‘கேட்ச் பிடிச்சுக்கோ!’
மேனாள் அ.தி.மு.க. அமைச்சர் செல்லூர் ராஜூ, சங்கர மடத்திற்குச் சென்றுள்ளார் (வாழ்க அண்ணா நாமம்).
‘ஆசீர்வாதம்’ என்ற பெயரில், ஆரஞ்சு பழத்தைத் தூக்கிப் போட்டார் சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி! அதை செல்லூர் ராஜூவும், அவரது மனைவியும் ‘கேட்ச்’ பிடித்தனர்!
ஒரு மேனாள் அமைச்சராகவும், மக்கள் பிரதிநிதியாகவும் இருந்த ஒருவர், சங்கராச்சாரியாரின் முன்னால் இப்படி பழத்திற்காகக் காத்திருந்து, ‘கேட்ச் பிடிப்பது’ எத்தகைய அவலம்!
பழத்தைக் கையில் கொடுக்காமல், தூக்கிப் போடுவது ஒருவகை தீண்டாமைதானே! மேனாள் அமைச்சராக இருந்தாலும் அவர், ஹிந்து சாஸ்திரப்படி ‘சூத்திரர்’ என்பதால்தான் இப்படி நடத்தப்படுகிறார் என்பதற்கு ஆராய்ச்சித் தேவையா?
செல்லூர் ராஜூ, தலைவராக ஏற்றுக் கொண்ட எம்.ஜி.ஆரும் (முதலமைச்சர்), காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியும் பங்கேற்ற நிகழ்ச்சியொன்று சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் நடைபெற்றது (1.7.1981).
அப்பொழுதுகூட எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோதிலும், ஒரு சால்வையை தானே நேரிடையாகப் போர்த்தாமல், தனது சீடக் கோடி ஒருவர்மூலம் அணிவிக்கச் செய்தார் என்பதை நினைவூட்டுவது இந்த இடத்தில் பொருத்தமானதாகும்.
அதேநேரத்தில், சுப்பிரமணிய சாமி, காஞ்சி மடத்திற்குச் செல்லும்போது, சங்கராச்சாரியாருடன் சரிக்குச் சமமாக ஆசனத்தில் அமர முடிகிறது.
இதற்கு என்ன காரணம் என்பதை அண்ணா பெயரில் உள்ள கட்சியின் (அண்ணா தி.மு.க.) மேனாள் அமைச்சர் அறிவாரா?
காஞ்சிபுரத்தில் தானே அண்ணா இருந்தார்! ஒரே ஒரு தடவையாவது சங்கராச்சாரியார் மடத்தை எட்டிப் பார்த்திருப்பாரா?
‘அண்ணா’ இவர்களுக்கெல்லாம் ஒரு ‘லேபிள்’ அவ்வளவுதான்!
‘அண்ணா நாமம் வாழ்க’ என்று இவர்கள் சொல்லுவது எல்லாம் – ‘‘அண்ணா கொள்கைக்குப் பட்டை நாமம்’’ என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்!
– மயிலாடன்
