வைப்பூர், ஜன. 26- திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி சார்பில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் 93ஆவது பிறந்தநாள் (சுயமரியாதை நாள் விழா) தெருமுனை பிரச்சார கூட்டம் நேற்று (23.1.2026) மாலை 6 மணியளவில் வைப்பூர் கடைவீதியில் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட இளைஞரணி செயலாளர் செ. ரவிக்குமார் தலைமையேற்றார். திருவாரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ, திருவாரூர் ஒன்றிய செயலாளர் செ.பாஸ்கரன், திமுக மய்ய கமிட்டி தலைவர் வி. தங்கசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் மாணவர் கழகத்தை சார்ந்த மு. கயல்விழி வரவேற்புரை ஆற்றினார்.
தொடர்ந்து திருவாரூர் திருவிக அரசு கல்லூரி மாணவர் வே.அறிவழகன் இன்றைய நவீன அரசியல் என்று கூறிக்கொண்டு அதில் நடக்கும் அக்கிரமங்களை தோலுரித்து தொடக்க உரையாற்றினார். மாவட்ட இளைஞரணி செயலாளர் செ ரவிக்குமார் அம்பேத்கர் ஏன் இந்துவாக இருக்க மாட்டேன் என கூறியதற்கான 22 காரணங்களை தொகுத்துக் கூறி தலைமை உரையாற்றினார்.
மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி உரையில் 93 வயதிலும் தமிழர் தலைவர் சுற்றுப்பயணம் ஒருபுறம் தொடர்ந்து இளைஞர் போல் சுழன்றடித்து சுற்றி வருகிறார். ஆகையால் இது போன்ற தெருமுனை பிரச்சாரக் கூட்டங்களை அனைத்து கிளைக் கழகங்கள் வாயிலாக இளைஞர்களை சென்றடைய செய்ய வேண்டும் என தனது கருத்துரையில் தெரிவித்தார். கழக பேச்சாளர் வழக்குரைஞர் பூவை புலிகேசி தனது சிறப்புரையில் இதற்கு முன் பேசிய இளைஞரணி மாவட்ட செயலாளர் ரவிக்குமார் மாணவர் கழக மாவட்ட தலைவர் அறிவழகன் ஆகியோர் கருத்துக்களை உள்வாங்கி ஆழமான தனது உரையை நிகழ்த்தியதை தொடர்ந்து அனைத்து கூட்டங்களிலும் இதுபோன்ற இளைஞர்களை மேடை ஏற்றும் படியும், தமிழர் தலைவர் 93ஆவது பிறந்தநாள் விழா தெருமுனை பிரச்சார கூட்டத்தில் தமிழர் தலைவர் கூறிய தந்தை பெரியாருடன் உடன்பட்டவர்களை விட பெரியாருக்கு கடன் பட்டவர்களே அதிகம் என்பதை எடுத்துக் கூறி சிறப்பு உரையாற்றினார்.
நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்தில் திருவாரூர் மாவட்டக் கழக;த தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண் காந்தி, மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வீ. மோகன், மாணவர் கழக மாவட்ட செயலாளர் அறிவுச்சுடர், திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் சக்திவேல், பாஸ்கர், சுப்பரவேலு, கருணாநிதி உள்ளிட்ட அனைத்துக் கட்சி தோழர்கள் பங்கு பெற்றனர். நிகழ்வின் இறுதியில் திராவிட மாணவர் கழகம் சார்பில் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி மாணவி ப. ஹர்ஷினி நன்றி உரை கூறினார். நிகழ்வுகளை மாவட்ட இளைஞரணி தலைவர் கோ.பிளாட்டோ ஒருங்கிணைத்தார்.
