சென்னை, ஜன.27- குடியரசு நாளையொட்டி தமிழ்நாடு ஆளுநர் ஏற்பாடு செய்த தேநீர் விருந்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.
தேநீர் விருந்து
ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம்.
அந்த வகையில், 77ஆவது குடியரசு தினம் நேற்று (26.1.2026) கொண்டாடப்பட்ட நிலையில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி மாலை 4.30 மணிக்கு தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இதையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், மற்றும் அரசியல் கட்சிதலைவர்களுக்கு ஆளுநர் மாளிகை சார்பில் முன்கூட்டியே அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.
புறக்கணிப்பு
இந்நிலையில், முன்பே அறிவித்திருந்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் கள் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை புறக்கணித்தனர். அதேநேரத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தலைமைச் செயலர் என்.முருகானந்தம் பங்கேற்றார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.சிறீவஸ்தவா மற்றும் நீதிபதிகள் கலந்துகொண்டனர். ஏற்கெனவே அறிவித்தபடி, திமுக மற்றும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்தன.
அதிமுக சார்பில் மேனாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ப..வளர்மதி, பா.பெஞ்சமின், பாஜக சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அய்ஜேகே நிறுவனர் பாரிவேந்தர், புதியநீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி, பாமக எம்எல்ஏக்கள் சிவக்குமார், வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் விருந்தில் கலந்துகொண்டனர்.
ஆளுநர் மாளிகை சார்பில் பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு பாரதியார் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பரிசுகளை வழங்கினார்.
மேலும், அதிக கொடிநாள் நிதி வசூலித்து சாதனை படைத்ததற்காக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவுக்கு சுழற்கேடயத்தை வழங்கினார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
