2026 தேர்தல் களமும் ஆரிய – திராவிட போரின் மற்றொரு களம் தான்
தமிழ் இனத்தின் எதிரிகளை அடையாளம் கண்டு வீழ்த்த வேண்டிய காலக்கட்டம் இது!
காஞ்சிபுரம் மண் எப்பொழுதும் திராவிட இயக்கத்தின் கோட்டை என்பதை நிரூபிப்போம்!!
காஞ்சிபுரம், ஜன.26– தமிழ் இனத்தின் எதிரிகளை அடையாளம் கண்டு வீழ்த்த வேண்டிய காலக்கட்டம் இது! காஞ்சிபுரம் மண் எப்பொழுதும் திராவிட இயக்கத்தின் கோட்டை என்பதை நிரூபிப்போம்!! என்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கக் கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.
தி.மு. கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (25.1.2026) மாலை, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு எழுச்சியுரை ஆற்றினார்.
அவரது உரை வருமாறு:
“சேனை ஒன்று தேவை! செந்தமிழைக் காப்பதற்குச் சேனை ஒன்று தேவை! பெருஞ்சேனை ஒன்று தேவை” என்று தமிழைக் காக்க முழக்கம் கேட்டதும், “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள் – நீ தேடிவந்த கோழையுள்ள நாடிதல்லவே!” என்று தமிழ்நாட்டின் வீதிகளில் இறங்கிப் போராடி, தங்களுடைய உயிரையும் தந்து, தாய்த்தமிழைக் காத்து, நாம் அனைவரும் இன்னும் தமிழராய்த் தன்மான உணர்வுடன் தலைநிமிர்ந்து நடைபோடக் காரணமான, மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம்!
வாழ்ந்து மறைந்த மொழிப்போர்
மறவர்களுக்கு வீரவணக்கம்!
“வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்!”, “உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு” என்று வாழ்ந்து மறைந்த மொழிப்போர் மறவர்களுக்கு வீரவணக்கம்!
திராவிட இயக்கத் தீரர்களே! நீங்கள் உருவாக்கிக் கொடுத்த நிலத்தில்தான் நாங்கள் வாழ்கிறோம்! மொழிப்போர் வீரர்களே! உங்கள் மூச்சுக் காற்றுதான் இப்போதும் எங்களை இயக்கிக் கொண்டிருக்கிறது! தமிழ்த்தாயின் தியாகப் பிள்ளைகளே! தலைப் பிள்ளைகளே! உங்களை வணங்குகிறேன்!
எழுச்சியோடும் உணர்ச்சியோடும் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்!
தமிழ்நாடு முழுவதும்
மொழிப்போர்த் தியாகிகள் கூட்டம்
ஆண்டுதோறும் இந்த ஜனவரி 25 ஆம் நாளை மொழிப்போர்த் தியாகிகளை நினைவுகூரும் வகையில் வீரவணக்க நாளாகக் கடைப்பிடித்துக் கொண்டு வருகிறோம்!
இன்று, தமிழ்நாடு முழுவதும் மொழிப்போர்த் தியாகிகள் கூட்டம் இதேபோன்று நடந்து கொண்டிருக்கிறது! நான் காஞ்சி மாநகருக்கு வந்திருக்கிறேன். சாதாரண காஞ்சிக்கா வந்திருக்கிறேன்? பேரறிஞர் பெருந்தகை அண்ணாவைத் தந்த காஞ்சிக்கு வந்திருக்கிறேன்! நம்மை எல்லாம் ஆளாக்கிய அன்பின் தெய்வம் அண்ணாவின் காஞ்சிக்கு வந்திருக்கிறேன்! அஞ்சி அஞ்சி வாழ்ந்த தமிழ்ச் சமூகத்தைப் பார்த்து, “ஏ தாழ்ந்த தமிழகமே!” என்று கேட்டு, இன உணர்வை ஏற்படுத்திய நம் அண்ணா பிறந்து வளர்ந்த இந்தக் காஞ்சி மண்ணுக்கு வந்திருக்கிறேன்!
பெரியாரைப் போன்ற குருவும் –
கலைஞரைப் போன்ற சிஷ்யனும் கிடைத்த
ஒரே தலைவர் பேரறிஞர் அண்ணாதான்!
வரலாற்றில் எத்தனையோ தலைவர்கள் உண்டு. அதில், அண்ணாவைப் பார்த்தால், எனக்கே சில நேரம் பொறாமையாக இருக்கும்! ஏன் தெரியுமா? பெரியாரைப் போன்ற குருவும் – கலைஞரைப் போன்ற சிஷ்யனும் கிடைத்த ஒரே தலைவர் பேரறிஞர் அண்ணாதான்! எல்லாத் தாயும், தன்னுடைய பிள்ளைக்குப் பெயர் வைப்பார்கள். ஆனால், நம் தாய்நாட்டுக்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் வைத்த தலைமகன் பேரறிஞர் அண்ணாதான்! அப்படிப்பட்ட அண்ணாவின் ஊரில், அவர் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் பேசுவதே, எனக்குக் கிடைத்த பெருமை.
மிக மிக உணர்ச்சிமயமான மனநிலையில் இங்கு உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன்! என்னுடைய அரசியல் பயணத்துக்கு எத்தனையோ உந்து சக்திகள் இருக்கலாம். ஆனால், அனைத்திற்கும் சிகரம் வைத்ததுபோன்று இருந்த உந்துசக்தி எது என்று கேட்டால், அது இந்தக் காஞ்சி நகரம்தான்.
13 வயதில் ‘கோபாலபுரம்
இளைஞர் தி.மு.க.’
என்னுடைய 13 வயதிலேயே ‘கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.’ அமைப்பை ஏற்படுத்திப் பல நிகழ்ச்சிகளை நான் நடத்திக் கொண்டு இருந்தது அனைவருக்கும் தெரிந்ததுதான்! அந்த வகையில், 1971 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா துயில் கொண்டிருக்கும் நினைவி டத்தில், மலர்வளையம் வைத்து வணங்கி, அங்கிருந்து, அண்ணா ஜோதியை கையில் ஏந்தி, தொடர் ஓட்டமாகப் புறப்பட்டு, காஞ்சிபுரத்தில் நடந்து கொண்டு இருந்த தி.மு.க. மாநாட்டு மேடையில் தலைவர் கலைஞர் கரத்தில் கொண்டு வந்து நான் அண்ணா ஜோதியை ஒப்படைத்தேன். அப்போது, நம்முடைய தலைவர் கலைஞருக்குப் பக்கத்தில் அன்றைய பொதுச்செயலாளர் நாவலரும், தி.மு.கழகப் பொருளாளர் எம்.ஜி.ஆர். அவர்களும் இருந்தார்கள். கையில் அண்ணா சுடரேந்தி அன்று தொடங்கிய ஓட்டம், இப்போது வரை ஓயவில்லை! அதே காஞ்சிக்குத்தான், இன்றைக்கு மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த வந்திருக்கிறேன்.
சில நாள்களுக்கு முன்னர், சென்னை வந்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நமக்கு மொழிப்பாடம் எடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார். எல்.கே.ஜி. பையன், பேராசிரியருக்குப் பாடம் எடுப்பது போன்று இருக்கிறது அவருடைய செயல்பாடு!
தமிழ்ப் போராளிகளின்
பரம்பரையில் வந்தவர்கள் நாம்!
தமிழ்நாட்டிற்குள் ஹிந்தித் திணிப்பை அனுமதிக்க மாட்டோம் என்று சொன்ன காரணத்துக்காக, நமக்குத் தர வேண்டிய 3 ஆயிரத்து 548 கோடி ரூபாய் நிதியைத் தராமல் இருப்பவர்தான் இந்த பிரதான்! “3 ஆயிரம், 5 ஆயிரம், ஏன் பத்தாயிரம் கோடி கொடுத்தாலும், மும்மொழித் திட்டத்தை ஏற்க மாட்டோம்!” என்று சொன்னவன்தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். பணத்தையும், அதிகாரத்தையும் காட்டி மிரட்டினால் பணிந்து செல்ல, நாம் என்ன அடிமைகளா? அண்ணா, கலைஞர் போன்ற தமிழ்ப் போராளிகளின் பரம்பரையில் வந்தவர்கள் நாம்! அதுமட்டுமல்ல, மொழிப்போர் வீரர்களான நடராசன் – தாளமுத்து – ராசேந்திரன் போன்றவர்களின் கொள்கை உணர்ச்சி எனக்குள் ஓடிய காரணத்தினால்தான், அப்படிச் சொன்னேன்!
உங்களால் தமிழ்நாட்டை
வீழ்த்த முடியாது!
1938 இல் இருந்து ஹிந்தித் திணிப்புக்கு எதிராக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். ஹிந்தி என்பது வெறும் மொழித் திணிப்பு மட்டுமல்ல! அது பண்பாட்டுப் படையெடுப்பு! இந்தியா முழுவதும் ஹிந்தியின் ஆதிக்கத்துக்கு எத்தனை மொழிகள் பலியாயின? ஹிந்தியை ஒதுக்கி, நாம் ஆங்கிலத்தைத் தொடரச் செய்ததால் தமிழ்நாடு எப்படி வளர்ந்தது என்று கடந்த ஆண்டு நான் ஒரு கடிதத் தொடர் எழுதினேன். இந்திய அளவில் அதற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. பல்வேறு மொழிபேசும் மக்கள், என்னுடைய பதிவுகளுக்குக்கீழ், தங்களுடைய மொழி ஹிந்தியால் அழிந்தது எவ்வாறு என்று பகிர்ந்து கொண்டார்கள். அதுபோன்று தமிழ்நாட்டை அடிமைப்படுத்த வேண்டும் என்றுதான் காலந்தோறும் டில்லி நம் மீது படையெடுத்து வருகிறது! நாம் பார்க்காத படையெடுப்பா! நீங்கள் எத்தனை முறை வந்தாலும் சரி, எத்தனை துரோகிகள், அடிமைகள், அரசியல் கோமாளிகள், கோழைகளை துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும் சரி, உங்களால் தமிழ்நாட்டை வீழ்த்த முடியாது!
உறுதியுடன் சொல்கிறேன்… ‘டபுள் எஞ்சின்’ என்று சொல்லி வடமாநில மக்களை ஏமாற்றி, அவர்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் உங்கள் ‘டப்பா எஞ்சின்’ தமிழ்நாட்டில் ஓடவே ஓடாது! 2021 இல் பெற்ற தோல்வியில் இருந்து எந்தப் பாடமும் கற்றுக் கொள்ளாமல், மறுபடியும் கொத்தடிமைக் கூட்டமான அ.தி.மு.க.வின் தோளில் அமர்ந்து பா.ஜ.க. வருகிறது.
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில்
பல கோடி ரூபாய் போதைப்பொருள்!
தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி, போதை மருந்து நடமாட்டம் இங்கே அதிகமாகிவிட்டது என்று பொத்தாம் பொதுவாகப் பிரதமர் பதவியில் இருந்து அவர் பேசிவிட்டுச் செல்வது சரியல்ல! நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் துறைமுகங்கள் வழியாகக் கடத்தப்பட்ட 11 ஆயிரத்து 311 கோடி ரூபாய் அளவிலான போதைப் பொருள் பிடிபட்டிருக்கிறது என்று ஒன்றிய அரசு தெரிவித்திருக்கிறது. அதில் பெரும்பாலானவை குஜராத் மற்றும் மகாராட்டிரா மாநிலத் துறைமுகங்களில்தான் சிக்கியிருக்கிறது. இந்த மாநிலங்களில் யார் ஆட்சி செய்கிறார்கள்? தி.மு.க.வா? இல்லையே! உங்கள் ஆட்சிதானே நடக்கிறது? ‘டபுள் எஞ்சின்’ என்று சொல்லும், ‘டப்பா எஞ்சின்’ தானே அங்கு ஓடுகிறது?
இந்தியாவுக்குள் போதைப் பொருள் நுழைவதைத் தடுக்க வேண்டியது, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும்தான். இந்த ஸ்டாலின் இல்லை. மகாராட்டிரா சென்று பேச வேண்டியதை, மதுராந்தகத்திற்கு வந்து பேசிவிட்டுச் செல்வது நியாயமா?
கண்டனத்திற்குரியது!
அடுத்து, தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று வேறு பிரதமர் அவர்கள் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். புதுமைப்பெண், விடியல் பயணம், உரிமைத்தொகை, தோழி விடுதி என்று பெண்களுக்காக நாங்கள் செயல்படுத்தும் திட்டங்களால் பெண்களின் சமூகப் பங்களிப்பு தமிழ்நாட்டில்தான் அதிகமாக இருக்கிறது! அதிகமான மாணவிகள் கல்லூரிகளுக்குப் படிக்க வருவது தமிழ்நாட்டில்தான்! இந்தியாவிலேயே அதிகமான பெண்கள் தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பதும் தமிழ்நாட்டில்தான். இது எதுவும் தெரியாமல், ஆளுநர் ரவி போன்றே பிரதமர் அவர்களும் பேசுவது மிகமிக கண்டனத்துக்குரியது.
அய்ந்து மாத கர்ப்பிணிப் பெண்ணான பில்கிஸ் பானு அவர்களைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது உங்கள் குஜராத் அரசுதானே? உலகமே அதிர்ச்சி அடைந்தார்களே! உச்சநீதிமன்றமே அதை ரத்து செய்ததே! நீங்கள் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசலாமா? அதுவும், ‘பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது’ என்று சட்டமன்றத்தில் தடைச்சட்டம் நிறைவேற்றி இருக்கும் இந்த ஸ்டாலின் அரசைப் பற்றிநீங்கள் பேசுவதற்கு உங்களுக்கு யோக்கியதை இருக்கிறதா? அருகதை இருக்கிறதா? குற்றங்கள் அதிகமாக நடக்கிறது என்று பிரதமர் அவர்கள் பேச நினைத்தால், பா.ஜ.க. ஆளும் உத்தரப்பிரதேசம் சென்றுதான் பேச வேண்டும்! மணிப்பூரில் சென்றுகூடப் பேசுங்கள்!
எங்கள் ஈராயிரம் ஆண்டுப் போரைத் தொடர்ந்திடுவோம்!
பா.ஜ.க.வின் ஏவல் படையாகச் செயல்படும் புலனாய்வு அமைப்புகளை வைத்துக் கொண்டு, தி.மு.க.வை மிரட்டிப் பார்க்கலாம், பணிய வைக்கலாம் என்று நினைத்தால், மக்கள் ஆதரவுடன் அதை எதிர்கொள்ளும் உறுதி தி.மு.க.விற்கு இருக்கிறது! நாங்கள் பணிய மாட்டோம். துணிந்து ஒரு கை பார்ப்போம்! மண் – மொழி – மானம் காத்திடும் எங்கள் ஈராயிரம் ஆண்டுப் போரைத் தொடர்ந்திடுவோம்!
தமிழ்நாடு வன்முறைக் காடு ஆகாமல்
தடுக்கப்பட வேண்டும்
2026 தேர்தல் களமும் ஆரிய – திராவிடப் போரின் மற்றொரு களம்தான்! தமிழ்ப் பண்பாட்டை அழிக்க நினைக்கும் அரசியல் எதிரிகளையும், அந்த எதிரிகளின் கூலி பட்டாளமாகிவிட்ட அடிமைகளையும் எதிர்கொண்டு வெற்றியை உறுதிசெய்யும் களம்தான், இந்தக் களம்!
பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மண்ணிலிருந்து நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, தி.மு. கழக உடன்பிறப்புகளே, கூட்டணித் தோழர்களே, தோழமை இயக்கத்தவர்களே, உங்கள் பரப்புரையை இன்றே தொடங்குங்கள்.
அய்ந்து ஆண்டுகளாக நாம் மக்களுக்குச் செய்துகொண்டு வரும் நலத் திட்டங்கள் தொடர வேண்டும் என்றால், ‘திராவிட மாடல்’ அரசு தொடர வேண்டும்! உத்தரப் பிரதேசம் போன்று, மணிப்பூர் போன்று, தமிழ்நாடு வன்முறைக் காடு ஆகாமல் தடுக்கப்பட வேண்டும்.
டில்லியின் ஆதிக்கத்துக்கு,
தமிழ்நாடு என்றைக்கும் தலைகுனியாது!
திராவிட மாடல் அரசு தொடர, கழகம் ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க, மொழிப்போர் ஈகியர்களின் தியாகத்தின் மீது உறுதி எடுப்போம்!
பேரறிஞரைத் தந்த அண்ணாவின் காஞ்சியில் இருந்து நான் உறுதியாகச் சொல்கிறேன். டில்லியின் ஆதிக்கத்துக்கு, தமிழ்நாடு என்றைக்கும் தலைகுனியாது! மீண்டும் சொல்கிறேன், டில்லியின் ஆதிக்கத்துக்கு, தமிழ்நாடு என்றைக்கும் தலைகுனியாது! தீ பரவட்டும்! வெல்வோம் ஒன்றாக!
நன்றி, வணக்கம்!
இவ்வாறு தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.
