28.1.2026 அன்றைய
‘துக்ளக்’குக்குப் பதிலடிகள்
கேள்வி (1): குடும்பத்தோடு கடவுள் முன் வி.அய்.பி.களாக. தமிழக அமைச்சர்கள் வலம் வருவது சரியா?
பதில்: உதயநிதி, ஆ.ராசா, கி.வீரமணி போன்றவர்கள் செய்யும் ஹிந்து தெய்வ நிந்தனைக்குப் பரிகாரம் தேட, அமைச்சர்கள் வேறு என்ன செய்வார்கள்?
பதிலடி: ஆர்.எஸ்.எஸில் அறிவாளி என்று சொந்தம் கொண்டாடும் வி.டி.சாவர்க்கரின் கடவுளைப் பற்றிய கருத்து என்ன? “God is not the creater or controller of human destiny – மனிதனைப் படைப்பவரோ, ஆதிக்கம் செய்யவோ கடவுள் இல்லை.”

அற்புதங்கள், அவதாரங்கள், பூஜை புனஷ்காரங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்தானே விநாயக் தாமோதர் சாவர்க்கர் – இவரை என்ன செய்ய உத்தேசம்?
‘கல்கி’ அட்டைப்படத்தில் தந்தை பெரியாரின் படத்தை அலங்கரித்து – ‘தென்னாட்டு ஜாபாலி பெரியார்!’ என்று குறிப்பிட்டதே! அந்த ஜாபாலி தசரதன் அமைச்சரவையில் இருந்த நாத்திகர் என்று வால்மீகி இராமாயணம் கூறுகிறதே – என்ன பதில்?
1971இல் சேலத்தில் நடந்ததாகப் பிரச்சாரம் செய்ததே துக்ளக் – தேர்தல் முடிவு என்ன? புத்தியிருந்தால் சிந்திக்கட்டும்!
* * * * *
கேள்வி (2): மனிதனைப் பிரித்துப் பார்ப்பது ஜாதியா, மதமா, அரசியலா?
பதில்: ஜாதியையும், மதத்தையும் அடிப்படையாகக் கொண்ட திராவிட மாடல் அரசியல்.

பதிலடி: பாரதீய ஜனதா கட்சி என்பதற்குப் பதிலாக திராவிட மாடல் அரசியல் என்று வந்திருப்பது அச்சுப்பிழை!
இந்து ராஜ்ஜியத்தை அமைப்போம் என்பவர்கள் யார்? ஸநாதனத்தைக் காப்போம் (ஸநாதனம் என்றால் வருண தருமம் – சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதியின் ‘தெய்வத்தின் குரல்’ முதல் பாகம் பக். 282) என்று கூறுவது தானே சங் பரிவார்க் கூட்டம்.
இதை அப்படியே தலைகீழாக மாற்றி – திராவிட மாடல் அரசு மீது சுமத்துவது பார்ப்பனர்களுக்கே உரித்தான ஜகதாளப் பித்தலாட்டம்!
* * * * *
கேள்வி (3): ஈ.வெ.ரா., அண்ணாதுரை படங்களை தனது விழாக்களில் வைத்து விட்டு, ‘தி.மு.க.வைத் தீயசக்தி’ என்று கூறுகிறாரே நடிகர் விஜய்?
பதில்: அந்தத் தீயசக்தியை உருவாக்கியவர்கள் அவர்கள் என்று காட்டத்தானோ?
பதிலடி: ஒழுக்கம் முக்கியமல்ல – கடவுள் பக்தி தான் முக்கியம் என்று கூறும் (‘கல்கி’ 8.1.1958) காஞ்சி சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதியின் படத்தை – தனது படுக்கை அறையில் கூட மாட்டி வைத்து, தூங்கி எழுந்தவுடன் அந்த ‘மகான்’ முகத்தில் தான் விழிப்பேன் என்று கூறும் குருமூர்த்திகள் தீய சக்திகளைப் பற்றிப் பேச அருகதை உண்டா?
“பக்தி தனிச் சொத்து – ஒழுக்கம் பொதுச் சொத்து!” (பச்சையப்பன் கல்லூரியில் பேசிய உரையிலிருந்து, 24.11.1964) என்றவர் தந்தை பெரியார் – வாழ்ந்து காட்டிய தலைவரும் அவரே!
* * * * *
கேள்வி (4): ‘கலைஞர் என்றால் பேனாதான் ஞாபகத்துக்கு வரும்’ என்று உதயநிதி கூறுவது எதற்காக?
பதில்: ஊழல்தான் ஞாபகம் வரும் என்று கூறுவதைத் தவிர்க்கவே, பேனாதான் ஞாபகத்துக்கு வரும் என்கிறார்.
பதிலடி: பார்ப்பனிய ஸநாதனத்தின் மூளையை நோக்கி வெடித்த துப்பாக்கிதான் கலைஞரின் பேனா – அதனால் தான் இந்த ஆத்திரம்! “தட்சணையைக் கோயில் உண்டியலில் போடாதே! அர்ச்சகரின் தட்டில் போடுங்கள்” என்று சட்ட விரோதமாகச் சொன்னவர் தானே இந்தியாவின் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்! பக்தியா – பணமா என்றால் பணம்தான் என்று கருதுகிற கூட்டமா ஊழலைப் பற்றிப் பேசுவது! இந்தியாவில் முதன் முதலாக ஊழலில் சிக்கியவர் – அவாள்தான் – ஆம் டி.டி.கிருஷ்ணமாச்சாரி!
* * * * *
கேள்வி (5): “மஹாபாரதம் மண்ணுக்கு, ராமாயணம் பெண்ணுக்கு என்றால் பகவத் கீதை..”
பதில்: மண், பெண், பொன் அனைத்தும் மாயை என்பதற்கு.
பதிலடி: அப்படியா? பாவயோனியில் பிறந்தவர்கள் பெண்கள் என்று ‘பகவான் கிருஷ்ணன்’ கீதையில் கூறியிருக்கிறாரே! (கீதை அத்தியாயம் 9, சுலோகம் 32).
இவர்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறக்கிற அளவுக்கு மதக் குடிப் போதை மண்டையில் ஏறியிருக்கிறது.
யார் அந்தப் பகவான் கிருஷ்ணன்? பாகவதத்தில் (10ஆம் ஸ்கந்தம்) கிருஷ்ண லீலைகள் என்று வருகிறதே, அந்தக் கிருஷ்ணனால் அருளப்பட்டது தானே குருமூர்த்தி கூறும் அந்தக் கீதை?
அந்தப் ‘பாகவதம்’ எப்படிப்பட்டது? ஒரு முறை ‘கல்கி’ சதாசிவம் ராஜாஜியிடம் கேட்டுக் கொண்டதும், அதற்கு ராஜாஜி கூறிய பதிலும் அவாளுக்குச் “சுவை”யாக இருந்தாலும் இருக்கும்!
“வியாசர் விருந்து” என்ற தலைப்பிலும், “சக்கரவர்த்தி திருமகன்” என்ற தலைப்பிலும், மகாபாரதத்தையும், ராமாயணத்தையும் ‘கல்கி’யில் தொடராக ராஜாஜி எழுதி வந்தது அன்பர்களுக்குத் தெரியும். அதன் பின்னர் பாகவதத்தை எளிய தமிழில் எழுதலாமே என்று சதாசிவம் தமது யோசனையை ராஜாஜியிடம் வெளியிட்டார். அதற்கு ராஜாஜி கூறிய பதில் சிந்திக்க வைப்பதாகும்.
“சதாசிவம், எனக்குப் பாகவதத்தில் நாட்டமில்லை. அதில் பகவானின் லீலைகளும், அற்புதங்களும் மிகுதியாக உள்ளன” என்று குறிப்பிட்டார் (‘கல்கி’, 4.10.2009 பக்கம். 72).
பகவான் கிருஷ்ணனின் லீலைகள் ஆபாசமாக உள்ளன என்பதை ‘நாகரிகமாக’ ‘மிகுதியாக’ உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார் ஆச்சாரியார்.
என்ன குருமூர்த்தியாரே, எங்கு சென்றாலும் இடிக்கிறதோ?
* * * * *
கேள்வி (6): மகிழ்ச்சியின் எல்லை எது ?
பதில்: நம்மை விட உடல்நலம், மனம், செல்வம் அதிகமாக இருப்பவர்களைப் பார்த்து, அவர்களைப் போல நாம் இல்லையே என்று ஏங்குவதை நிறுத்தி, நம்மை விடத் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களைப் பார்த்து, அவர்களுக்கு இல்லாதது நம்மிடம் இருக்கிறதே என்று திருப்தி அடையும் நிலை.
பதிலடி: இதெல்லாம் அவாள் அவாள் ‘கர்மபலன்’ – தலையெழுத்து என்று சொல்வீர்களே – இப்பொழுது இங்கே ஏன் நழுவுகிறேள்?
* * * * *
கேள்வி (7): ‘மது போதையையும், அதைவிட ஆபத்தான மத வாத அரசியல் போதையையும் தமிழகத்துக்குள் நுழைய விடாமல் தடுக்க, நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும்’ என்கிறாரே முதல்வர் ஸ்டாலின்?
பதில்: ஹிந்து மத எதிர்ப்பு அரசியல் போதையைத் தந்த திராவிட அரசியல்தான், ஹிந்து மத அரசியல் எழுச்சிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.
பதிலடி: ஒருவன் பிறக்கும் போதே மேல் ஜாதி, கீழ் ஜாதி – இது பகவான் ஏற்பாடு என்றும், கீழ் ஜாதிக்காரன் (சூத்திரன்), விபச்சாரி மகன், பெண்கள் பாவ யோனியில் பிறந்தவர்கள் என்றும் எழுதி வைத்திருப்பதை எல்லாம் எதிர்த்துக் கேட்டால், அது ஹிந்து மத எதிர்ப்பு அரசியல் எழுச்சிக்கு அழைப்பு விடுத்திருக்கிறது என்று பொருளா?
அறிவு நாணயம் இருந்தால் ஹிந்து மதத்தில் இப்படி எல்லாம் எழுதி வைக்கப்படுகிறது என்று எழுச்சிக் கொப்பளிக்க வீதியில் வந்து சொல்லுங்கள் பார்ப்போம்! மரத்தின் மறைவில் ஒளிந்து கொண்டு வாலியைக் கொன்ற கோழை ராமன் தானே இவாளின் கடவுள் அவதாரம்!
* * * * *
கேள்வி (8): ஈ.வெ.ரா.வின் கொள்கைகளை கிறிஸ்தவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?
பதில்: ஹிந்து மதத்தைப் பற்றிக் கேவலமாகப் பேசிய ஈ.வெ.ரா. கொள்கைகளை கிறிஸ்தவர்கள் ஏற்கலாம். இயேசு கிறிஸ்துவைப் பற்றிக் கேவலமாகப் பேசிய ஈ.வெ.ரா. கொள்கைகளை அவர்களால் ஏற்க முடியாது.
பதிலடி: ஜீன்மஸ்லியரின் மரண சாசனம், இங்கர்சாலின் கடவுள், பெர்ட்ரண்ட் ரசலின் “நான் ஏன் கிறித்தவன் அல்ல’ போன்ற நூல்களை தந்தை பெரியார் வெளியிட்டு இருக்கிறாரே! டார்வின் எழுதிய (1859) ‘உயிர்களின் தோற்றம்’ (on the origin of species by means of natural science) தொடக்கத்தில் கிறித்தவர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டது – தடை செய்யவும் பட்டது. டார்வினை ஒரு குரங்கு போல் கேலிச்சித்திரம் தீட்டினர்.
பிற்காலத்தில் கிறித்தவர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர். 1882இல் டார்வின் மறைந்த போது அவரது அறிவியல் பங்களிப்பை உணர்ந்தனர். புகழ்பெற்ற வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அய்சக் நியூட்டனுக்கு அருகில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
1996ஆம் ஆண்டில் போப் ஜான்பால் II தொடக்கத்தில் டார்வினின் கண்டுபிடிப்பு பைபிளுக்கு எதிரானது என்று கூறி, கடுமையாக விமர்சிக்கப்பட்டதற்காகவும், கண்டித்ததற்காகவும் வெளிப்படையாக வருத்தம் தெரிவித்தார்
அதேபோல கலிலியோ பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்று அறிவியல் ரீதியாகக் கண்டுபிடித்ததற்காக – அது பைபிளுக்கு விரோதமான கருத்து என்று கூறி வாழ்நாள் முழுவதும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
அவரது நூலான “Dialogue on the Two Chief World Systems” (1632) தடை செய்யப்பட்டது.
போப் ஜான்பால் II – 1992 அக்டோபர் 31 அன்று வாட்டிகனில் வெளியிட்ட ஓர் அறிக்கையில், கலிலியோ மீதான தண்டனைக்கு வருத்தம் தெரிவித்தார்.
இத்தகைய பண்பாடும், நாகரிகமும, அறிவு நாணயமும் கிறித்தவர்களுக்கு இருந்தது போல ஹிந்து மதவாதிகளுக்கு, சங்கராச்சாரியார்களுக்கு உண்டா?
தீண்டாமை ஷேமகரமானது என்று சொன்ன சங்கராச்சாரியார் சந்திர சேகரேந்திர சரஸ்வதிதானே குருமூர்த்திகளுக்கு மகான் – ஜெகத் குரு!
* * * * *
கேள்வி (9): ‘பிணத்தை சுடுகாட்டில்தான் எரிக்க…’ என்பது போன்று அமைச்சர் பெருமக்கள் தரம் தாழ்ந்து பேச ஆரம்பிக்கக் காரணம் என்ன?
பதில்: “தி.மு.க.வின் ஆபாசம்” என்று 50 ஆண்டுகளுக்கு முன், பழ.கருப்பையா ஒரு புத்தகம் எழுதினார். அவர்களது ஆபாசம் இன்னும் நிற்கவில்லை.
பதிலடி: போகாத கட்சி இல்லை என்ற ‘பெருமை’க்குரிய வரை துணைக்கழைத்துள்ளது ‘துக்ளக்!’ அந்தோ பரிதாபம்.
தனது மனைவியின் அங்க மச்ச அடையாளங்களை (அந்தரங்கங்களை உட்பட) அனுமானிடம் சொன்னான் ராமன் என்று கம்பன் எழுதியது ஆபாசம் இல்லை என்றால், இவர்கள் எத்தனை மடங்கு ஆபாசப் புத்திரர்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
கடவுள் காவியம் என்று சொல்லிக் கொள்ளும் நூலின் ஆபாசத்தை வெளிப்டுத்தினால் அதற்குப் பெயர் ஆபாசமாம்.
தனது மனைவியின் அந்தரங்கங்கள் உட்பட அடையாளம் சொன்னது ஆபாசம் இல்லையாம்! இதனை ஆபாசம் என்று எழுதியதுதான் ஆபாசமாம்! இவர்களின் மனுநீதிப் புத்தியை என்ன சொல்ல!
கேள்வி (10): ‘ஜாதி, மத மோதல்கள்தான் தற்போதைய முக்கியப் பிரச்னை. இரு பிரிவினரிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் மத்திய மந்திரிகளே செயல்படுகிறார்கள்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளாரே?
பதில்: திருப்பரங்குன்றம் மலை மீது ஹிந்துக்கள் தீபம் ஏற்றினால் வெறுப்புணர்வு, இஸ்லாமியர்கள் தங்கள் கொடியை ஏற்றினால் நல்லுணர்வு என்கிறார் ஸ்டாலின்.
பதிலடி: பிஜேபியினர் திருப்பரங்குன்றம் பிரச்சினையை இத்தனை ஆண்டு காலம் எழுப்பாமல் சட்மன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திடீர் சாம்பார் திடீர் இட்லி போல – இப்பொழுது கிளப்புவது – மதவாதத்தை வைத்து அரசியல் லாபம் தேடும் ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. கும்பலின் வழக்கமான செயல்பாடு தானே!
திருப்பரங்குன்றம் பிரச்சினையை வைத்து வழக்கமான தங்கள் மதவாத திருவிளையாடலை நடத்திப் பார்க்கலாம் என்று சதித்திட்டம் போட்டார்கள் – அந்தோ பாவம்! உள்ளூர் இந்து – முஸ்லீம் மக்களே முகத்தடி கொடுத்து விட்டனர்.
கடையடைப்பு என்று எல்லாம் கடை விரித்தார்கள் – பிசுபிசுத்தது மட்டுமல்லாமல் வெளியூர்க்காரர்களுக்கு இங்கு என்ன வேலை? நாங்கள் தாயாய்ப் பிள்ளையாயப் பழகிக் கொண்டிருக்கிறோம். உங்கள் அரசியல் சித்து விளையாட்டுகளை எல்லாம் எங்கேயாவது வைத்துக் கொள்ளுங்கள் – இங்கு வேண்டாம் என்று உள்ளூர்க்காரர்களே சொன்ன நிலையில், தங்கள் திட்டம் பலிக்கவில்லையே என்ற விரக்தியில் எதை எதையோ எழுதித் தொலைக்கிறார் திருவாளர் குருமூர்த்தி அய்யர்வாள்!
* * * * *
கேள்வி (11): நாலரை ஆண்டுகளாக தொகுதிப் பக்கமே செல்லாத சட்டசபை உறுப்பினர் செல்வப் பெருந்தகையை, மாநில காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுத்த காங்கிரஸின் செயல்பாடு நகைச்சுவையைத் தரவில்லையா?
பதில்: காங்கிரஸில் ‘இ. வி. எம். மோசடி’, ‘ஓட்டுத் திருட்டு’, ‘எஸ்.அய். ஆர். ஓட்டுக்கொள்ளை’ என்ற பெரிய பெரிய தொடர் நகைச்சுவை நாடகங்களில் இது ஒரு சிறிய ஜோக்தான்.
பதிலடி: கதவு எண் 0 (பூஜ்ஜியம்), அதில் குடியிருக்கும் வாக்காளர்கள் 300, 400 பேர் என்று (எஸ்.அய்.ஆர்) சொல்வதை எல்லாம் நம்ப வேண்டுமோ! “கேட்பவன் கேனயனாக இருந்தால் எருமை மாடு ஏரோப்பிளான் ஓட்டும்” என்பானாம்! அந்தக் கதைதான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது!
* * * * *
கேள்வி (12): பங்களாதேஷில் தொடரும் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் குறித்து?
பதில்: ஹிந்துக்கள் சிறுபான்மையினராகவும், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராகவும் இருக்கும் பாகிஸ்தான், வங்கதேசம் இரண்டிலும் ஹிந்துக்கள் வாழமுடியாது. இதைத்தான் அன்று பாகிஸ்தானில் நடந்ததும், இன்று வங்கதேசத்தில் நடப்பதும் நிரூபிக்கிறது.
பதிலடி: குஜராத் கலவரத்தையும், பாபர் மசூதி இடிப்பையும் மறந்து விட்டார்கள். மதவாதத் தீவட்டியை யார் தூக்கினாலும் ஆபத்துதான் – கண்டிக் கத்தக்கதுதான் – ஒடுக்கப்பட வேண்டியது தான்.
* * * * *
கேள்வி (13): தி.மு.க. தலைவர்கள், ‘அ.தி.மு.க.தான் எங்களுக்குப் போட்டி’ என்று கூறுவதும், அ.தி.மு.க. தலைவர்கள், ‘தி.மு.க.தான் எங்களுக்குப் போட்டி’ என்று கூறுவதையும் பார்த்தால், மற்ற யாருடனும் போட்டி போட வியூகம் இல்லையா?
பதில்: பங்காளிகளான எங்களுக்குள் சண்டை இருந்தாலும், பங்காளிகளான எங்களுக்குத்தான் – தமிழ்நாடு சொந்தம் என்பது இரு கழகங்களின் நினைப்பு.
பதிலடி: அணைத்து அழிப்பது தானே சங்பரிவார்க் கும்பலின் சதிக்குணம். மகாராட்டிரத்தில் என்ன நடந்தது? தமிழ்நாட்டில் அதிமுக கூடாரத்தைக் காலி செய்து, இரண்டாவது இடத்திற்கு வர வேண்டும் என்கிற நரித்தந்திரம் தான் பிஜேபி யினுடையது!
பச்சை போல படர்ந்திருப்பதைக் கண்டு பாய்ந்தால், அதற்கும் கீழே இருக்கும் படுகுழியில் வீழ்ந்து சாக வேண்டியதுதான். பா.ஜ.க. – இது ஒரு படு குழி – அதிமுகவுக்கு எச்சரிக்கை!
