63 வயதான இத்தாலியைச் சேர்ந்தவர் எலனா ஏப்ரில். இந்தப் பிரபஞ்சத்தின் கால்வாசி நிறையும், ஆற்றலும், டார்க் மேட்டர் (Dark matter) எனப்படும் கரும்பொருளால் ஆனது என்கிறார்கள் விஞ்ஞானிகள். இந்தக் கரும்பொருள் எந்த விதமான மின்காந்த அலைகளையும் வெளியிடாது, மின்காந்த அலைகளுடன் வினை புரியாது.
எலனா ஏப்ரில், க்ஸெனான் (Xenon) திரவத்தைப் பயன்படுத்தி கரும்பொருள் இருப்பதை நிறுவும் ஆராய்ச்சியின் முன்னோடி. துகள்கள் (Particles) பற்றிய உலகளாவிய ஆராய்ச்சிகளை முன்னெடுக்கும் அணு ஆராய்ச்சிக்கான அய்ரோப்பிய மய்யம் (CERN), அமெரிக்க விண்வெளி மய்யமான நாசா அமைப்பு, போன்ற முக்கிய ஆராய்ச்சி நிலையங்களின் திட்ட மேலாளராகப் பணியாற்றியுள்ளார்.
“ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காகத் தான் சேர்ன் நிறுவனத்தில் சேர்ந்தபோது, எனது தலைவர் சொன்ன விசயங்கள் என்னை ஓர் ஆராய்ச்சியாளராகப் பலப்படுத்தியது. ‘நீ சாப்பிட்டால் என்ன, சாப்பிடாவிட்டால் என்ன? தூங்கினால் என்ன, தூங்காவிட்டால் என்ன? உனக்குக் குழந்தை இருக்கிறதா? குடும்பம் இருக்கிறதா? இதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை. நான் கொடுத்த வேலை என்னாயிற்று?’, என்றுதான் அவர் ஆராய்ச்சியாளர்களைப் பற்றிக் கேட்பார். எல்லாரையும் போல, 9-5 மணி வேலை நமக்குக் கிடையாது. அது வேலை இல்லை; தேடல் என்பது புரிந்தது’. என்கிறார் எலனா.
எலனா, இரவு பகல் பாராது அயராது உழைத்ததன் விளைவாக, பிரபஞ்சத்தைப் பற்றிய பல முக்கியமானவற்றை கண்டறிந்துள்ளார்.
