சிறீநகர், ஜன. 23- ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் 200 அடி ஆழ பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்த விபத்தில் 10 வீரர்கள் உயிரிழந்தனர். 11 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்காக ராணுவ வாகனம் ஒன்று நேற்று (22.1.2026) சென்று கொண்டிருந்தது. குண்டு துளைக்காத இந்த வாகனத்தில் 20-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் இருந்தனர்.
இந்நிலையில் பதேர்வா-சம்பா சாலையில், 9,000 அடி உயரம் உள்ள கன்னி டாப் பகுதியில் செல்லும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், 200 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அந்த வாகனம் உருக்குலைந்தது.
மோசமான வானிலை: விபத்து குறித்து ராணுவத்தின் ஒயிட்நைட் படைப் பிரிவு வெளியிட்டுள்ள ‘எக்ஸ்’ பதிவில், ‘ஒரு ராணுவ நடவடிக்கைக்காக துருப்புகளை ஏற்றிச் சென்ற வாகனம் தோடாவில் ஆபத்தான நிலப்பரப்பில் பயணித்தபோது மோசமான வானிலை காரணமாக சாலையில் இருந்து தவறிவிழுந்தது’ என்று கூறப் பட்டுள்ளது.
விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்தில் ராணுவம் மற்றும் காவல் துறையினர் உடனடியாக மீட்புப் பணிகளை தொடங்கினர். இதில் 4 வீரர்கள் சடலமாகவும் 17 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். காயம் அடைந்தவீரர்கள் பதேர்வா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இங்கு சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்தனர். இதனால் விபத்தில் உயிரிழந்த வீரர்கள் எண்ணிக்கை 10 ஆகஉயர்ந்தது. 11 வீரர்கள் உயர் சிகிச்சைக்காக உதம்பூர் ராணுவ மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
