மும்பை, ஜன.31 தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் (என்சிபி) அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து மகாராட்டிர மாநில துணை முதலமைச்சராக அவரது துணைவியார் சுனேத்ரா பவார் இன்று பதவியேற்க உள்ளார்.
மகாராட்டிர துணை முதலமைச்ச ராக இருந்த அஜித் பவார் கடந்த 28-ஆம் தேதி விமான விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, மகா ராட்டிர அரசியலில் திடீரென ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை தொடர்ந்து, துணை முதலமைச்சர் பதவிக்கான முன்மொழிவை அவரது மனைவி சுனேத்ரா பவார் ஏற்றுக்கொண்டுள்ளார். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள சுனேத்ரா இன்று (31-ம் தேதி) மாலை 5 மணிக்கு துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருக்கு கலால், விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று என்சிபி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
துணை முதலமைச்சர்
பிப்ரவரி 7-ஆம் தேதி புனே ஜில்லா பரிஷத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சியின் செல் வாக்கை உயர்த்தும் நோக்கில் என்சிபி-யின் மூத்த தலைவர்கள் சுனேத்ரா பவாரின் பெயரை இந்த பதவிக்கு பரிந்துரைத்தனர். பவார் குடும்பத்தினரிடையே விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்ட பின்னரே, இந்த முடிவை அவர் ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.
சுனேத்ரா துணை முதலமைச்சராக பதவியேற்பதில் தங்களுக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துவிட்டதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சகன் புஜ்பால் கூறினார். இன்று (31.1.2026) நடைபெற உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சுனேத்ரா பவார் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மகாராட்டிர பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச்சில் நடக்க உள்ளதால், நிதித் துறையை தற்காலிகமாக முதலமைச்சர் பட்னாவிஸ் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். பின்னர் அது தேசிய வாத காங்கிரஸிடம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
