திராவிடர் இயக்கம் வரவேண்டிய அவசியம் என்ன?

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

3 பேர் 97 பேரிடம் பேதத்தை உண்டாக்கிப் படித்தவன், படிக்காதவன் –
ஆண் உயர்வு, பெண் தாழ்வு என்றாக்கி வாய்ப்புகளைப் பறித்துக் கொண்டனர்
அதை மீட்கத்தான் திராவிடர் இயக்கம் வந்தது; சாதித்தது!

திராவிடர் இயக்கம் தோற்றுவாய் பற்றி கழகத் தலைவர் விளக்கம்!

தூத்துக்குடி, ஜன.25. ‘‘சமூக நீதி நாள், சமத்துவ நாள், சமத்துவப் பொங்கல் எனப் பல சாதனைகளை செய்த திராவிட மாடல் ஆட்சியை ஒழிக்க நினைக்கிறார்கள்” என்றும், ‘‘ஆரியத்துக்கு சமத்துவம் என்ற சொல்லே எரிச்சலை உண்டாக்குகிறது” என்றும் தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி உரையாற்றினார்.

கொள்கை முழக்கமிட்டு கழகத் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், “இதுதான் ஆர்.எஸ்.எஸ். – இதுதான் பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – இதுதான் திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பிலான தொடர் கூட்டம் 22.01.2026  அன்று மாலை 5 மணியளவில், வி.வி.டி.சிக்னல் அருகில் அப்பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த சாலையின் இருபுறமும் கழகக் கொடிகள் காற்றில் பட்டொளி வீசிப் பறந்தன. கொடி மரத்தில் குழல் விளக்குகள் கட்டப்பட்டு ஒளிர்ந்து கொண்டிருந்தன. ஆங்காங்கே பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன. கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை 7 மணியளவில் நிகழ்விடத்திற்கு வருகை தந்தார். மாவட்டக் கழகத்தின் சார்பில் எழுச்சிகரமான; நரம்புகளை முறுக்கேற்றும் வகையிலான கொள்கை முழக்கங்களோடு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அச்சமயம் கழகத்தின் சொற்பெருக்காளர் தஞ்சை இரா.பெரியார் செல்வம் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து சுற்றுப்பயண ஒருங்கிணைப்பாளரும், கழக மாநில ஒருங்கிணைப்பாளருமான உரத்தநாடு இரா.குணசேகரன் இயக்கப் புத்தகங்களைக் காட்டி, அதன் தலைப்புகளை உச்சரித்து, வாங்கிப் படித்து பரப்பும்படி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து, கழகத்தலைவருக்கு கழக மாணவர் கழகத் தோழர்களும், உள்ளூர் பிரமுகர்களும், அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பொறுப்பாளர்களும் பயனாடை அணிவித்து மரியாதை செய்தனர். மாவட்டக் கழகம் சார்பிலும் மரியாதை செய்யப்பட்டது.

நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் மு.முனியசாமி தலைமை ஏற்க, மாவட்டச் செயலாளர் கோ.முருகன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் சொ.பொன்ராஜ், மாவட்டக் காப்பாளர் மா.பால் ராசேந்திரம் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் ச.வெங்கட்ராமன், மாவட்டத் துணைத் தலைவர் இரா.ஆழ்வார், மாவட்ட துணைச் செயலாளர் செ.செல்லத்துரை, மாநகரத் தலைவர் த.பெரியார் தாசன், மாநகர ப.க. செயலாளர் சு.புத்தன், மாவட்ட தொழிலாளரணிச் செயலாளர் த.நாகராசன், மாவட்ட வழக்குரைஞரணித் தலைவர் ப.இராசேந்திரன், மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர் ந.செல்வம், பெரியார் பெருந்தொண்டர் கி.கோபால்சாமி, திருச்செந்தூர் ஒன்றியத் தலைவர் து.கவுசிக், திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் வே.சுதர்சன், தென்காசி மாவட்டச் செயலாளர் சண்முகம், விடுதலைப் பரப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் விக்டர்,  மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி பொறுப்பாளர் மோ.அன்பழகன், ம.தி.மு.க. மீனவரணி பொறுப்பாளர் நக்கீரன், வி.சி.க. மாவட்டச் செயலாளர் வழ.சார்லஸ், புரட்சிகர இளைஞர் முன்னணி செயலாளர் சுஜித், சமூக செயற்பாட்டாளர் அகமது இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். தொடர்ந்து, பெரியார்  உலகம் நிதியளிப்பு நிகழ்வு நடைபெற்றது. அதன் பிறகு கழகத் தலைவர் உரையாற்ற அழைக்கப்பட்டார்.

உலகின் புதுமையாக உருவாகி வரும் பெரியார் உலகம்

ஆசிரியர் தமது உரையை, “இனி வரும் தலைமுறைக்கு இப்படி ஒரு இயக்கமா? இப்படி ஒரு தலைவரா? என்று உலகம் வியக்கக்கூடிய அளவுக்கு பெரியார் உலகம் அமைய உள்ளது. அதற்கு நன்கொடை வழங்கிய அனைவருக்கும் எமது தலை தாழ்ந்த நன்றிகள்” என்று தொடங்கினார். அடுத்து, “அடுத்த மாதம் தேர்தல் அறிவிப்பு வெளியாக இருக்கிறது. தேர்தலில் நிற்காத நாங்கள், தேர்தலில் நிற்பவர்களை விட அதிக அக்கறை காட்டுகிறோம் என்பது உங்களுக்கு விசித்திரமாக இருக்கலாம்” என்று கேள்வி கேட்டு, “நாங்கள் அடுத்த தேர்தலைப் பற்றி கவலைப்படுகிறவர்கள் அல்ல, அடுத்த தலைமுறையைப் பற்றி கவலைப்படுகிறவர்கள். ஆகவே தான் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்து உங்கள்:முன்னால் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறோம்” என்று பதில் சொன்னார். தொடர்ந்து, “தமிழ்நாட்டில் திராவிடர் இயக்கம் வரவேண்டிய அவசியம் என்ன?” என்று கேட்டு, “3 பேராக இருப்பவர்கள் 97 பேரிடம் பேதத்தை; பிரிவினையை உண்டாக்கி விட்டார்கள். அதிலும் படிக்கக்கூடியவர்கள், படிக்கக்கூடாதவர்கள் என்றும், ஆண்கள் உயர்ந்தவர்கள், பெண்கள் தாழ்ந்தவர்கள் என்று பாலினத்தினத்திலும் பிரித்து, கல்வி வேலை வாய்ப்புகளை தட்டிப்பறித்து விட்டார்கள். இதை எதிர்த்து மீண்டும் பழையபடி மாற்றுவதற்கு தான் திராவிடர் இயக்கம் உருவானது” என்று அதற்கு விளக்கம் சொன்னார்.

வரப் போகும் தேர்தல் – தத்துவப் போராட்டமே!

மேலும் அவர், ”வரப்போவது வெறும் தேர்தல் போராட்டம் அல்ல. மனுதர்மத்திற்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கும் இடையில் நடைபெறும் தத்துவப் போராட்டம். குலக்கல்வி வந்தால், மறுபடியும் நாம் அடிமைகள் தான்” என்றும், அதன் பின்னணியில் இருக்கும் மனுதர்மம் என்ன சொல்கிறது என்பதைச் சொல்ல, “’சூத்திரனுக்கு அறிவைக் கொடுக்காதே சண்டை வந்தால் சூத்திரன் எந்தப்பக்கம் இருக்கிறானோ அந்தப்பக்கத்துக்கே தண்டனை கொடு’ – என்கிறது மனுதர்மம்” என்பதை நினைவுபடுத்தினார். அது எவ்வளவு பெரிய ஆபத்தானது என்பதை, ”அந்த மனுதர்மத்தைத் தான் அரசியலமைப்புச் சட்டமாக்கத் துடிக்கிறார்கள்” என்று சொல்லி, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. வின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தினார். அதுவும் போதாதென்று, அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய, “இந்து மதம் எங்கே போகிறது?” எனும் புத்தகத்திலிருந்து, ஆரியர் வருகை பற்றியும், காடு, மலைகளை தாண்ட முடியாத அவர்களுடன் வந்த பெண்களை அங்கேயே விட்டு வந்தார்கள் என்றும், ஆனால் மனுஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தார்கள் என்றும், மனுதர்மத்தின் மூலத்திற்கே சென்று, அதுவும் இந்து மதத்தின் மிக முக்கிய தலைவர் ஒருவர் எழுதியதையே எடுத்துக்காட்டாக்கினார். பின்னர், அந்த மனு தர்மம் என்ன சொல்கிறது என்பதை விளக்க, “சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் அறிவைக் கொடுக்காதே; சூத்திரன் எந்தப்பக்கம் இருக்கிறானோ அந்தப்பக்கத்திற்கே தண்டனை கொடு” என்று மனுதர்மத்தில் எழுதப்பட்டிருக்கிறது என்று, ’அசல் மனுதர்மம்’ புத்தகத்தை எடுத்துக் காட்டியபடி சொன்னார்.

சமூகநீதி – சமத்துவ நாள்,
திராவிடர் திருநாள் கொண்டாடட்டங்கள்

தொடர்ந்து, அதற்கு எதிராக நீதிக்கட்சியில் தொடங்கி, பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் சமத்துவத்தைப் போற்றியதை சுட்டிக்காட்டினார். அவர்களின் தொடர்ச்சியாக இன்றைய திராவிட மாடல் அரசின் நாயகர் மு.க.ஸ்டாலின் தந்தை பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாள் என்றும், பாபா சாகேப் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாள் என்றும், திராவிடர்களின் திருநாளான பொங்கலை சமத்துவப் பொங்கல் என்றெல்லாம் கொண்டாடுவதை உள்ளத்தில் பதியும் எடுத்துரைத்தார். இன்றைய தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு கல்விக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதை பட்டியலிட்டுவிட்டு, மறுபடியும் குலக்கல்வி வந்தால், நமது மடியில் மடிக்கணினி இருக்காது என்பதையும் சேர்த்துச் சொன்னார். தொடர்ந்து, “ஒண்ட வந்த பிடாரிகள் நம்மை ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். நமக்காக பல்வேறு உரிமைகளைப் பெற்றுத் தந்த இந்த திராவிட மாடல் ஆட்சியை ஒழிக்க நினைக்கிறார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

நெருக்கடிகளை சமாளிக்கின்ற முதலமைச்சர்

தேர்தல் நேரத்தில் மக்கள் ஆற்ற வேண்டிய பணிகளையும் சுட்டிக் காட்டத் தவறவில்லை அவர். அதாவது, “பா.ஜ.க. காரர்கள் தேர்தல் நேரத்தில் ஓட்டுக் கேட்க வருவார்கள். அவர்களிடம், தூத்துக்குடியில் வெள்ளப் பேரிடர் ஏற்பட்டதே… நிவாரணமாக எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்?” என்றும், ”எங்களிடம் ஓட்டுக் கேட்டு வருவதற்கு உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது” என்றும் கேள்விகளை எழுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். இறுதியாக தன்னாட்சி பெற்ற அரசு நிறுவனங்களை வைத்துக்கொண்டு, தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தாலும் நமது முதலமைச்சர்  அதை திறமையாக சமாளித்து வருகிறார். ஆகவே தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றி எங்களுக்காக அல்ல, மக்களின் மான வாழ்வு நீடிக்க வேண்டும். பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் பெற்றுத்தந்த உரிமைகள் தொடர வேண்டும். அதற்காக வாக்களியுங்கள்” என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார். நிகழ்ச்சியில் கழகத் தோழர்கள், அனைத்துக் கட்சியையும் சேர்ந்த தோழர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் நிறைவாக மாவட்ட வழக்குரைஞர் அணிச் செயலாளர் இ.ஞா.திரவியம் நன்றி கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *