சென்னை. ஜன.28- தமிழ்நாட்டில், அரசுப் பணிகளில், தமிழ் வழிக் கல்வியில் படித்தோருக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பான சட்டத்தில், திருத்தம் கொண்டு வருவதற்கான, புதிய சட்ட மசோதா, நேற்று முன்தினம் (26.1.2026) சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு அரசு பணிகளில், நேரடி பணி நியமனம் வழியே நிரப்பப்படும், அனைத்து காலியிடங்களிலும், 20 சதவீதம் இடங்களை, தமிழ் வழியில் படித்த வருக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப் பட்டது.
இதற்காக, 2010ஆம் ஆண்டு சட்டம் நிறை வேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ், ஒரு பணிக்கு விண்ணப்பித்தவர், அரசு பணியில் இருக் கிறாரா, இல்லையா என்பதை ஆராயாமல், இதுநாள் வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, அரசு முன்னுரிமை வழங்கி வந்தது.
இந்த சூழ்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், ஏற்கெனவே அரசுப் பணியில் உள்ளவர்கள், தமிழ் வழியில் பயின்றவர்கள் என்ற வகைப்பாட்டின் கீழ், முன்னுரிமைக்கு தகுதியற்றவர்கள் என தீர்ப்பளித்தது.
இதை தெளிவுப் படுத்தவும், கடந்த 2010 செப்., 7ஆம் தேதிக்கு பின், இதுநாள் வரை தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பணியில் சேர்ந்தது செல்லும் என்பதை உறுதிப்படுத்தவும், புதிதாக சேருவோருக்கு மட்டும், அச்சலுகையை பயன்படுத்தவும், புதிய சட்ட திருத்த மசோதாவை, மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சட்ட மன்றத்தில் தாக்கல் செய்தார்.
