ஜனவரி 31இல் ஆர்ப்பாட்டம்! ஆர்ப்பாட்டம்!! அரிமா கர்ச்சனை ஒலிக்கட்டும்! ஒலிக்கட்டும்!!

5 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கவிஞர் கலி. பூங்குன்றன்

ோழர்களே, தோழர்களே! வரும் ஜனவரி 31ஆம் தேதி திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் போராட்டத்திற்குத் தயாராகி விட்டீர்களா? சமூகநீதிக்கான இந்தப் போராட்டத்தில் பங்கேற்க, ஒத்த கருத்துள்ள கட்சியினரையும் இணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு விட்டீர்களா?

ஒன்றியத்தில் பிஜேபி தலைமையிலான ஆட்சி அமைந்ததுதான் தாமதம்!

அரும்பாடுபட்டு, கடும் தியாகங்களைச் சந்தித்து, எதிர்நீச்சல் போட்டு, போராடிப் போராடிப் பெற்ற சமூகநீதிக்கான உரிமைகளின் ஒவ்வொரு வேரையும் திட்டமிட்ட வகையில் வெட்டி, கடைசியில் ஆணி வேர்கள் வரை சென்று வீழ்த்திட, கோடரிகளைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டு விட்டது – ஆர்.எஸ்.எஸின் அரசியல்  அதிகார வடிவமான ஒன்றிய பிஜேபி ஆட்சி.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சட்டப் போராட்டம் நடத்தி ‘நீட்’ ஒழிக்கப்பட்டது! (குஜராத் மாநில முதலமைச்சராக மோடி, இருந்த அந்தக் கால கட்டத்தில் ‘நீட்’டை பலமாக எதிர்த்தவர்தானே!) அதே மோடி, பிரதமர் ஆன நிலையில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத் துப்பாக்கியைக் கையில் பிடித்து, உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்து, ‘நீட்’ செல்லும்  என்ற தீர்ப்பைப் பெற்றார்.

இன்றுவரை இந்தியத் துணைக் கண்டத்தில் தந்தை பெரியாரின் திராவிட இயக்கப் பூமியான தமிழ்நாடு, ‘நீட்’டுக்கு எதிராகப் போர்க் கொடியைத் தூக்கிதான் களத்தில் நின்று கொண்டிருக்கிறது.

அதற்கடுத்து என்ன செய்தது ஒன்றிய பிஜேபி அரசு? – ‘பொருளாதாரத்தில் நலிந்த உயர்ஜாதி பிரிவினருக்கு (EWS) 10 விழுக்காடு இடஒதுக்கீடு’ என்ற ஒன்றை அவசர அவசரமாகக் கொண்டு வந்து, உயர் ஜாதியினருக்கு அதிலும் குறிப்பாகப் பார்ப்பனர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்தைச் செயல்படுத்தி விட்டது (103ஆவது சட்ட திருத்தம்).

‘இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் செல்லாது’ என்று உச்சநீதிமன்றமே பல முறை தீர்ப்பு வழங்கிய நிலையிலும், அதை எல்லாம் கால்  தூசியாகக் கருதி, அப்படியொரு சட்டத்தைச் கொண்டு வந்து விட்டது.

அதன் விளைவு என்ன தெரியுமா? எடுத்துக் காட்டுக்கு இதோ ஒன்று.

பாரத ஸ்டேட் வங்கியில் எழுத்தர் பணித் தேர்வில் ‘கட்ஆஃப் மார்க்’ விவரத்தை அறிந்தால் இரத்தக் குழாய் வெடித்து விடும். தாழ்த்தப் பட்டவர்களுக்கு 61.25; பழங் குடியினருக்கு 53.75; இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 61.25; உயர் ஜாதி ஏழைகள் (EWS) என்று சொல்லப்படுபவர்களுக்கு 28.5 மதிப்பெண்களாம்!

சூழ்ச்சி புரிகிறதா? வில்லங்கம் எங்கிருந்து வந்திருக் கிறது என்பது தெரிகிறதா?

ஒரு பழங்குடி மாணவன் அல்லது மாணவி 53.75 விழுக்காடு மதிப்பெண் வாங்கினால் மட்டுமே பாரத ஸ்டேட் வங்கியில் பணி கிடைக் கும். ஆனால், உயர்ஜாதி பார்ப்பனர்கள் – ஆண்டு வருவாய் 8 லட்சம் வரை பெறுபவர்கள்  – வெறும் 28.5 மதிப்பெண் பெற்றாலே போதும் – பாரத ஸ்டேட் வங்கியில் பணி கிடைத்து விடும்.

ஏற்கெனவே வங்கிகளில் பணியாற்றுவோரில் பெரும்பாலும் பார்ப்பனர்கள் தானே! அது போதாது என்று மேலும் 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது – பார்ப்பனர்களின் வயிற்றில் அறுத்துக் கட்டத் தானே!

மத்திய தொகுப்புக்கு ஒவ்வொரு மாநிலமும் மருத்துவக் கல்வி இடங்களை அள்ளிக் கொடுக்கிறது. ஆனாலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட நிலையில், சட்டப் போராட்டம் நடத்தி இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடத்தை பெறுவதற்கும் மிகவும் போராட வேண்டியிருந்தது.

ஒன்றிய அரசுத் துறைகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு 1993 முதல் (வேலை வாய்ப்பில், கல்வியில் இடஒதுக்கீடு 2006 முதல்) செயல்பட்டதாகக் கூறப்பட்டாலும், நடைமுறையில் உண்மையான நிலவரம் என்ன? 2015ஆம் ஆண்டு வரையில் வெறும் 12 விழுக்காடுதான். 2021–2026 கால கட்டத்தில் 21.57 விழுக்காடு தான்  அளிக்கப்பட்டுள்ளது! (தகவல் அறியும் RTI கீழ் பெறப்பட்டது)

சட்டப்படி பிற்படுத்தப் பட்டவர்களுக்குக் கிடைக்க வேண்டிய விழுக்காடு இடங்கள் அளிக்கப்படாத அவல நிலையில், ஏற்கெனவே தங்கள் எண்ணிக்கைக்கு மேல் அதிக இடங்களை அனுபவித்து ‘அஜீரணக் கோளாறுகளால்’ ஏப்பமிடும் உயர்ஜாதி பார்ப்பனர்களுக்கு ‘பொருளாதார அளவுகோல்’ என்ற ஏமாற்றுக் குறுக்கு வழியில் பாய்ந்து, தனியாக மேலும் 10 விழுக்காடு இடங்களை (EWS) பெற்று வரும் கொடுமைகளை என்ன சொல்ல!

‘நீட்’டை எதிர்த்து தமிழ்நாட்டிற்கு விலக்கிக்கோரி தி.மு.க. ஆட்சியில் இரண்டு முறை மசோதா நிறைவேற்றி அனுப்பியும், ஆளுநரும், அதற்கு மேல் குடியரசுத் தலைவரும் மூர்க்கத்தனமாக நிராகரிக்கின்றனர் என்றால் – தந்தை பெரியார் 1925ஆம் ஆண்டிலேயே தொலை நோக்கோடு  சேலம் பொதுக் கூட்டத்தில் அறுதியிட்டுச் சொன்னாரே – ‘‘சுதந்திர இந்தியாவில் டெமாக்கிரசி இருக்காது; மாறாக, பிராமினோகிரசி தான் இருக்கும்’’ என்று – அது நூறு விழுக்காடு துல்லியமான உண்மை என்பது இப்பொழுது புரிகிறதா?

அடுத்து ஓர் அபாய அறிவிப்பு! அபாய அறிவிப்பு!! தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் தலையில் பேரிடி! – என்ன தெரியுமா?

‘பாராமெடிக்கல்’ படிப்பில் சேர்வதற்கும்  நீட் கொண்டு வரப்படுமாம்! –  அறிவித்துள்ளது ஆர்.எஸ்.எஸின் அரசியல் வடிவமான ஒன்றிய பிஜேபி அரசு.

பாரா மெடிக்கல் படிப்பு என்றால் என்னவென்று தெரியுமா?

1) நர்சிங்

2) லேப் டெக்னீஷியன்.

3) ரேடியாலஜி  – டெக்னீஷியன்

4) பிசியோதெரபி

5) பார்மசி (டி–ஃபார்ம், பி–ஃபார்ம்)

6) எமர்ஜென்சி (Emergency Medical TEchnician) (EMT)

7) டயாலிசிஸ் டெக்னிஷீயன்

8) ஆபரேஷன் தியேட்டர் (OT) டெக்னீஷியன்

போன்ற துறைகளில் கல்வி பெறவும் நீட் தேர்வாம்!

சாதாரண ஏழை எளிய, நடுத்தர, கிராமப்புறத்தைச் சேர்ந்த முதல் தலைமுறையினர் தட்டுத் தடுமாறி மருத்துவர்களாக ஆக முடியா விட்டாலும் குறைந்தபட்சம் மருத்துவத்துறையில் – வேறு சில பணிகளில் மண்ணை அள்ளிப் போடும் ஈவு இரக்கமற்ற அதிகார வெறி பிடித்த உயர் ஜாதி ஆணவமும் ‘போங்கடா மாடு மேய்க்க!’ என்று சொல்லி வந்த – அந்தப் பழைய வக்கிரப்புத்தியும் மீண்டும் தலைதூக்கி விட்டது. காரணம் இந்திய ஆட்சி பார்ப்பனிய ஆர்.எஸ்.எஸின் கையில் பலமாக சிக்கிக் கொண்டு இருப்பதுதான்!

97 விழுக்காடு உள்ள ‘பஞ்சம’, ‘சூத்திர’ சிறுபான்மை மக்களே! என்ன செய்ய உத்தேசம்?

குறட்டை விட்டுத் தூங்கப் போகிறோமா… அன்றி,

‘‘தூங்கிய புலியைப் பறை கொண்டு எழுப்பினோம்!

தூய தமிழரை தமிழ்க் கொண்டு எழுப்பினோம்!

தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்!’’

என்ற புரட்சிக் கவிஞரின் பாடல் வரி உணர்ச்சியோடு துள்ளி எழப் போகிறோமா! – என்பதுதான் முக்கியம்!

தமிழர் தலைவர் ஆணையிட்டு விட்டார்… கருஞ்சட்டைச் சிங்கக் கூட்டமே, கிளர்ந்தெழு!

ஒத்த கருத்துள்ள கட்சி, இயக்கத் தோழர்களை அணுகி அழைத்து ஆர்ப்பாட்டத்தை அரிமா சேனையின் கர்ச்சனையோ என்று எதிரிகள் குலை நடுங்கும் அளவிற்கு அறநெறியோடு – அதே நேரத்தில் மறக்குணத்தோடு நடக்கட்டும்! நடக்கட்டும்! கண்டன ஆர்ப்பாட்டம்!

வரும் 31ஆம் தேதி கழக மாவட்டங்களில் எல்லாம் கிடுகிடுக்கட்டும் கண்டன ஆர்ப்பாட்டம்! மாணவர் கழகம் நடத்துகிறது என்று வறிதே இருக்க வேண்டாம்!

மாணவர் அணி முதல் காப்பாளர் வரை – கழகத்தின் அத்தனைப் பிரிவினரும் ஆர்ப்பரித்து வாரீர் தோழர்களே!

சமூகநீதி வரலாற்றில் திராவிடர் கழகத்திற்கென்று தனித்த முத்திரையுண்டு.

அந்தத் திசையில் இந்த ஆர்ப்பட்டமும் வரலாற்றுக் கல்வெட்டில் வைரக் கல்லாக மிளிரும்!

புலிப் போத்தே புறப்படுக!

உரிமைக் குரலை உயர்த்திடுக!

வெற்றி நமதே – வாழ்க பெரியார்!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *