1997இல் டிப்ளமா முடிச்ச பிறகு, பி.பார்ம், எம்.பார்ம், வெளியூர் (சென்னை, மும்பை, அய்தராபாத்) வேலை – பிறகு அமெரிக்கான்னு இருபது ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் அம்மா, அப்பாவோடு 3 மாதம் கூட இருக்கும் வாய்ப்பு கிடைத்தது, மீண்டும் இது போன்றதொரு சந்தர்ப்பம் எப்போது அமையுமென தெரியவில்லை, ஆனால் அமையும் என நம்புகிறேன்.
அம்மாவுக்கு ஏனோ அமெரிக்கா அவ்வளவாக பிடிக்கவில்லை, எப்போதும் ஊருல இருக்கிற ஆடும், மாடும், கோழி மற்றும் சின்ன மகனின் நினைப்புதான், ஏனென்றால் அவர்களால் 12-14 மணி நேரம் எந்த வேலையும் செய்யாமல் பொழுதை கழிக்க முடியவில்லை, எப்படா ஊருக்கு போவோம்னு திட்டமிட்டதை விட 35 நாள் முன்பே விமானம் ஏறிவிட்டார்கள், சற்று வருத்தமே, ஆனால் இருக்க சொல்லி கட்டாய படுத்த விருப்பமில்லை.
கரூருக்கு அருகில் 100 குடும்பங்கள் மட்டுமே உள்ள மிகச்சிறிய கிராமம் எங்களுடையது, ஆறாம் வகுப்பு மட்டுமே படித்த அப்பா, மழைக்குகூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத எழுத்தறிவற்ற கைநாட்டு வைக்கும் அம்மா. இருவரும் இன்றளவும் கடும் உழைப்பாளிகள். 80களில் அப்பா காலை 3 மணிக்கு எழுந்து கைத்தறியில் நெசவு நெய்துவிட்டு பகலில் விவசாய வேலை செய்வார். அம்மாவும் அவருக்கு உதவியாக எல்லா வேலைகளையும் செய்து என்னை எங்கள் ஊரின் இரண்டாவது முதுகலை தொழிற்கல்வி பட்டதாரி ஆக்கினார்கள்.
எனக்கு வீட்டில் சிறு வயது முதலே அதிக கட்டுப்பாடுகள் இருந்ததில்லை, 1988இல் ஆறாம் வகுப்பு படிக்கும் போதே தியேட்டருக்கு தனியாக சினிமாவிற்கு செல்லுமளவிற்க்கு அந்த சுதந்திரம் கூட வாழ்வில் நான் சுயமாக சிந்தித்து எடுத்த பல முடிவுகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
அப்பா மிகவும் சிக்கமானவர். ஆனால் எப்போதும் நான் விரும்பியதை நிறைவேற்றி இருக்கிறார். அவர் சைக்கிள் ஓட்டினாலும், என் விருப்பத்திற்காக 1999இல் கல்லூரி முதல் ஆண்டிலேயே 55 ஆயிரம் ரூபாய் கொடுத்து யமாகா பைக் வாங்கி தந்தவர். 2003-2005இல் குடும்ப வருமானமே அநேகமாக பத்தாயிரம் கூட இருக்காது. ஆனால் நான் என் முதுகலை படிப்புக்கு அதிகமாக செலவாகும் மணிபால் பல்கலைக் கழகத்தில் படிக்க விரும்பிய போதும் தடையேதும் சொல்லாமல் அனுப்பி வைத்தவர்கள் இதற்கும் அப்போது தம்பியும் இளங்கலை படிக்கிறான், எங்களால் சமாளிக்க முடியாது என சொல்லி இருக்கலாம், ஆனால் பிள்ளைகளின் கல்வி அவர்களின் வாழ்வை வளமாக்கும் என உறுதியாக நம்பியவர்கள்.
அம்மா, அப்பாவுக்கு தெரிந்த, எனக்கு சொன்ன ஒரே அறிவுரை நீ நன்றாக படித்தால் எங்களை மாதிரி கஷ்டப்படாமல் நீயும் உன் பிள்ளைகளும் சுகமாக வாழலாம் என்பது மட்டுமே.
இன்று அவர்கள் கஷ்டப்பட்டு மாதம் முழுவதும் சம்பாதிப்பதை என்னால் 4-5 மணி நேரத்தில் சம்பாதிக்க இயலும் ‘நீங்கள் ஓய்வெடுங்கள்’ என எவ்வளவு கேட்டுக் கொண்டாலும், தங்களால் இயன்றவரை தங்கள் சோற்றுக்கு என் கையை எதிர்பார்க்காத சுய மரியாதைகாரர்கள்.
எனக்கு வேண்டுமானால் இன்று நம்ம ஊரு அரசியல்வாதியோ, வசதியான சினிமா நடிகரோ பயன்படுத்தும் விலை உயர்ந்த ஆடி காரை பயன்படுத்துவது மகிழ்ச்சியாக இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு அதுவும் ஏதோ ஒரு கார். இங்கு என்னதான் 24 நேரமும் வீட்டில் ஏசி இருந்தாலும் அவர்கள் சந்தோசமெல்லாம் அவர்கள் வீட்டு வாசலில் கயித்து கட்டிலில் தென்னை மர காற்றில் உறங்குவதே. சொல்லப்போனால் இந்த 24 மணிநேர ஏசி அவர்களுக்கு ஒவ்வாமை.
அவர்களை அனுப்பி வைத்துவிட்டு வீட்டிற்கு வந்த பிறகு நீண்ட நாள்களுக்கு பிறகு என் கண்களில் சில கண்ணீர் துளிகள். அநேகமாக அடுத்த ஆண்டின் கோடை விடுமுறையில் சந்திப்போம் என்ற நம்பிக்கையில்… அதுவரை மிஸ் யூ போத்.
12 ஆண்டு முகநூல் பயன்பாட்டில் இது தான் நான் எழுதும் நீண்ட பதிவு, இந்த பதிவை எழுத ஆரம்பிக்கும் போது இவ்வளவு எழுத முடியும் என்று தோன்றவில்லை. இவ்வளவு எழுதிவிட்டு பதிவில் சின்னதா அரசியல் பேசாமல் இருந்தால் எப்படி? இப்போது இந்த 50 ஆண்டு திராவிட அரசியல் நமக்கு என்ன செய்தது என கேட்கும் சிலருக்கு, அதுதான் நானும் என் குடும்பமும் முன்னேற அதற்கான வாய்ப்புகளை வழங்கியது என உறுதியாக கூற முடியும்.
தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் கலைஞர் கொண்டு வந்த ஏதோ ஒரு திட்டம் அவர்களது வாழ்வில் உதவி இருக்கும், எங்கள் குடும்பத்தின் வளர்ச்சிக்கு கலைஞர் தந்த விவசாயத்திற்கு இலவச மின்சாரமும், உழவர் சந்தையும், உயர்கல்விக்கு கடனும், இன்றும் குக்கிராமங்கள் நகரங்களோடு இணைத்த மினி பஸ் ஆகிய திட்டங்கள் அவசியம் வேண்டியவை. திராவிடத்தால்வாழ்கிறோம்.
நமது வாழ்வின் முன்னேற்றத்திற்கு கல்வியும், விடா முயற்சியும், உழைப்பும் மிக முக்கியம்.
திராவிடத்தால்வாழ்கிறோம்.
– சுப்பு பழனிச்சாமி,
தகவல்: வி.சி.வில்வம்
