சென்னை, ஜன. 26- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.1.2026) தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சென்னை, மூலக் கொத்தளத்தில் அமைந்துள்ள தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரின் நினை விடத்தில் வீர வணக்கம் செலுத்தினார்.
மேலும், சென்னை, எழும்பூர் தாள முத்து -– நடராசன் மாளிகை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவாளர்கள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரது மார்பளவு திருவுருவச்சிலைகளை திறந்து வைத்தார்.
தியாகிகளுக்கு மரியாதை
இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்று உயிர் நீத்த தோழர்கள் நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரது தியாகத்தைப் போற்றும் வண்ணம் நினைவிடத்தை சென்னை மூலக்கொத்தளத்தில் தந்தை பெரியார் அடிகோலி திறந்து வைத்தார். இந்த நினைவிடத்தினைப் பொலிவேற்றம் செய்திடவும். ஜனவரித் திங்கள் 25ஆம் நாளை “தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாள்” என்னும் பெயரில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எனவும் அறிவித்து ஆணையிடப்பட்டதைத் தொடர்ந்து, 25.1.2025 அன்று பொலி வேற்றம் செய்யப்பட்ட நினைவிடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும், இந்நிகழ்வின்போது “மொழிப் போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிர்நீத்த தாளமுத்து– – நடராசன் ஆகிய இருவருக்கும் சென்னை, எழும்பூரில் உள்ள தாளமுத்து -– நடராசன் மாளிகை வளாகத்தில் திருவுருவச்சிலை நிறுவப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அவ்வகையில், தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளினை முன்னிட்டு 25.1.2026 அன்று முதலமைச்சர் சென்னை, மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள தமிழ்மொழித் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரின் நினைவிடத்தில் வீர வணக்கம் செலுத்தினார். முன்னதாக தியாகிகள் நினைவு நாளையொட்டி நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு வீர முழக்கங்கள் எழுப்பினார். மேலும், மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள சமூகப் போராளி டாக்டர். எஸ்.தருமாம் பாள் அம்மையாரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
சிலைகள் திறப்பு
பின்னர் சென்னை, எழும்பூர் தாளமுத்து -– நடராசன் மாளிகை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரது மார்பளவு திருவுருவச் சிலைகளை முதலமைச்சர் திறந்து வைத்தார். பின்னர், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் வைக்கப்பட்டிருந்த ஒளிப்படக் காட்சிகளைப் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சிகளில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் சுதர்சனம், தாயகம்கவி, ஆர்.டி.சேகர், ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், அய்ட்ரீம் மூர்த்தி, கே.பி.சங்கர், க.கணபதி, அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகரராஜா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
