திருச்சி, ஜன. 27 – திருச்சி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 52ஆவது ஆண்டு விழா 24.01.2026 அன்று மாலை 3 மணியளவில் பள்ளி வளாகத்தில் உள்ள கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அரங்கில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பள்ளியின் செயலர் முனைவர் வீ.அன்புராஜ் தலைமையேற்க, சிறப்பு விருந்தினராக பள்ளியின் முன்னாள் மாணவியும், பொறியாளரும் விஞ்ஞானியும் ஆன பொறியாளர் ஜெயபாரதி சேது ராமன், (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், இந்திய அரசுப் பணி) பங்கேற்றார்.
சிறப்பு விருந்தினருக்கு வரவேற்பு
மொழி வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் பள்ளி மாணவியர் தங்கள் கண்கவர் வரவேற்பு நடனம் மூலம் அனை வரையும் வரவேற்றனர். பள்ளியின் 11ஆம் வகுப்பு பா.தேவர்சினி ஆண்டுவிழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். பள்ளியின் செயலர் முனைவர் வீ.அன்புராஜ் வருகை புரிந்த சிறப்பு விருந்தினருக்கு பயனாடை மற்றும் சிறப்பு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார். பின்பு பள்ளியின் தலைமையாசிரியர் சு.பாக்கிய லெட்சுமி 2025-2026ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வாசித்து, பள்ளியின் சாதனைகளைப் பட்டியலிட்டார்.
அதனைத் தொடர்ந்து பெரியாரின் கொள்கைகளான பெண்ணுரிமை, இடஒதுக்கீடு, அறிவியல் மனப்பான்மை, பள்ளி வயதில் கைப்பேசி பயன்படுத்துவதினால் ஏற்படும் சீர்கேடுகள் ஆகியவை அடங்கிய தமிழ் நாடகம், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் திறன், கையெழுத்துப் பயிற்சி, செயற்கை நுண்ணறிவின் நிறை குறைகள், குழந்தைத் திருமணம், ஆணாதிக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆங்கில நாடகத்தையும், கிராமிய நடனம், மேற்கத்திய நடனம், பேசாமல் கருத்துகளை மட்டும் வெளிப்படுத்தும் மைம், புரட்சி நடனம் ஆகியவற்றை செய்து காட்டி கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்தளித்தனர்.
மாணவிகளுக்கு விருது
வழங்கி சிறப்பிப்பு
வழங்கி சிறப்பிப்பு
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார், இப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியை க.திலகவதி, பெரியார் கல்வி வளாகத்தின் அனைத்து முதல்வர்கள், தலைமையாசிரியர்கள், மற்றும் திருச்சி மாவட்ட திராவிட கழகத் தலைவர் ஆகியோர் விழாவில் பங்கேற்று விழாவினை சிறப்பித்தனர்.
2024-2025ஆம் கல்வியாண்டில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிப்பில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவியர்களுக்கு விருது வழங்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து 100 சதவீத வருகைப்பதிவு பெற்ற மாணவிகளுக்கும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
2024-2025ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் இயற்பியல் பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற எஸ். சுபசிறீ என்ற மாணவிக்கு சித்தார்த்தன் கணபதி நினைவாக ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
மாணவிகளுக்கு
பரிசுத்தொகை வழங்கல்
பரிசுத்தொகை வழங்கல்
டாக்ர் தசரதன் திலகவதி அவர்களால் வழங்கப்படும் பரிசுத்தொகை நாகம் மையார் குழந்தைகள் இல்லத்தில் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற ப.காயத்ரி என்ற மாணவிக்கும், 10ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற சு.தீப்திகா என்ற மாணவிக்கும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
2024-2025ஆம் கல்வியாண்டில் அரசுப் பொதுத் தேர்வில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சியை ஈட்டித் தந்த ஆசிரியர்களுக்கு, செயலர் அவர்களால் ரொக்கப்பரிசுகள் வழங்கப் பட்டன.
சிறப்பு விருந்தினர் உரை
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற விஞ்ஞானி – பொறியாளர் Er. ஜெயபாரதி சேதுராமன் (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், இந்திய அரசு) ஆற்றிய சிறப்புரையில் தான் விஞ்ஞானி பொறியாளர் என்பதைத் தாண்டி இப்பள்ளியின் மேனாள் மாணவி என்பதிலேயே பெருமைப்படுவதாக கூறினார்.
31 ஆண்டுகளுக்கு முன்பு இப்பள்ளியின் ஒரு தனித்தன்மை என்னவென்றால் பெண்களுக்கு இருக்கின்ற திறமைகளை வெளிப்படுத்துவதற்கு ஏற்ற பள்ளி. ஏழை எளிய பெண் குழந்தைகள் கல்வி கற்பதற்கு ஏற்றப் பள்ளியாகவும், அதே சமயம் அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய பள்ளியாகவும் இருந்தது. நான் இன்று இவ்வளவு பொpய விஞ்ஞானியாக மாறியதற்கு காரணம் இப்பள்ளியே. அன்று Internet, E-mail, Smart Phone ஆகிய அனைத்து தகவல் தொடர்புச் சாதனங்களும் எங்கள் ஆசிரியர்களே. தமிழ் வழியில் படித்தாலும் அனைத்து சவால்களையும் சிறப்பாக எதிர்கொள்வதற்கு இப்பள்ளியே காரணம் என பள்ளியின் பெருமைகளை எடுத்துக்கூறினார்.
பள்ளிச் செயலர் உரை
பள்ளியின் செயலர் தனது உரையில் பெற்றோர்கள் எவ்வளவு வேலைகள் இருந்தாலும் அரைமணி நேரமாவது தன்னுடைய பிள்ளைகளுடன் மனம் விட்டு பேசவேண்டும். அவர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நீங்கள் பேச வேண்டும். அவர்கள் சரியாக இருப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும். ஆசிரியர்கள் எவ்வளவு தான் மாணவிகளிடம் அறிவுரை வழங்கினாலும் நீங்கள் தங்கள் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுவது மிக மிக முக்கியம். பெண்கல்வி உயர வேண்டும் என்ற நோக்கில் மணியம்மையாரால் தொடங்கப்பட்ட இப்பள்ளி இன்று பெரிய ஆலமரமாக வளர்ந்துள்ளது. இது மேன்மேலும் சிறப்படைய வேண்டும். நம் பள்ளி சென்ற கல்வியாண்டில் பொதுத் தேர்வில் சிறப்பான வெற்றியைப் பெற்றது. இந்த ஆண்டும் சிறப்பாக வெற்றி பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
இறுதியாக 11ஆம் வகுப்பு மாணவி எஸ்.யாஸ்மின் நன்றி நவில நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
