பார்ப்பனர்களைப் புரிந்துகொள்வீர்!
புதுடில்லி, ஜன. 28 பல்கலைக்கழக மானியக் குழு ஜனவரி 13, 2026 அன்று வெளியிட்ட ‘‘உயர்கல்வி நிறு வனங்களில் சமத்துவத்தை மேம்ப டுத்துதல், ஒழுங்குமுறைகள், 2026’’ (Promotion of Equity in Higher Education Institutions Regulations, 2026) என்ற புதிய விதிமுறைகளை எதிர்த்து பார்ப்பன மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
புதிய யுஜிசி விதிமுறைகள்
உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி ரீதியான பாகுபாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு பல்கலைக்கழக மானியக்குழு புதிய விதிமுறைகளை கடந்த வாரம் அறி முகப்படுத்தி உடனடியாக இது அமலுக்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த விதிமுறைகளால் உயர்ஜாதி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்களாம்! இந்த விதிமுறையை உடனடியாக நீக்க வேண்டும் என்று கூறி உயர்ஜாதி யின மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்
‘‘புதிய விதிமுறைகளின்படி ‘‘ஜாதி பாகுபாடு’’ என்பது தழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக நடப்பவை மட்டுமே என்று வரையறுக்கப்பட்டுள்ளது. உயர்ஜாதி மாணவர்களாக நாங்களும் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி வருகிறோம்; எங்களுக்கு எதிராக நடப்பவை குறித்து இந்த விதிமுறைகள்படி புகார் அளிக்க முடியாது’’ என்று அவர்கள் கூறியுள்ளனர்.
‘‘ஒவ்வொரு கல்லூரியிலும் அமைக்கப்பட வேண்டிய ‘ஈக்விட்டி கமிட்டியில்’ உயர்ஜாதி மாணவர்களுக்கு இடம் அளிக்கப்படவில்லை. 2025 இல் வெளியிடப்பட்ட வரைவு அறிக்கையில் ‘பொய் புகார் அளிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற விதி முறை இருந்தது; ஆனால், தற்போது வெளியிடப்பட்ட இறுதி விதிமுறைகளில் அந்த அம்சம் நீக்கப்பட்டுள்ளது. இதனால் இது தவறாகப் பயன்படுத்தப்படலாம்’’ என உயர்ஜாதி மாணவர்கள் அஞ்சு கின்றனராம்!
பல்கலைக்கழக மானியக்குழு இந்த விதிமுறைகளைத் திரும்பப்பெற வேண்டும் என்று கூறி டில்லி மற்றும் உத்தரப் பிரதேசம் அரியானா மற்றும் மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வரு கின்றன. இவர்களின் முக்கிய வாதங்கள் வருமாறு:
‘‘இந்த விதிமுறைகளால் மாண வர்களுக்குள் நடக்கும் சிறிய உரை யாடல்கள் கூட பெரிதுபடுத்தப்பட்டு பொதுப்பிரிவு மாணவர்களை ‘‘குற்ற வாளிகளாகவே’ சித்தரிக்கின்றன. இதன் மூலம் கல்வி வளாகம் ஜாதிய அமைப்புகளின் கூடாரமாகவும், கட்டப்பஞ்சாயத்து செய்யும் இடமாகவும் மாறிவிடும் ஏற்கெனவே உள்ள சமூகப் பிரிவினையை இந்த புதிய விதிகள் மேலும் அதிகப்படுத்தும்’’ என்று அந்த உயர்ஜாதி மாணவர்கள் கூறுகின்றனர்.
மாவட்ட நீதிபதி
விதிமுறையை எதிர்த்துப்
பதவி விலகலாம்!
இந்த விதிமுறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் மாவட்ட நீதிபதி அலங்கார் அக்னிஹோத்ரி, கடந்த ஜனவரி 26 (குடியரசு நாளில்) பதவி விலகல் கடிதம் வழங்கினார். அவரது 5 பக்க பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள காரணங்கள்:
புதிய யுஜிசி விதிமுறைகள் ‘‘கருப்புச் சட்டம்’’ போன்றவை என்றும், இது பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, குறிப்பாக பார்ப்பனச் சமூகத்திற்கு எதிரானது என்றும் அவர் குற்றம் சாட்டி யுள்ளார். ‘‘பல்கலைக்கழகங்களில் மற்றும் கல்வி நிலையங்களில் பார்ப்பன மாணவர்கள் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகின்றனர். அவர்கள் தலைமுடிக் குடுமியைப் பிடித்து இழுக்கிறார்கள். அவர்களைத் திருநங்கைகள் என்று கேலி செய்கின்றனர். பார்ப்பன மாணவர்கள் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்கள் தனது மனதைப் புண்படுத்தியதாகக்’’ குறிப்பிட்டுள்ளார். புதிய விதிமுறைகள் பார்ப்பனச் சமூகத்தின் பேச்சுரிமை மற்றும் அவர்களின் சுதந்திரமான செயல்பாட்டை முடக்கி அவர்களைக் குற்றவாளிகள் போலவும், சமூகத்தில் ஜாதிப் பாகு பாட்டை விதைக்கும் நபர்களாகவும் சித்தரித்து மக்களிடமிருந்து பார்ப்பன மாணவர்களை பிளவுபடுத்துவதாக உணர்வதால், அதற்கு எதிர்ப்பு தெரி விக்கும் வகையில் பதவி விலகுவதாக அவர் கூறியுள்ளார்.
‘எங்களப்பன் குதிருக்குள் இல்லை’ என்பார்களே, அது இதற்கு மிகவும் பொருத்தம்.
இவர்கள் ஏன் படபடக்க வேண்டும்?
ஜாதிப் பாகுபாட்டை பார்ப்பன மாணவர்கள் பார்ப்பதில்லை என்பது உண்மையானால், இவர்கள் ஏன் படபடக்க வேண்டும்?
ஒரு மாவட்ட நீதிபதியே பார்ப்பன உணர்வுடன், பதவி விலகியுள்ளார் என்றால், பார்ப்பனர்களின் அந்த ஆதிக்க உயர்ஜாதி மனப்பான்மை அகலவில்லை என்பதைப் பச்சையாக வெளிப்படுத்துகிறதே!
