“வரகுணபாண்டியன் சிவபதவி அடைந்த பின்னர், அவன் மைந்தனாகிய இராசராச பாண்டியன் அரியணை ஏறினான். அவனுடைய மனைவிகளுள் ஒருத்தி இசையில் வல்லவள். அவளிடத்தில் இராசராச பாண்டியன் அதிகமாக மையல் கொண்டிருந்தான். அவளுக்கும் பாணபத்திரன் மனைவிக்கும் இசை பாடுவதில் பகைமை ஏற்பட்டது. அவள் பாண்மகள் ஒருத்தியைப் பாடவிட்டுப் பாணபத்திரன் மனைவியினது செருக்கினை அடக்க வேண்டும் என்று எண்ணினாள். அதனைப் பாண்டியனிடம் அவள் தெரிவித்தாள்.
பாண்டிய மன்னன் ஈழ நாட்டிலிருந்து ஒரு பாடகியை அழைத்துப் பாணபத்திரன் மனைவிக்கும் அவளுக்கும் தன் சபையில் ஓர் இசைப் போட்டி நிகழ்த்தினான். ‘தோற்றவர் வென்றவர்க்கு அடிமையாகி விடவேண்டும்’ என்று அவன் நிபந்தனையிட்டான். இருவரும் ஒருவர் பின் ஒருவராக யாழ் வாசித்தார்கள். முதலில் அரசனின் மனக்கருத்தை அறியாத சபையினர் பாணபத்திரன் மனைவியின் பாடலையே பாராட்டிப் பேசினார்கள்; பின்னர் அரசன் ஈழ நாட்டுப் பாடகியை பாராட்டுவதைக் கண்டு அவள் பாடலையே புகழ்ந்தார்கள். இரண்டாம் நாள் போட்டியிலும் எல்லோரும் அரசன் எண்ணத்தை அறிந்து ஈழப் பாடகியே வென்றாள் என்று கூறினார்கள்.

மறுநாள் சோமசுந்தரப் பெருமான் முன்னர் இசைப் போட்டி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டு சோமசுந்தரர் முன்பு இசைப் போட்டி நடைபெற்றது. இரு பெண்களும் அருமையாக இசைத்துப் பாடல்களைப் பாடினர். பாணபத்திரர் மனைவியின் இசை மேலோங்கி இருந்தது. அவையோர் தங்களுடைய தலைகளை அசைத்துப் பேரானந்தம் அடைந்தனர். அவையில் நடுநாயகமாக அமைந்திருந்த புலவர் பெருமான் அருமை, அற்புதம் என்றார். அப்புலவர் உரையை மறுக்காமல், பாணபத்திரன் மனைவியே வென்றாள் என்று கூறினான். மறுகணமே நடுநாயகமாக அமர்ந்திருந்த புலவர் சபையோர் யாவரும் காண, மின்னலைப் போல் மறைந்தருளினார். பாண்டியன் அஞ்சி நடுங்கினான். ‘இது சிவபெருமான் திருவிளையாடலே’ என்று எல்லோரும் இன்பக் கடலில் மூழ்கினார்கள். பாண்டியன் பாணபத்திரன் மனைவிக்குப் பல பரிசுகள் வழங்கிப் பாராட்டினான் என திருவிளையாடல் புராணம் கூறியுள்ளது.
* போட்டி நடைபெறுகிறது என்றால் அதில் தீர்ப்புச் சொல்ல ஒருவர் அல்லது மூவர் வேண்டும். இங்கு நடுவர்களே இல்லாமல் போட்டி நடைபெற்றுள்ளது. அது எப்படி நியாயமான, சரியான போட்டியாகும்?” சபையில் நடுவில் அமர்ந்திருந்த புலவர் பாராட்டியதால் அவர் பாராட்டியவரே வெற்றி பெற்றதாகக் கொள்வது எப்படிச் சரியாகும்?
* இசையில் வல்லமை பெற்ற நடுவர்கள்தானே தீர்ப்புச் சொல்ல வேண்டும்? புலவர் ஒருவர் பாராட்டியதால் அதுவே தீர்ப்பு என்பது எவ்வகையில் நியாயம்? புலவர் திடீரென மறைந்ததால் அவர் சிவன் என்று முடிவு செய்தனர். சிவன் பார்வையாளரே தவிர, நடுவர் அல்ல. நடுவர் இல்லாமல் போட்டி நடத்தியதே தவறு அல்லவா?
* எல்லாப் போட்டிகளையும் கடவுள் முன் நடத்தினால் கடவுள் வந்து சிறந்த போட்டியாளரைப் பாராட்டிவிட்டு மறையுமா? போட்டியென்றால் நடுவர் வேண்டும். ஆனால், இங்கு நடுவரே இல்லை! அது எப்படிப் போட்டியாகும். சிவன் முன்னிலையில் நடந்ததே தவிர அவர் நடுவர் அல்ல. புலவராய் வந்தவர் சிவனாக இருந்தாலும் அவருக்குத் தீர்ப்புச் சொல்ல உரிமை இல்லை.
* ஒரு போட்டியின் முடிவை நடுவர்கள் கூறவேண்டும் அல்லது பெரும்பான்மை பார்வையாளர்கள் கூறவேண்டும். இரண்டும் இல்லாமல் ஒரு புலவர் பாராட்டினார். அவர் திடீரென மறைந்ததால் அது இறைத் தீர்ப்பு என்பது எப்படிச் சரியாகும்? சிவன் முன்னிலையில் தான் போட்டி நடந்தே ஒழிய, அவர் நடுவர் அல்ல.
கரிக்குருவிக்கு உபதேசம்
“சிவன் பாவம் நீக்கி அருள்வான் என்று கேள்விப்பட்ட கரிக்குருவி, நீராடிவிட்டு சோமசுந்தரக் கடவுளை வலம் வந்து வழிபட்டது.

இறைவன் அதன்மீது தன் கருணைப் பார்வையை வைத்தார், மிருத்தியுஞ்சய மந்திரத்தை அதற்கு உபதேசித்தார். உடனே அக்குருவியின் சிற்றறிவு நீங்கியது; பேரறிவு பெருகியது.
கரிக்கருவி இறைவனைப் பார்த்து, ‘தீய பறவைகள் எல்லாம் எனக்குத் துன்பம் விளைவிக்கின்றன. ஆகையால் அவற்றினின்று துன்பம் வராமல் என்னைக் காப்பாற்ற வேண்டும்’ என்று வேண்டியது. பின்னும் அக்குருவி சிவபெருமானை வணங்கி, ‘அடியேனுக்கு மிகுந்த வலிமையைத் தர வேண்டும்’ என்றும் வேண்டியது. அதன் வேண்டுதல் கேட்டு இரங்கி இறைவன் அருள்புரிந்தார்” என்கிறது திருவிளையாடல் புராணம்.
* புலி, சிங்கம் இவை மானை அடித்து உண்ணவும், மீன்கொத்திப் பறவை மீனைப் பிடித்து உண்ணவும் கடவுள் படைத்து, அதன்படியே உயிரினங்கள் வாழும்போது, பெரிய பறவைகள் குருவியைத் தாக்குவதை மட்டும் சிவன் எப்படித் தடுக்க முடியும்? அப்படித் தடுத்தார் என்றால் புலி மானை அடிப்பதையும் தடுக்க வேண்டுமல்லவா? தடுத்தாரா? இது கடவுளுக்குச் சரியா? நியாயமா? இது எப்படி அறமாகும்?
சுந்தரப் பேரம்பு எய்த விளையாடல்
“வங்கிய சேகரப்பாண்டியன் காலத்தில் விக்கிரம சோழன் என்பான் சோழநாட்டை ஆட்சி செய்து வந்தான். அவன் பாண்டியன்மீது படையெடுத்து வந்தான். பாண்டியன் சோமசுந்தரக் கடவுளை வணங்கித் தன் சேனை சிறிதாக இருக்கிறதே என்று முறையிட்டான். சிவபெருமான் போரில் துணை செய்வதாக அசரீரியாகக் கூறினார். விக்கிரம சோழனுடைய சேனை இடபமலையை நெருங்கிவிட்டது. வடநாட்டு மன்னர்களும் சோழனுக்குத் துணையாக இருந்தமையால் பாண்டியன் சேனை நிலை தளர்ந்தது. சோழன் பெருமிதம் அடைந்து வெற்றிச் சங்கை ஊதினான்.
அந்நிலையில் சோமசுந்தரக் கடவுள் ஒரு வேடனாக உருக்கொண்டு போர்க்களம் வந்து சோழர் படையுடன் போர் செய்யப் புறப்பட்டார். அவர் ஏவிய ஒவ்வோர் அம்பும் நூறு நூறு வீரர்களைக் கொன்றது. அந்த அற்புத அம்பைக் கண்டு வியந்த சோழன் ஓர் அம்பை எடுத்து அதில் சுந்தரேசர் என்று எழுதியிருப்பதைக் கண்டான். சோமசுந்தரக் கடவுளே பாண்டியனுக்கு உதவி புரிகிறார் என்று அறிந்து அவன் அஞ்சித் தன் ஊருக்குத் திரும்பிப் போனான். வடநாட்டு அரசர்கள் சோழனைப் போகவிடாமல் தடுத்து, சிறிதும் அஞ்சாமல் பாண்டியன் சேனை மீது பாணங்களை விடுத்தார்கள். வேடரான சிவபெருமான் அவற்றைத் துணிந்து அழித்தார். சோழன் புறமுதுகு இட்டு ஓடிவிட்டான். பின்னர் பாண்டியனைப் பார்த்துப் புன்முறுவல் புரிந்து மறைந்தார். வங்கிய சேகரப் பாண்டியன் பெரு மகிழ்ச்சி அடைந்தான்” என்கிறது திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
* கடவுள் என்பது மக்களுக்குப் பொது. எல்லா அரசர்களுக்கும் பொது. யார் தப்புச் செய்கிறார்களோ அவர்களுக்கு எதிராகக் கடவுள் நிற்க வேண்டும். மாறாக, தன்னை யார் வணங்குகிறார்களோ, தன்னிடம் யார் வேண்டுகோள் வைக்கிறார்களோ அவர்களுக்கு உதவுவது எப்படிச் சரியாகும்?
* கடவுள் நியாயமாக நடக்க வேண்டுமானால், சோழனை அழைத்து பாண்டியன் மீது படையெடுப்பு இன்னின்ன காரணங்களால் தப்பு. எனவே திரும்பிச் செல் என்று கூறியிருக்க வேண்டும். சிவன் கூறியிருந்தால் சோழன் அதை ஏற்றுத் திரும்பிப் போர் செய்வதை விட்டுவிட்டு அவன் போரிடாமல் சென்றிருப்பான். அப்படியெல்லாம் செய்யாமல், போர் செய்ய விட்டு இவர் ஒரு தரப்புக்கு வேடன் வடிவில் வந்து உதவுவது எப்படித் தருமமாகும்? அறமாகும்?
தருமிக்குப் பொற்கிழியளித்த திருவிளையாடல்

“செண்பகப்பாண்டியன், பெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணமா? செயற்கை மணமா? என்பதற்குச் சரியான விடை தந்தால் 1000 பொற்காசு பரிசு என்று அறிவித்தான்.
தருமி என்னும் புலவரிடம் சிவன் இந்த அய்யத்ததைத் தீர்க்கும் பாடலை எழுதி மன்னனிடம் சேர்க்கும்படி செய்தார். அது மன்னரிடம் கொடுக்கப்பட்டது. படித்துப் பார்த்த மன்னன் தன் அய்யம் தீர்ந்ததாயும், அதற்கான பரிசு இதோ என்றான்.
அப்போது நக்கீரன் குறுக்கிட்டு இப்பாடலில் பொருட் பிழை உள்ளது. எனவே, இது பரிசுக்கு உரியதல்ல என்று தடுத்தார்.
இதையறிந்த சிவன் மன்னர் அவைக்கு நேரில் வந்து என் பாடலில் என்ன பிழை என்றார். பெண்களுடைய கூந்தலுக்கு இயற்கையில் மணமில்லை, சூடும் பூக்களாலும், பூசும் தைலங்களாலும்தான் மனம் என்றார்.
தேவலோகப் பெண்களுக்குமா? என்று சிவன் கேட்க, நான் வணங்கும் உமாதேவியின் கூந்தலுக்கும் இயற்கையில் மணமில்லை என்றார் நக்கீரர்.
உடனே சிவன் தன் நெற்றிக்கண்ணைக் காட்டினார்.
“நெற்றிக்கண்ணைக் காட்டினும்
குற்றம் குற்றமே!” என்றார் நக்கீரன்.
சிவன் சினந்து நோக்க, அதன் வெப்பத்தால் நக்கீரன் பாதிக்கப்பட, பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்தார். சிவன் மறைந்தார்” என்று திருவிளையாடல் புராணம் கூறுகிறது.
* இந்தக் கதை சிவனுக்குப் பெருமை தருவதா? நக்கீரன் கூறிய கருத்து சரியானது. சிவன் பாடல்தான் தப்பு. இதில் நக்கீரனை ஏன் தண்டிக்க வேண்டும்? உண்மையைக் கூறியவரைத் தண்டிப்பது கடவுளுக்கு ஏற்புடையதா? சிவன் என்ன செய்திருக்க வேண்டும்? கடவுள் எழுதியிருப்பினும் தப்புதான் என்று கூறிய உங்கள் நேர்மை, துணிவு பாராட்டுக்குரியது என்று கூறியிருக்க வேண்டும். மாறாக நக்கீரரைத் தகித்தது (சுட்டது) நீதியற்ற செயல். இது கடவுளுக்கு ஏற்புடையதா? கடவுளைக் கேவலப்படுத்தும் இக்கதையை மக்களிடம் பரப்புவது சரியா? சிந்தியுங்கள்.
* மன்னன் சந்தேகத்தை மக்கள். அறிஞர்கள் தானே தீர்க்க வேண்டும்? இதில் சிவனுக்கு என்ன வேலை?
* மன்னன் சந்தேகம் தீர்க்கும் கவிதையை இவர் ஏன் தருமியிடம் கொடுத்தனுப்ப வேண்டும்? இது நேர்மையான செயலா? சிவனே தப்பான கருத்தைக் கவிதையில் கூறலாமா? அது அறச்செயலா?
நக்கீரனுக்குத் தமிழ் இலக்கணம் கற்பித்தது
“சோமசுந்தரப் பெருமான் தன்னை வந்து தினசரி வழிபடும் நக்கீரருக்கு தமிழ் இலக்கணம் சொல்லிக்கொடுக்க எண்ணம் கொண்டார். ஏன் எனில், இது வழாநிலைச் சொல், இது வழூஉச் சொல் என்பதை நக்கீரன் அறியாததால் தான், “தான் இயற்றிய பாடலில் குற்றம் கண்டுபிடித்தான். ஆகவே நல்ல ஒரு தமிழ் இலக்கண வித்தகரைக் கொண்டு தமிழ் இலக்கணம் கற்றுக் கொடுக்க எண்ணினார். அப்போது மீனாட்சி அம்மை, ‘அகத்திய முனிவரைக் கொண்டு கற்றுத்தரலாம்’ என்றார். உடனே அகத்திய முனிவரிடம் திருவுள்ளம் கொண்டார் இறைவன்.
இறைவன் திருவுள்ளம் அறிந்த அகத்தியர் உடனே மதுரையம்பதி வந்து இறைவனைத் தொழுது நின்றார். “மகரிசி அகத்தியரே! தமிழ்ச் சங்கத் தலைவர் நக்கீரருக்கு தமிழ் இலக்கணம் கற்றுக் கொடுக்க வேண்டும். நீங்கள் எம்மிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட அவ்விலக்கணம் அனைத்தையும் நக்கீரனுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்” என்று ஆணை பிறப்பித்தார்.
சோமசுந்தரனின் திருஆணையைச் சிரமேற்கொண்டு அகத்திய மகரிசி நக்கீரனுக்கு நன்றாகத் தெரியும் வண்ணம் செந்தமிழ் நல்லிணக்கத்தைக் கற்று கொடுத்தார்.
நக்கீரர் இலக்கணம் கற்ற பின்பு தாம் முன்பு இயற்றிய அனைத்துச் செய்யுட்களையும் ஆராய்ந்து பிழை திருத்தினார்கள். பின்பு செந்தமிழ் இலக்கணத்தை ஏனைய சங்கப் புலவர்களுக்கும் அன்புடன் போதித்தார். நக்கீரர் மூலம் அனைத்துப் புலவர்களும் சொல்லிலக்கணம் தெரிந்துகொண்டனர்” என்கிறது திருவிளையாடல் புராணம்.
* சிவன் எழுதிய பாடல் தப்பு என்பதால்தான் நக்கீரர் தப்பு என்றார். சரியாகச் சொன்ன நக்கீரருக்கு இலக்கணம் தெரியவில்லை என்பது நகைப்பிற்குரியது அல்லவா? தன் பாடலில் குற்ற கண்டு கூறிய நக்கீரனுக்கு இலக்கணம் தெரியவில்லை என்று கூற என்ன காரணம் உள்ளது? ஒரு காரணமும் இல்லையே? நக்கீரனுக்கு அகத்தியர்மூலம் இலக்கணம் சொல்லிக் கொடுத்தார் என்பது தமிழிப் புலவர்களை இழிவுபடுத்த ஆரிய பார்ப்பனர்கள் திட்டமிட்டுப் புனைந்த பித்தலாட்டக் கதையே இந்த புராணம் என்பது இதன்மூலம் விளங்குகிறது அல்லவா?
* தமிழ்ப்புலவர்களுக்கு இலக்கணம் தெரியாதா? அகத்தியர் மூலம் சிவன்தான் இலக்கணம் கற்றுத் தந்தாரா? இது தமிழ்ப் புலவர்களை இழிவுபடுத்தும் செயலல்லவா? இப்படிப்பட்ட பொய்க் கதைகளை மாணவர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பரப்புவது சரியா அறமா? நேர்மையா?
மாணிக்கவாசகரை ஆட்கொண்ட திருவிளையாடல்
“அரிமர்த்தன பாண்டியன் மாணிக்கவாசகரிடம், கீழ்த்திசைக் கடற்கரையில் நல்ல ஜாதிக் குதிரைகள் கப்பலில் வந்து இறங்கியுள்ளன. நமது குதிரைப் படைக்குத் தற்போது நல்ல குதிரைகள் வேண்டும். ஆகவே, நீங்கள் ஜாதிக் குதிரைகளை வாங்கி வர வேண்டும்” என்று பணித்தான். அரசனின் கட்டளையை ஏற்ற மாணிக்கவாசகர் சில வீரர்களுடன் கீழ்த்திசை கடற்கரையை நோக்கிப் புறப்பட்டார்.
சில நாட்கள் பிரயாணம் சென்ற பின் ஒரு இடத்தில் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்தனர். அந்த இடம் திருப்பெருந்துறை. அங்கு கூடாரம் அமைத்து உணவு உண்டபின் மாணிக்கவாசகர் அந்த இடத்தைச் சுற்றி நடந்தார்.
அங்கு கோயில்கட்ட வேண்டும் என்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டது. குதிரை வாங்க தான் கொண்டு சென்ற பொன்னைக்கொண்டு கோயில் கட்டினார். குதிரை வாங்க எந்த முயற்சியும் செய்யவில்லை.
குதிரை வராத காரணத்தை ஒற்றர்மூலம் அறிந்த பாண்டிய மன்னன் வீரர்களை அனுப்பி மாணிக்கவாசகரிடம் கேள்விகள் கேட்டான். மாணிக்கவாசகர் இறைவனிடம் வேண்டினார். அப்போது இறைவன் அசரீரி மூலம் குதிரை எல்லாம் வரும் என ஓலை எழுதி அனுப்பும்படி கூறினார்.
இரவு மாணிக்கவாசகர் கனவில், “குதிரை எல்லாம் பின்னால் வரும்; நீமுன் செல்வாயாக” என்று அறிவுறுத்தினார் இறைவன்.
மாணிக்கவாசகர் மதுரை சென்று அரிமர்த்தன பாண்டியன் முன் குதிரை எல்லாம் பின்னால் வருகின்றன என்று கூறினார்.
(தொடரும்)
