சென்னை, ஜன. 24– ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் வெளியிட்ட தலையங்கத்தில், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் சட்டமன்ற கூட்டத் தொடரில் உரையை வாசிக்காமல் ஆளுநர்கள் வெளியேறியதில் எந்த அர்த்தமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மரபின்படி செயல்பட மறுப்பது அனைவரும் அறிந்ததே என்றும் கூறியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் கேரள ஆளுநர் அர்லெகர் ஆகியோர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் கொள்கை தொடர்பான உரையை வாசித்து அரசியலமைப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இந்திய நாடாளுன்ற ஜனநாயகம், பிரிட்டன் நாடாளுமன்ற மாதிரியை அடிப்படையாக கொண்டது என்று குறிப்பிட்டுள்ள தி இந்து தலையங்கம், அந்தநாட்டில் கூட அரசு தயாரித்த உரையை மன்னர் புறக்கணித்ததில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
மாநில அரசுகளின் குரலாக ஆளுநர்கள் செயல்படுவதை தவிர வேறுவழியில்லை என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் குறிப்பிட்டதையும் மேற்கோள்காட்டியுள்ளது. ஆளுநர் ஆர்.என். ரவியின் தொடர்ச்சியான மரபு மீறல்களால், ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஆளுநர் உரையுடன் தொடங்க வேண்டும் என்ற நடைமுறையை நீக்க அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் ‘தி இந்து’ நாளேடு தெரிவித்துள்ளது.
அரசியலமைப்பின் விழுமியங்களுக்கு மதிப்பளித்து முன்மாதிரியாக திகழ வேண்டுமே தவிர, இல்லாத அதிகாரத்தை இருப்பதாகக் கருதி ஆளுநர்கள் செயல்படக்கூடாது என்று ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது.
