இரு சிறந்த நூல்களுக்கு விருதுகள் வழங்கும் விழா மற்றும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவில் பல்கலைக் கழக (நிகர்நிலை) வேந்தர் கி.வீரமணி அறிவிப்பு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

 உலக அளவில் மொழிநாள் நடத்துவதற்கு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களுடைய பிறந்தநாள்தான் சிறப்பானதாகும்!
‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புரட்சிக்கவிஞருக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக அவருடைய பிறந்தநாளையொட்டி ஒரு வாரம் விழா கொண்டாடுகிறார்கள்!
பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் ஒரு நாள் முழுவதும் புரட்சிக்கவிஞரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்படும்!

தஞ்சை, ஜன.30 தமிழை தாய்மொழியாகக் கொண்ட ஒவ்வொருவரும் மொழிநாள் நடத்துகிறார்கள். அதுபோல தமிழுக்கும் உலக அளவில் மொழிநாள் நடத்துவதற்கு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்  அவர்களுடைய  பிறந்த நாள்தான் சிறப்பானதாகும். ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புரட்சிக்கவிஞருக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக அவருடைய பிறந்தநாளையொட்டி ஒரு வாரம் விழா கொண்டாடுகிறார்கள். வருகிற ஏப்ரல்  மாதத்தில் நம்முடைய பல்கலைக் கழகத்தில் ஒரு வாரம் என்று சொன்னால், இரண்டு நாட்கள் அல்லது குறைந்தது ஒரு நாள் முழுவதும் புரட்சிக்கவிஞரின் பிறந்த நாள் விழா கொண்டாடலாம். தமிழ் நாள் மொழிநாளாக புரட்சிக் கவிஞருடைய  பிறந்த நாளை – ஒரு விழாவாக இயல் – இசை – நாடகம் ஆக, மூன்றும் மாணவர்கள் பெரிதும் பங்கேற்கக்கூடிய அளவிலே, மாணவர்களுக்குப் பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் கவிதைப் போட்டி எல்லாவற்றையும் நடத்தவேண்டும் என்றார் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக (நிகர்நிலை) வேந்தர் கி.வீரமணி அவர்கள்.

Contents

இரு பெரும் விழாக்கள்!

கடந்த 26.12.2025 அன்று காலையில், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக (நிகர்நிலை) அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் வளாகத்தில் உள்ள அய்ன்ஸ்டீன் அரங்கத்தில், பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் மொழிகள் துறை ஒருங்கிணைப்பில், இரு நூல்களுக்கு விருதுகள் வழங்கும் விழா –  புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் பங்கேற்ற பெரியார் மணியம்மை பல்கலைக் கழக (நிகர்நிலை) வேந்தர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

முத்துமணி நன்னன்!

அய்யா முத்துமணி நன்னன் அவர்கள், இங்கே ஒரு கருத்தைச் சொன்னார். அவர்கள் முயற்சி எடுத்து எல்லோரையும் ஒன்று சேர்த்து, பல பகுதிகளில் இருக்கின்ற தமிழ் அறிஞர்கள், தமிழ் எழுத்தாளர்கள், கருத்தாளர்கள், பேச்சாளர்கள் எல்லோரையும் கருநாடகத்தில் ஒன்று சேர்த்து, ஒரு பெரிய பணியை செய்து கொண்டிருக்கிறார். அதுவும் கருநாடகத்தில், திருவள்ளுவர் சிலை திறப்பதற்கே அங்கே அவர்கள் அனுமதிக்கவில்லை. மூடி வைக்கப்பட்டு பல ஆண்டுகள் திருவள்ளுவருக்குத் திரை போட்டிருந்தார்கள். கலைஞருடைய சாமர்த்தியத்தினால், அந்தத் திரையை நீக்கினர்.  கலைஞருடைய சாதனையை நாம்  பாராட்ட வேண்டும். அங்கே இருப்பவர்களோடு ஒரு வகையான பேச்சு;  இரண்டு வகையிலும் ஒரு நல்ல அளவுக்குப் பேச்சு வார்த்தைகள் மூலம், பேச்சு – வார்த்தை – இது இரண்டும் நடந்தது. சில நேரங்களில் சொல்வார்கள், ‘‘பேச்சு வார்த்தை நடக்கிறது’’ என்று.  அதுபோன்று, பேச்சும் நடந்தது, வார்த்தையும் நடந்தது.

காலத்தை வென்ற கவிஞர் புரட்சிக்கவிஞர்!

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், அவர்கள் எல்லா வகையிலும் எடுத்த முயற்சியினால்தான், புரட்சிக்கவிஞர் அவர்களுக்கு, அவருடைய  பிறந்தநாளை ஒட்டி, நாம் கேட்டது ஒரு நாள். உலக தமிழுக்கு மிகச் சிறப்பு – தமிழை தாய்மொழியாகக் கொண்ட ஒவ்வொருவரும் மொழிநாள் நடத்துகிறார்கள். அதுபோல தமிழுக்கும் உலக அளவில் மொழிநாள் நடத்துவதற்கு புரட்சிக்கவி ஞர் பாரதிதாசன் அவர்களுடைய  பிறந்தநாள்தான் சிறப்பானதாகும். இலக்கியத்தில் அவர் செய்திருக்கிற சாதனை மிகச் சாதாரணமானதல்ல. காலத்தைத் தாண்டி – காலத்தை வென்ற கவிஞராக இருந்தார் புரட்சிக்கவிஞர் அவர்கள். ஆகவே, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் ஒப்பற்ற நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், புரட்சிக்கவிஞருக்குச் சிறப்பு செய்யவேண்டும் என்றார்.  உயர்கல்வியிலேயே தமிழ்நாடு போல எந்த மாநிலமும் கிடையாது என்று ஒவ்வொரு நாளும் ஒரு சாதனையை நாளும் செய்து கொண்டிருக்கிற ஓர் ஆட்சியினுடைய நாயகர். அவர் சொன்னதுபோன்று, உடனே புரட்சிக்கவிஞருக்கு ஒரு வாரம் விழா கொண்டாடுகிறார்கள். வருகிற ஏப்ரல்  மாதத்தில் நம்முடைய பல்கலைக் கழகத்தில் ஒரு வாரம் என்று சொன்னால், இரண்டு நாட்கள் அல்லது குறைந்தது ஒரு நாள் முழுவதும் புரட்சிக்கவிஞரின் பிறந்த நாள் விழா கொண்டாடலாம்.  ஏனென்றால் தேர்வு ஒருவேளை அந்த நேரத்தில் வரலாம். ஆகவே,  ஒரு சமரசத்தை நாம் செய்துகொள்ளவேண்டும்.

மாணவர்களுக்குப் பேச்சு போட்டி,
கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி!

ஒரு முக்கிய அறிவிப்பாக இங்கே  நான் சொல்லு கிறேன். எப்படி விருதுகளை நாம் ஒவ்வொரு ஆண்டும்  அந்த  அறக்கட்டளையினுடைய  வட்டியில் இருந்து  எடுத்துக் கொடுக்கிறோமோ  –அதேபோல அதைத் தாண்டிக் கூட, பல்கலைக்கழகமும் இணைந்து, இந்தத் தமிழ் நாள் மொழிநாளாக புரட்சி கவிஞருடைய  பிறந்த நாளை – ஒரு விழாவாக இயல் – இசை– நாடகம் ஆக, மூன்றும் மாணவர்கள் பெரிதும் பங்கேற்கக்கூடிய அளவிலே, மாணவர்களுக்குப் பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் கவிதைப் போட்டி எல்லாவற்றையும் நடத்தவேண்டும். நம்முடைய மாணவர்களிடையே ஏராளமாக  கவிஞர்கள், எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.

அவர்களின் திறமையை வெளியே கொண்டு வர வேண்டும். கல்வி என்பது என்ன? உள்ளே தள்ளுவது இல்லை.  உள்ளே இருப்பதை வெளியே கொண்டு வருவதுதான். இதுதான் கல்வி! ஆகவே, அப்படிப்பட்ட ஒரு ‘Education is a process  of  not putting out; It is not putting in pulling out’ இதுதான் மிக முக்கியம். வெளியே கொண்டுவர வேண்டும். அப்படிப்பட்ட ஒரு பெரிய வாய்ப்பை நாம் உருவாக்க வேண்டும் என்பதற்கான விழாவாக – இயல், இசை, நாடகம் இணைந்த விழாவாக ஏற்பாடு செய்யவேண்டும். துணைவேந்தர், இணை துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர்ப் பெருமக்கள், உரியவர்கள் அத்தனை பேரும் இங்கே இருக்கிறார்கள்.  அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஓர் அறிவிப்பாகவே அதை அன்போடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

புரட்சிக்கவிஞரின் பிறந்த நாள் வருகிற ஏப்ரல் மாதம், சிறப்பான விழாவாக அது நடக்கும். அதற்கு போனஸ் விழா–  குட்டி முன்னோட்டம்தான் – இது ட்ரையல் விழா!

நூலைப்படி – முறைப்படி!

இங்கே  இணை துணை வேந்தர் உரையாற்றும்போது சொன்னார்கள், புரட்சிக்கவிஞர் விழாவை சம்பந்தப்படுத்தி பேசும்போது,

நூலைப்படி – சங்கத்தமிழ்

நூலைப்படி – முறைப்படி

நூலைப்படி

காலையிற்படி கடும்பகல்படி

மாலை, இரவு பொருள்படும் படி

நூலைப்படி

கற்பவை கற்கும்படி

வள்ளுவர் சொன்னபடி

கற்கத்தான் வேண்டும் அப்படிக்

கல்லாதவர் வாழ்வதெப்படி?

அறம்படி பொருளைப் படி

அப்படியே இன்பம் படி

இறந்ததமிழ்நான் மறை

பிறந்ததென்று சொல்லும்படி

அகப்பொருள் படி அதன்படி

புறப்பொருள் படி நல்லபடி

புகப் புகப் படிப்படியாய்ப்

புலமை வரும் என்சொற்படி

சாதி என்னும் தாழ்ந்தபடி

நமக்கெல்லாம் தள்ளுபடி

சேதி அப்படி தெரிந்துபடி

தீமை வந்திடுமேமறுபடி

பொய்யிலே முக்காற்படி

புரட்டிலே காற்படி

வையகம் ஏமாறும்படி

வைத்துள்ளநூற்களை ஒப்புவதெப்படி

தொடங்கையில் வருந்தும்படி

இருப்பினும் ஊன்றிப்படி

அடங்காஇன் பம்மறுபடி

ஆகும்என்ற ஆன்றோர்சொற்படி நூலைப்படி!

என்று.

ஆனால், இப்போது என்ன நிலை?

கைத் தொலைப்பேசியைப் பிடி!

‘‘காலையில் பிடி

மாலையில் பிடி

இரவில் பிடி

‘செல்’லை பிடி

கைத் தொலைப்பேசியைப் பிடி!’’

என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மாணவர்கள் இருக்கக்கூடிய அளவிற்கு இருக்கிறது. அது ஒரு கருவி அவ்வளவுதான். கருவி எதுக்கு? ஏதாவது ஒரு ஊருக்குச் செல்லவேண்டும் என்றால், ரயிலில் போகிறோம்; ரயிலில் பயணம் செய்து, இறங்கவேண்டிய இடம் வந்ததும் இறங்கிவிடுவோம். அது ஒரு கருவி. அதற்காக எப்போதுமே ரயிலில் குடியிருக்க முடியுமா?

பல கோடி ரூபாய்க்கு கார் வாங்கினாலும், அதிலேயே தங்கிவிட முடியுமா?

எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், BMW கார் வாங்கியிருக்கார். ஆடம்பரமான கார் வங்கியிருக்கிறார். பெரிய மெர்சிடஸ் பென்ஸ் கார் வாங்கியிருக்கார் – பல கோடி ரூபாய்க்கு கார் வாங்கியிருக்கிறார் என்பதற்காக, பயணம் செய்து முடித்ததும், அதிலேயே தங்கிவிடுகிறேன், காரிலேயே சாப்பிடுகிறேன், காரிலேயே படுத்துக் கொள்கிறேன் என்று சொல்ல முடியுமா? காரை அதற்குரிய இடத்தில் விட்டுவிட்டு, வீட்டிற்குள்தானே செல்லவேண்டும்.

ஆகவேதான், செல்போனாக இருந்தாலும், காராக இருந்தாலும், ரயிலாக இருந்தாலும், அவை ஒரு கருவி அவ்வளவுதான். பயன்பட வேண்டிய நேரத்தில் பயன்படுமே தவிர, எல்லா நேரத்திலும் அது பயன்பட முடியாது; பயன்படக்கூடாது. ஆனால், அறிவு அப்படி அல்ல; புரட்சிக்கவிஞருடைய சிந்தனை என்று சொன்னால், அந்தச் சிந்தனையை, நாம் எவ்வளவு வளர்த்திருக்கிறோம்  இந்தப் பல்கலைக்கழகத்தில் என்பதற்காக நாமெல்லாம் பெருமைப்பட வேண்டும்.

பல்கலைக்கழகத்தில் உள்ளே நுழையும் போதே, புரட்சி கவிஞரைப் படித்துவிட்டுத்தான் உள்ளே நுழைய வேண்டும். அதைத்தான் வேகமாகவும், கவிதையாகவும் அவர் சொன்னார்.

விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!

‘‘அறிவை விரிவு செய் அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!’’ இந்த இரண்டு வரியும் சாதாரணமானதல்ல.

பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் இரண்டு, மூன்று இடங்களில், புரட்சிக் கவிஞருடைய கவிதையைப் பார்க்கலாம் நீங்கள்.

‘‘உலகப் பார்வை’’ என்பதுதான் மிக முக்கியம்.

புரட்சிக்கவிஞர் தேசிய கவிஞரா? என்று ஒருமுறை கேட்டனர். இல்லை, அவர்  ‘உலக கவிஞர்’ என்று சொல்லவேண்டும். புரட்சிகவிஞருடைய பார்வை உலக பார்வை. அதனால் அவர் பயப்பட மாட்டார்.

எல்லாவற்றையும் துணிந்து சொல்வார்.  அவர் ஒரு கல்லூரியில் தமிழ் ஆசிரியராக இருந்தார்;  கிறிஸ்தவர்கள்,  பிரெஞ்சுக்காரர்களாகிய மதவாதிகள் நடத்திய ஒரு கல்லூரி அது. அந்தக் கல்லூரியின் ஆண்டுவிழாவில், புரட்சிக்கவிஞரை ஒரு கவிதையை எழுதச் சொல்கிறார்கள். இவர் அப்படியே எழுதி, அந்த ஆண்டு விழா மேடையில் பாதிரிமார்கள் எல்லாம் அமர்ந்திருக்கும்போது அந்தக் கவிதையைப் படித்தார்.

புரட்சிக்கவிஞர் அவர்கள் எவ்வளவு துணிச்சலானவர், எவ்வளவு தெளிவானவர் என்பதற்கு அடையாளம் என்னவென்றால்,

“வறியோர்க்கெல்லாம் கல்வியின் வாடை’’

என்று ஒரு வரியைப் படித்ததும், அதை மொழி பெயர்த்து பிரெஞ்ச் மொழியில் சொல்கிறார்கள்.

அந்தக் கல்லூரியை நிர்வகிக்கக் கூடியவர்கள் பிரான்சில் இருந்து ஆண்டு விழாவிற்கு வந்திருந்தார்கள். பாரதிதாசனுடைய கடவுள் மறுப்புக் கொள்கைக்கு விரோதமாக அந்தக் கல்லூரியில் நிறைய ஆசிரியர்கள் இருந்தார்கள். அவரை எப்படியாவது கல்லூரியை விட்டு வெளியே அனுப்பவேண்டும் என்று காத்திருந்தனர்.

இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்து, அருகில் அமர்ந்திருந்த கல்லூரி அதிகாரியிடம், ‘‘பாரதிதாசன் மிகவும் மோசமானவர்; நாத்திகர், கல்லூரி பிள்ளைகளையெல்லாம் தூண்டி விடுவார்’’ என்று சொல்லுகிறார்கள். ஆகவே, அவரை அந்தக் கவிதையைச் சொல்ல விடக்கூடாது என்று மேலும் சொன்னார்கள்.

கருத்துச் சுதந்திரத்திற்கு இடமளித்தார்!

அந்த அதிகாரியோ, ‘‘பரவாயில்லை, அவர் அந்தக் கவிதையைப் படிக்கட்டும்; அவருடைய கருத்தைச் சொல்லட்டும்’’ என்று சொல்லி கருத்துச் சுதந்திரத்தைக் கொடுத்தார்.

“வறியோர்க்கெல்லாம் கல்வியின் வாடை,

வரவிடவில்லை மதக்குருக்களின் மேடை,’’

இந்த வரிகளைப் படித்த புரட்சிக்கவிஞர் அவர்கள் கொஞ்ச நேரம் படிப்பதை நிறுத்திவிட்டு, அனைவ ரையும் பார்த்தார். எல்லோரும் அமைதியாக இருந்தார்.

பிறகு,

‘‘நறுக்கத்தொலைந்தது அந்தப்பீடை,

நாடெல்லாம் பாய்ந்தது கல்வி நீரோடை!”

என்றார்.

‘‘கோந்தினியே, கோந்தினியே!’’

இதை மொழிப் பெயர்த்துச் சொன்னதைக் கேட்ட பிரெஞ்சு அதிகாரி, ‘‘கோந்தினியே, கோந்தினியே’’ என்று பிரெஞ்சு மொழியில் சொன்னாராம்.

‘‘கோந்தினியே’’ என்றால், ஆங்கிலத்தில் சொல்லப்படும் ‘‘கண்டினியூ’’ (Continuez/Goon) என்று சொல்வதை, ‘‘கோந்தினியே’’ என்பதுதான்.

Hospital என்று எழுதினால், ேஹாப்பிட்டல் என்பார்கள். எங்கே போய்விட்டு வருகிறீர்கள் என்றால், Hopital–லுக்கு போய்விட்டு வருகிறோம் என்பார்கள்.

ஆகவே, அப்படிப்பட்ட ஓர் அற்புதமான ஒரு சூழ்நிலையில்,

“வறியோர்க்கெல்லாம் கல்வியின் வாடை,

வரவிடவில்லை மதக்குருக்களின் மேடை,

நறுக்கத்தொலைந்தது அந்தப்பீடை,

நாடெல்லாம் பாய்ந்தது கல்வி நீரோடை!”

என்று கல்வியைப்பற்றிச் சொன்னார் புரட்சிக்கவிஞர்.

ஆகவே. அப்படிப்பட்ட ஒரு துணிவானவர், தெளி வானவர்.

தந்தை பெரியார் அவர்களுடைய துணிச்சல்தான், புரட்சிக்கவிஞரிடமும் இருந்தது.

புரட்சிக்கவிஞரிடமிருந்து கருத்து மாறுபாடுகூட இருக்கலாம். அவர் முதலில், நாத்திகராகவோ, கடவுள் மறுப்பாளராகவோ இல்லை.

தந்தை பெரியார்
கடவுள் மறுப்புக்குரிய வார்த்தைகளை விடயபுரத்தில்தான் கூறினார்!

விடயபுரத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமில்தான் தந்தை பெரியார் கடவுள் மறுப்புக்குரிய மூன்று வார்த்தைகளைச் சொன்னார்கள் என்பதை இங்கே உரையாற்றிய இணைத் துணைவேந்தர் மல்லிகா அவர்கள் சொன்னார்கள்.

அந்தப் பயிற்சி முகாம் என்பது மாணவர்களுக்கு மிகவும் முக்கியம். மாணவர்களுக்கு ஏன் பயிற்சி முகாம் மிக முக்கியம் என்று சொல்லும்போது, பகுத்தறிவு பயிற்சி முகாம் நடக்கவேண்டும் அந்த ஊரில், ஒரு கிராமத்துக்குள் நடத்தினார். தந்தை பெரியாரே வகுப்பு

நடத்தினார். நாங்கள் எல்லாம் அதுபோன்ற பயிற்சியில் பங்கேற்றவர்கள்.

பயிற்சி வகுப்பு ஈரோட்டில் ஒரு மாதம் நடைபெறும். என்னுடைய மாணவப் பருவத்தில், 10 அல்லது 11 வயதில், கோடை விடுமுறையில் சென்றிருந்தோம். அதில் ஒரு பகுதியை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார் அந்த நாவலில் சுந்தரபுத்தன் அவர்கள்.

சுயமரியாதை பிரச்சார போதனைக் கூடம்!

ஈரோட்டில் தொடங்கிய முதல் பகுத்தறிவுப் பயிற்சிப் பள்ளியில் வந்த செய்தி இதுதான். பேசுகிறவர்கள் பல மாதிரி பேசியதாகவும், அதை கேட்கிறவர்கள், பலவிதமாய் அர்த்தம் கொள்வதாகவும், சிற்சில சமயங்களில் விபரீத அர்த்தம் ஏற்பட்டு விடுவதாகவும் தெரிகிறது. அந்த விபரீதத்தை நிறுத்துவதற்காக குறைந்தது, 15 நண்பர்களைத் தயாரிக்கும் பொருட்டு, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு அடுத்த, வெங்கட்டநாயக்கர்  (பெரியாருடைய தந்தையார்)  தோட்டத்தில் உள்ள ஒரு கொட்டகையில் சுயமரியாதை பிரச்சார போதனைக் கூடம் என்பதாக, ஒரு ஸ்தாபனம் ஏற்படுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதில் ஒரு மாத காலத்திற்குத் தினமும் இரண்டு காலம், ஒவ்வொரு மணி நேரம் ‘உபநியாசங்கள்’ மூலமும், சம்பாஷணை (நேருக்கு நேரா பேசலாம்) குடியரசில் கண்ட விஷசங்கள் மூலமாகவும் கற்பித்துக் கொடுக்க முடிவு செய்திருக்கிறோம். 15 பேர்கள் சேர்த்துக் கொள்ளப்படக்கூடும். அவர்களில் சவுகரியம் இல்லாதவர்களுக்கு இலவச சாப்பாடு போடப்படும். தெரிவித்து கொண்டால், ஏற்றுக்கொண்ட விஷயத்துக்கு வரவேண்டிய விவரத்திற்கும், மற்ற நிபந்தனை சொல்லுகிறோம் என்று சொன்னார்.

இந்தக் கருத்துப்படி, அந்தப் பயிற்சி முகாமில் ஒரு மாணவனாக இருந்தவன் தான் இன்றைக்கு உங்கள் முன் பேசக்கூடியவனாகிய நான். அதை விளக்கமாக இந்த நூலில்  பதிவு செய்து இருக்கிறார்கள் பல இடங்களில். அதேபோல அவர்கள்  ஊரில் விடயபுரத்தில் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. அந்த வகுப்பில்தான் தந்தை பெரியார் அவர்கள் கடவுள் மறுப்பு வாசகத்தை உருவாக்கித் தந்தார்கள்.

‘சுப்ரமணியர் துதியமுது’ எழுதிய பாரதிதாசன்!

புரட்சிக் கவிஞர் அவர்கள் கூட  முதலில் நாத்திகராக இல்லை. புதுச்சேரிக்குப் பக்கத்தில் மயிலம் என்கிற ஊரில், சுப்பிரமணியசாமி முருகன் கோயில் இருக்கிறது. அவருடைய கவிதைகள் முதலில் “மயிலம் சுப்ரமணியர் துதிய முது’’ என்று எழுதியவர். அப்போதெல்லாம் பெரிய வைதீகர் அவர். சுயமரியாதை இயக்கத்தை அவர் சாரவில்லை.

சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி, ஒரு 5 அல்லது 6 ஆண்டுகளுக்குப் பிறகு, பெரியாரைச் சந்தித்தற்குப் பிறகுதான் அவர் மாறுகிறார். அப்படி மாறும்போது, அடுத்தக்கட்டத்திற்கு வருகிறார்.

ஒருவர் சிந்திக்கச் சிந்திக்க எப்படி வரும் என்பதற்கு  இது ஓர் அடையாளம். சிந்தனை ஓட்டம், பக்குவம், பரிபக்குவம், புரிந்து கொள்ளல் என்பதுதான். பெரியார் யாரையும் வற்புறுத்துவது இல்லை. யாரையும்  இந்த இயக்கம் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்வ தில்லை. நம்பாவிட்டால், நரகம் என்று அச்சுறுத்துவதும் இல்லை.

நம்மாள் என்ன சொல்வார்கள், ‘‘நம்புகிறவனுக்கு நடராஜா! நம்பாதவனுக்கு எமராஜா!’’ என்பார்கள். அச்சுறுத்தலை, பயத்தை ஏற்படுத்துவார்கள். ஆனால். இங்கே அப்படி இல்லை. நீங்கள் நம்புங்கள், நம்பாமல் போங்கள்; ‘‘நம்பாதீர்கள் எங்கள் கருத்தை’’ என்று சொல்லித்தான் பெரியார்  பேசத் தொடங்குவார்.

அடுத்த கவிதை,  புரட்சிக்கவிஞர்

“உண்டென்பார் சிலர்

இல்லை என்பார் சிலர்

எனக்கில்லை கடவுள் கவலை’’

இது அடுத்த கட்டம்.

எத்திசம் என்று சொல்லும்போது, அது கடவுள் மறுப்பு; அக்னாசிசம் என்ற ஒன்று இருக்கிறது. அகராதி யைப் பார்த்தீர்களென்றால் உங்களுக்குத் தெரியும். அதற்கு என்ன அர்த்தம் என்றால்,  கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவன் என்று அர்த்தம்.

இங்கர்சால் புத்தகத்தில், ‘அக்னாசிசம்’ என்ற வார்த்தையை அதிகமாகப் பயன்படுத்தி இருப்பார். இது இரண்டாவது கட்டம்.

புரட்சிக் கவிஞர் சிங்கம் மாதிரி, யாருக்கும் பயப்பட மாட்டார்!

கடைசி கட்டத்தில், இதை எதிர்த்து  மிகக் கடுமையாக பேச ஆரம்பித்தார்கள். புரட்சிக் கவிஞருக்குக் கோபம் வந்தது. அவர் தைரியமானவர், சிங்கம் மாதிரி, யாருக்கும் பயப்பட மாட்டார். எதிர்ப்பு வந்தது என்றால், அதுதான் பெரியாருடைய அடையாளம். அதைப் புரிந்து கொள்ள வேண்டும் இந்த நிகழ்ச்சியின் மூலமாக.  இத்தனை விஷயங்கள் இந்த நிகழ்ச்சிக்குள்ளே இருக்கிறது. வெறும் புத்தகத்திற்கான பாராட்டு அல்ல. வெறும் புரட்சிக்கவிஞருக்குப்  பாராட்டு இல்லை.  அவரைப் புகழ்வது என்பது அல்ல.  நமக்கு ஓர் துணிவு வரும். ஒரு கருத்தை நாம் ஏற்றுக்கொண்டால், சுலபமாக அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது; சிந்திக்கவேண்டும், ஆராய்ந்து பார்க்கவேண்டும். பிறகு அந்தக் கருத்து சரி என்று பட்டால்,  அதில் எவ்வளவு உறுதியாக இருக்க வேண்டும்; எவ்வளவு தெளிவாக இருக்க வேண்டும் எவ்வளவு துணிவாக இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளம் அதில் இருக்கிறது.

நம்மை ஆத்திரப்படுத்துவதற்காக, ஒரு நல்ல பாடகரான, தண்டபாணி தேசிகர்;  இசையரசன் அவர். அவரை விட்டே ஒரு பாட்டு எழுதி கொடுத்தார்கள்.

என்ன பாட்டு எழுதினார் என்றால்,

‘‘இல்லை என்போன் யாரடா?

தில்லை சென்று பாரடா!’’

நடராஜர் எப்படி ஆடிட்டு இருக்கார் பார்;   யாரர் நீ இல்லை என்று சொல்வதற்கு? என்று அந்தப் பாடலில் கேட்டவுடன்,

புரட்சிக்கவிஞர் இந்தப் பாட்டைக்  கேட்டு விட்டு, நான்கு வரிகள் எழுதினார்.

இல்லை என்போன் நானடா,

அத் தில்லைக் கண்டு தானடா!’’

தில்லைக்குப் போய் பார்த்துவிட்டுத்தான் சொல்கி றேன், அங்கே ஒன்றுமே இல்லை என்று பாடல் வரிகளில் சொன்னார்.

அண்ணாவின் நாடகம்!

இதை,  அண்ணா அவர்கள்,  நாடக வடிவில் உருவாக்கிட்டார்.

ஒரு நாடகத்தில்,  ஒரு வேலைக்காரனிடம், இவர் (அண்ணா) ஜமீன்தார்;  ‘‘ஏன்பா எங்கே உன்னை நான்கைந்து நாளாகக் காணவில்லையே’’ என்று கேட்பார்.

உடனே வேலைக்காரன், ‘‘உங்களுக்குப் பிடிக்காது எஜமான்.  நான் உங்களுக்குப் பிடிக்காத ஓர் இடத்திற்குப் போனேன். நான் சிதம்பரம் போனேன்’’ என்கிறார்.

‘‘அப்படியா? என்ன விஷயம்?’’ என்றார் ஜமீன்தார்.

‘‘ஆருத்ரா தரிசனம் செய்யப் போனேன்!’’ என்றான்.

‘‘சரி, என்ன பார்த்த அங்கே?’’ என்று ஜமீன்தார் கேட்டார்.

‘‘நீங்கள்தான் நம்பமாட்டீர்களே!’’ என்றான்.

‘‘இல்லை, சொல்லுப்பா?’’ என்றார் ஜமீன்தார்.

‘‘நடராஜர் காலைத் தூக்கிட்டு நிக்கிறார் பாருங்கள்;  நடனம் ஆடிட்டு, அதைப் பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு; அதுக்காகதான் போனேன்’’ என்று சொன்ன உடனே,

‘‘அப்படியா? நீ சொல்றது எனக்கு விளங்கல, எப்படி நின்னாரு? அதைக் கொஞ்சம் எனக்குக் காட்டேன், எனக்காவது பக்தி வரட்டுமே!’’ அப்படின்னு சொல்லு வார். உடனே அந்த வேலைக்காரன்,  ஒரு காலை  கீழே வச்சிக்கிட்டு, இன்னொரு காலை  தூக்கி மடித்துக் கொண்டு நின்றார்.

‘‘ஓ, நல்லா இருக்கே, ரொம்ப அழகாகப் பண்ணி ருக்காரு; சரி, நான் சொல்ற வரையில நீ அப்படியே இரு என்றார்.

ஒரு நிமிஷம் ஆயிற்று!

நான் சொல்கிறவரை காலை கீழே இறக்கக்கூடாது என்றார்.

அவரும் அப்படியே நின்று கொண்டிருந்தார்.

வேலைக்காரன், ‘‘அய்யா, காலை இறக்கட்டுமா?’’ என்றார்.

அப்படியே இரு; இது நன்றாக இருக்கிறது. எனக்குப் பக்தி வருகிற மாதிரி இருக்கிறது என்றார் ஜமீன்தார்.

அய்யா கால் வலி தாங்க முடியவில்லை அய்யா, காலை கீழே இறக்கிவிடவா?’’ என்று வேலைக்காரன் கேட்கிறார்.

‘‘இல்லை, இல்லை, இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே இரு’’ என்பார் ஜமீன்தார்.

அய்யா, என்னால், இனிமேல் இப்படி நிற்க முடியாது என்று சத்தமாகச் சொல்வார் வேலைக்காரன்.

ஏம்பா, அந்த நடராஜர் எத்தனை வருஷமா தூக்கிக் கொண்டு நிற்கிறார் காலை’’ என்பார்.

அது கல்லுங்க, அதனால்  காலைத் தூக்கி வச்சிருக்கு. நான் மனுஷன், என்னால் எப்படி காலை கீழே இறக்காமல் நிற்க முடியும்? என்று அந்த வேலைக்காரன் சொல்வார்.

இந்தக் காட்சியைப் பார்த்த எல்லாரும் சிரிப்பார்கள்.

ஒரு தத்துவம், ஒரு கருத்து, அந்தக் கருத்தைப் புரட்சிக்கவிஞர் வேகமாக சொன்னதை,  அண்ணா அவர்கள், நாடகத்தில் அதை மென்மையான காட்சி யாக்கி விட்டார்.

‘‘ஏன் புரட்சி கவிஞர் என்று சொல்றோம்?’’ சொல்ல வந்த கருத்தை, அழுத்தம் திருத்தமாக, ஆணித்தரமாக சொல்வதற்குப் பெயர் தான் புரட்சிக்கவிஞர்.

வெற்றி நிச்சயம்!
வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள்!

எனவே, எதையும் நீங்கள் முதலில் நன்றாகச் சிந்தியுங்கள்; ஆழ்ந்து சிந்தியுங்கள்; ஏற்றுக்கொள்ளா தீர்கள், உடனே நம்பி விடாதீர்கள்! ஆனால், நம்பி ஒரு கருத்தை ஏற்றுக்கொண்டு உங்களுக்குத் தெளிவு ஏற்படுமானால், அந்தத் தெளிவோடு நிறுத்தாதீர்கள்; துணிவோடு, அந்தக் கருத்தை நீங்கள் நிலை நிறுத்தினால், வெற்றி நிச்சயம்! வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள்!

வாழ்க பெரியார்! வாழ்க புரட்சிக்கவிஞர்!

வளர்க தமிழ்! வளர்க பகுத்தறிவு! நன்றி வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *