சென்னை, ஜன. 31- இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய நகரங்களின் பட்டியலில் சென்னை முன்னிலையில் இருக்கிறது. அண்மையில் கூட ரியல் எஸ்டேட் விற்பனையில் மற்ற நகரங்கள் எல்லாம் பின்தங்கி இருக்கும் நிலையில் சென்னை மட்டுமே வளர்ச்சியை எட்டி இருப்பதாக ஓர் அறிக்கை வெளியானது.
இதற்கு முக்கிய காரணம் சென்னையில் பல்வேறு நிறுவனங்களின் அய்டி அலுவலகங்கள் மற்றும் ஜிசிசி மய்யங்கள் தொடர்ச்சியாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக வேலை வாய்ப்புகள் பெறுகின்றன, எனவே வேலைவாய்ப்பு பெருகுவதற்கு ஏற்ப மற்ற துறைகளும் நல்ல வளர்ச்சியை காட்டி வருகின்றன. சென்னையின் வளர்ச்சிக்கு மேலும் ஒரு மகுடம் சூடக் கூடிய வகையில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
உலகின் முன்னணி திறன்பேசி (ஸ்மார்ட் போன்) விற்பனை நிறுவனமான ‘ஆப்பிள்’ தன்னுடைய நேரடி அலுவலகத்தை சென்னையில் திறக்க இருக்கிறது என்று கருதப்படுகிறது. அதாவது தன்னுடைய ஜிசிசி மய்யம் எனப்படும் திறன் மேம்பாட்டு அலுவலகத்தை சென்னையில் அமைக்க ‘ஆப்பிள்’ நிறுவனம் இடத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறது.
ஏற்கெனவே ‘ஆப்பிள்’ நிறுவனத்திற்கு தேவையான அய்போன்கள் பெரும்பாலும் சென்னை அருகே சிறீபெரும்புதூரில் இருக்கக்கூடிய ஃபாக்ஸ்கான் ஆலையிலும் ஓசூரில் இருக்கக்கூடிய டாடா நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையிலும் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு மேலும் ஒரு நற்செய்தியாக ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாட்டு அலுவலகம் சென்னையில் நிறுவப்பட இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.
சென்னை போரூரில் உள்ள டிஎல்எஃப் அய்டி பூங்காவில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 20,000 சதுர அடி பரப்பளவிலான அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்திருக்கிறதாம். இங்கே தான் ஆப்பிளின் குளோபல் கேபபிலிட்டி சென்டர் (ஜிசிசி) மய்யம் அமைக்கப்படும் என சொல்லப்படுகிறது. பெங்களூர் மற்றும் அய்தராபாத் ஆகிய நகரங்களில் ஏற்கெனவே ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய அலுவலகத்தை நிறுவியிருக்கிறது. அடுத்ததாக தற்போது சென்னைக்கு வர இருக்கிறது. இதன் மூலம் உலகளாவிய தொழில்நுட்ப மய்யங்களின் விருப்பமான தேர்வாக சென்னை மாறி வருவது உறுதியாகியிருக்கிறது.
போரூர் டிஎல்எஃப்-இல் ஏற்கெனவே பல்வேறு நிறுவனங்களின் அய்டி நிறுவனங்களும் அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. தற்போது ஆப்பிள் நிறுவனமும் இங்கே தன்னுடைய அலுவலகத்தை நிறுவ உள்ளது. இது மேற்கொண்டு இங்கே வேலைவாய்ப்புகளை பெருக செய்யும்.
‘ஆப்பிள்’ நிறுவனத்தின் வருகையை அடுத்து பல்வேறு நிறுவனங்களும் சென்னையை நோக்கி வரும். இது வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும். போரூரில் விரைவில் மெட்ரோ ரயில் சேவையும் தொடங்க இருக்கிறது. இது தவிர விமான நிலையமும் அருகிலேயே இருப்பதால் இந்த இடத்தை ‘ஆப்பிள்’ தேர்வு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
