அசாம் பி.ஜே.பி. முதலமைச்சரின் முஸ்லிம்களுக்கு எதிரான வெறிப் பேச்சு!
கொந்தளிக்கிறது அசாம்!
கவுகாத்தி, ஜன.31 அசாம் மாநிலத்தில் நிலவி வரும் இன மற்றும் மொழி ரீதியிலான அரசியல் சூழலில், அம்மாநில முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் சமீபத்திய கருத்துகள் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளன. குறிப்பாக, வங்காள மொழி பேசும் ‘மியா’ முஸ்லிம்களுக்கும், பழங்குடி முஸ்லிம்களுக்கும் இடையே பிரிவினையைத் தூண்டும் வகையில் அவர் பேசியிருப்பது அரசியல் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
வரலாறு மாற்றப்படுகிறதா?
பாக் ஹசாரிகா சர்ச்சை
17 ஆம் நூற்றாண்டில் முகலாயர்களுக்கு எதிரான சராய்காட் போரில், அஹோம் தளபதி லச்சித் பர்புகானுடன் இணைந்து போராடியதாகக் கருதப்படும் இஸ்மாயில் சித்திக் (என்ற) பாக் ஹசாரிகா குறித்த வரலாற்றுத் தரவுகளை முதலமைச்சர் சர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.
பாக் ஹசாரிகா அஹோம் படையில் இடம்பெற வில்லை எனக் கூறியுள்ள அசாம் முதலமைச்சர், இது தொடர்பாக உயர்நிலைப் பள்ளி வரலாற்றுப் பாடப்புத்தகங்களைத் திருத்தி எழுத மாநில கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். முறையான காரணங்கள் இன்றி வரலாற்றை மாற்ற முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
“மியாக்களுக்கு கஷ்டம் கொடுங்கள்” – முதலமைச்சரின் சர்ச்சை பேச்சு
சமீபத்தில் ஒரு பொது நிகழ்வில் பேசிய முதலமைச்சர் சர்மா, வங்காள மொழி பேசும் முஸ்லிம்களை (மியா) கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில்: ‘‘மியா சமூகத்தினருக்கு முடிந்தவரை கஷ்டங்களைக் கொடுங்கள். ரிக்ஷா கட்டணம் போன்ற சிறிய விஷ யங்களில் கூட அவர்களுக்குக் குறைவாகக் கொடுங்கள். அவர்கள் துன்பங்களைச் சந்தித்தால் மட்டுமே அசாமில் இருந்து வெளியேறுவார்கள்.’’
மேலும், மாநில வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் (SIR) போது சுமார் 5 லட்சம் மியா வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். அதே சமயம், மிசிங் போன்ற பிற முஸ்லிம் பிரிவினரை ‘‘கடின உழைப்பாளிகள்’’ எனப் பாராட்டிய அவர், அவர்கள் அசாம் முழுவதும் பரவியிருந்தால், மியாக்கள் நிலத்தை அபகரித்திருக்க முடியாது என்றும் கூறி, சமூகங்களிடையே மோதல் போக்கை உருவாக்கியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
முதலமைச்சரின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் மற்றும் ஏ.அய்.யு.டி.எஃப். (AIUDF) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பத்ருதீன் அஜ்மல் (AIUDF தலைவர்): ‘‘முதலமைச்சர் தனது வார்த்தைகளைத் திரும்பப் பெற வேண்டும். அதிகாரத்திற்காக ஒரு சமூகத்தை அவமதிக்க வேண்டாம். மியா மக்கள் உங்கள் ஆட்சியை வீழ்த்துவார்கள்.’’
ரஃபிகுல் இஸ்லாம் (AIUDF): ‘‘மக்களைத் துன்புறுத்தச் சொல்லிக் கொடுக்கும் ஹிமந்த பிஸ்வா சர்மா, முதல மைச்சர் நாற்காலியில் அமரும் தார்மீக உரிமையை இழந்துவிட்டார். எஸ்.அய்.ஆர். விசாரணைகள் மூலம் உண்மையான இந்தியக் குடிமக்களை பாஜக அரசு குறிவைக்கிறது.’’
ஏற்கெனவே பாஜக வெளியிட்ட ஏ.அய். (AI) காட்சிப் பதிவு ஒன்றிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், முதலமைச்சரின் இந்தப் பேச்சு அசாம் அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
மாரியம்மனை நம்பிய பக்தைகள் உயிரிழப்பு!
சமயபுரம் கோவிலுக்குப்
‘பாதயாத்திரை’ சென்ற பக்தர்கள் கார் மோதி பலி!
பெரம்பலூர், ஜன.31 கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள தொளார் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் 100–க்கும் மேற்பட்டோர் மாலை அணிந்து திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேற்று (30.01.2026) இரவு ‘பாதயாத்திரை’ சென்றனர்.
அதைப்போல் சேலம் மாவட்டம், கெங்கவல்லியைச் சேர்ந்த 61 பக்தர்களும் சமயபுரம் மாரியம்மன் கோவி லுக்குப் ‘பாதயாத்திரை’ சென்றனர்.
இவர்கள் இன்று (31.1.2026) அதிகாலை 5 மணியளவில் பெரம்பலூர் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் என்ற இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்த போது சென்னையில் இருந்து திருச்சி வழியாகச் சென்ற கார் அந்தப் பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது.
இந்த விபத்தில் கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ள தொளார் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த மலர்கொடி (வயது 35), விஜயலட்சுமி (வயது 40), சசிகலா (வயது 47) மற்றும் சேலம் மாவட்டம், கெங்கவல்லியைச் சேர்ந்த சித்ரா (வயது 40) ஆகிய 4 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தொளார் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஜோதி லட்சுமி என்பவர் படுகாயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து பெரம்பலூர் நகர காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த சென்னை, திரிசூலம், ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த கவுதம் (வயது 24) என்ற இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேள்வி எழுப்பினார்!
நிதி நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டியது அவசி யமா? என்று நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் ராஜேஷ் குமார் கேள்வி.
