகக் கொண்டது தான் சமஸ்கிருதம். சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழை, பேதத்தை அடிப்படையாகக் கொண்ட சமஸ்கிருதம் ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்பதற்காகத்தான், பெரியார் இந்தி மொழித் திணிப்பை எதிர்த்தார்” என்று பதில் அளித்தார். அதற்கு, ’கன்னிகாதானம்’, ’தாராமுகூர்த்தம்’ என்ற சொற்களை எடுத்துக் கொண்டு பெரியார் சொன்ன ஆழமான பண்பாட்டுப் படையெடுப்புக்கான கருத்தைச் சொல்லி, ”இந்தித் திணிப்பை எதிர்ப்பது; மொழிக்கான குரல் அல்ல; பேதத்தை எதிர்த்துப் போராடும் சமத்துவத்திற்கான குரல்!” என்று கூறி, மொழிப் போராட்டத்திற்கான நுட்பமான காரணத்தை விளக்கி, பலத்த கைதட்டல்களுக்கிடையே தனது உரையை நிறைவு செய்தார்.
இறுதியாக, பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் ஆ,வெங்கடேசன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். கிராம பிரச்சாரக்குழு மாநில அமைப்பாளர் முனைவர் க.அன்பழகன், புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் தலைவர் பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன், ஆவடி ரவீந்திரன், பெரியார் பெரும் தொண்டர்கள் கோ.தங்கமணி – தனலட்சுமி இணையர் மற்றும் இளவழகன், வழக்குரைஞர் பகுத்தறிவாளன், செங்கல்பட்டு மாவட்ட காப்பாளர் சுந்தரம், தமிழினியன், பெரியார் மாணாக்கன், பூவை செல்வி, திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம், பூவை கற்பகம், நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட்ட ஆவடி மாவட்ட துணைத் தலைவர் வை.கலையரசன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், த.மரகதமணி, வழக்குரைஞர் வேலவன், மகேஷ், உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் அரங்கம் நிறையும் அளவுக்கு வந்திருந்து, இறுதி வரையிலும் இருந்து கருத்துகளைக் கேட்டுச் சிறப்பித்தனர்.
