
வெட்டிக்காடு, ஜன.27- வெட்டிக்காடு பெரியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் 22.1.2026 அன்று மாலை 5 மணியளவில் 19ஆவது ஆண்டு விழா மற்றும் 16ஆவது மழலையர் பட்டமளிப்பு விழா சரியாக 5 மணியளவில் தமிழ்மொழி வாழ்த்துடன் இனிதே விழா துவங்கப்பட்டது.
வருகை புரிந்த அனைவரையும் பள்ளியின் ஆங்கில ஆசிரியர் ரெ.போஸ்லி வரவேற்று வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மழலையர் பிரிவில் பயிலும் 46 மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினரான தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் கல்வி சார்ந்த உறுதிமொழிகளை மாணவர்கள் ஏற்கச் செய்து, பட்டமளிப்புச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். சிறப்பு விருந்தினரை சிறப்பிக்கும் வகையில் நமது கல்விக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளரான முனைவர் டி.கிருஷ்ணகுமார் மற்றும் பள்ளி முதல் இருவரும் பயனாடை மற்றும் கேடயம் வழங்கி சிறப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து சில்லத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் அய்ஸ்வர்யா பாரதி அவர்களுக்கு நம் பள்ளியின் மூத்த அறிவியல் ஆசிரியர் மா.அன்புச் செல்வியால் பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வர் சு.சாந்தி பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம் துணைவேந்தர் முனைவர் வி.இராமச்சந்திரனுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். பிறகு பள்ளி முதல்வர் 2025-2026ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை வாசித்தார்.
பதக்கங்கள் வழங்கல்
2025-2026ஆம் கல்வி ஆண்டின் கல்வியில் எல்.கே.ஜி முதல் பத்தாம் வகுப்பு வரை முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கும் ஆண்டு முழுதும் முழு வருகை புரிந்த மாணவர்களுக்கும், சீராக நேர்த்தியான உடையில் வருகை புரிந்த மாணவர்களுக்கும் 2024-2025ஆம் ஆண்டின் பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்கள் என அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை மாவட்ட கல்வி அலுவலர் வழங்கினார். தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக பள்ளியில் பணியாற்றி வரும் கணிப்பொறி ஆசிரியர் ரெ.சாந்திக்கு ரூ.10,000த்திற்கான காசோலை வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.
பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் டி.கிருஷ்ணகுமார் தனது சிறப்புரையில் நகரப்புறப் பள்ளிக்கு ஈடாக கல்வியில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல் ஒழுக்கத்தில் மேலோங்கும் விதமாக சிறப்பாக இப்பள்ளி செயல்படுகின்றது. என்பதனை பெருமிதத்தோடுதனது புகழுரையில் கூறினார்.
சிறப்பான செயல்பாடுகள்
சில்லத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் அய்ஸ்வர்யா பாரதி பள்ளியில் அனைத்து செயல்பாடுகளும் அருமையாக உள்ளது என முதல்வரை பாராட்டியும் பள்ளியின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெற்றோர்களாகிய நீங்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு தனது உரையில் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து தஞ்சை மாவட்டம் கல்வி அலுவலர் செந்தில் அவர்கள் ஆய்விற்கு வந்த பிறகு நான் கூறிய சில செயல்பாடுகள் ஏற்று கூறியபடி விரைந்து உடனடியாக பள்ளி வேலைகளை தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கிறது. உயர்தரமான கட்டட அமைப்புடன் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்து மிளிரும் வகையில் +1, +2 வகுப்புகளைக் கொண்டு வந்து மேலும் வளர்ச்சிப் பெறும் ஒரு பள்ளியாக திகழும் எனவும் பெற்றோர்களாகிய நீங்கள் மதிப்பெண்களுக்கு முக்கியமளிக்காமல் விளையாட்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து மாணவர்கள் சாதனை புரிய அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் மேலும் செல்லிடப்பேசியில் நேரத்தினை வீணடிக்காமல் மாணவர்களோடு மனம் விட்டு பேசி அன்றாட நிகழ்வுகளைக் கேட்டும் பெரியப்பா, சித்தி, தாத்தா, பாட்டி, மாமா என உறவுகளை பலப்படுத்தி வாழும் முறைக்கு வழிநடத்துங்கள் என்றும், காரணம் உயர் பதவியில் இருந்தாலும் உறவுகளின் புரிதல் தன்மையில்லாததால் பல இடர்பாடுகளுக்கு ஆளாகி முடிவும் எடுக்க முடியாமல் மாணவர்களின் மன அழுத்தமும் அதிகரிக்கிறது.
எனவே உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள் எனக் கேட்டுக் கொண்டார். உடல் வலிமை, மனவலிமை, எதிர்கால உயர்வு என அனைத்திலும் சிறந்த மாணவர்களாக விளங்க வேண்டும் எனவும், மாணவர்கள் முடிவு எடுக்க மாணவர் விருப்பம் மற்றும் பெற்றோர் விருப்பம் இரண்டும் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க மாணவர்களுக்கு உதவுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.
கலை நிகழ்ச்சிகள்
மாணவர்கள் விளையாட்டுத் துறையில் பெற்ற சிறப்பு பரிசுகளையும் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ந்து குறைந்த காலத்தில் எவ்வித தனிப் பயிற்சியும் இன்றி தனிப்பட்ட முறையில் பயிற்சியை மேற்கொண்டு நேர்த்தியான முறையில் நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைந்தது என அவ்வப்போது முதல்வரிடம் கூறி அகம் மகிழ்ந்தார்.
இறுதியாக மூத்த அறிவியல் ஆசிரியரான மா.அன்புச்செல்வி நன்றியுரை வழங்க, இனிதே விழா நாட்டுப் பண்ணுடன் முடிவுப்பெற்றது. கலை நிகழ்ச்சிகள், பரதம், பெரியார் பற்றிய ஆங்கில பேச்சு, அப்துல்கலாம் பற்றிய தமிழ்ப் பேச்சு, கருப்பு நிறத்தினிலே தந்தை பெரியார் பாடல், ரோபாட்டிக், செயற்கை நுண்ணறிவு (AI) பற்றிய ஆங்கில நாடகம், தெனாலிராமன் நகைச்சுவை நாடகம், மணிச் சட்டம், சிலம்பம், கான்வர்சேஷன் மற்றும் விழிப்புணர்வூட்டும் கருத்துகள் பொதிந்த நடன நிகழ்ச்சிகள் என அனைத்தும் சிறப்பாக நடைபெற்றன.
