டாவோசில் (சுவிட்சர்லாந்து) நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) ஆண்டுக் கூட்டத்தில் அன்று உரையாற்றிய கனடா பிரதமர் மார்க் கார்னி, பன்னாட்டு அரசியல் மற்றும் அய்ரோப்பாவின் எதிர்காலம் குறித்து மிகக் கடுமையான கருத்துகளைப் பதிவு செய்தார். பிரெஞ்சு மொழியில் அவர் ஆற்றிய இந்த உரை, உலகத் தலைவர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுயமரியாதைதான் ஜனநாயகத்தின் உயிர்நாடி
தனது உரையில், சுயமரியாதையின் அவசியத்தை வலியுறுத்திய மார்க் கார்னி, “எந்தவொரு நெருக்கடி வந்தபோதிலும் நாம் சுயமரியாதையை இழக்கக் கூடாது. அப்படி இழந்தால் அது அடிமைத்தனத்திற்குச் சமம்.
இன்று அய்ரோப்பிய நாடுகள் தங்களின் சுயமரியாதையைத் தக்கவைத்துக் கொள்ளப் போகிறதா அல்லது அடிமைத்தனத்தைத் தேர்ந்தெடுக்கப் போகிறதா என்பதைத் தீர்மானிக்க வேண்டிய வரலாற்றுத் தருணத்தில் நிற்கின்றன” என்று குறிப்பிட்டார்.
அதிகாரத்திற்கு அடிபணியக் கூடாது
“யாரோ ஒரு வல்லரசின் பின்னால் கைகட்டிச் செல்வது உண்மையான ஜனநாயகம் ஆகாது” என்று சாடிய அவர், “தற்காலிக லாபங்களுக்காகவோ அல்லது மிரட்டல்களுக்காகவோ தலைவணங்குவது நிரந்தர அடிமைத்தனத்திற்கு வழிவகுக்கும்” என எச்சரித்தார். “வளைந்து கொடுப்பதற்கும் அடங்கிப் போவதற்கும் வித்தியாசம் உண்டு. இன்று பணியத் தொடங்கினால், அது நமது வருங்காலத்தை அடகு வைப்பதற்குச் சமம்” என்றார்.
அய்ரோப்பா ஒருபோதும்
‘பரிதாபத்திற்குரிய அடிமை’ அல்ல
பன்னாட்டு அரசியலில் டொனால்ட் டிரம்ப் போன்ற தலைவர்களின் அணுகுமுறையைச் சுட்டிக்காட்டும் விதமாகப் பேசிய மார்க் கார்னி, “அய்ரோப்பா ஒருபோதும் ஒரு பரிதாபத்திற்குரிய அடிமையாக (Pitiful Slave) மாறக் கூடாது. அய்ரோப்பாவின் கலாச்சாரம் மற்றும் ஜனநாயக விழுமியங்கள் மிக உயர்ந்தவை. வல்லரசுகளின் ஆணைக்குக் கட்டுப்பட்டு நடப்பதற்காக மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதில்லை” எனத் தெரிவித்தார்.
அய்ரோப்பா தனது தனித்துவத்தையும், இறையாண்மையையும் நிலைநாட்ட வேண்டிய தருணம் இதுவென்று வலியுறுத்திய அவரது இந்தப் பேச்சு, உலக அரங்கில் கனடாவின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் க்ரீன்லாந்து, கனடா, வெனிசுலா நாடுகளை அமெரிக்க அய்க்கிய நாட்டின் வரைபடத்தோடு இணைத்து வெளியிட்டு இதுவும் அமெரிக்காவோடு இணையும் என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், “நாங்கள் ஒன்றும் அடிமை அல்ல” என்று டாவோஸ் மாநாட்டில் அவருக்கு முன்பாகவே சுயமரியாதைப் பாடம் எடுத்த மார்க் கார்னியின் இந்த உரை உலகம் எங்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது
(குறிப்பு: உலகத் தலைவர்கள் நிரம்பிய இந்த மாநாட்டில் அவரது தாய்மொழியான பிரெஞ்சு மொழியில் உரை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.)
