சுயமரியாதை இயக்கம் ; ஈரோட்டுக்கு அடுத்து விருதுநகர்தான் பெருமை கொண்டது! விருதுநகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் புகழாரம்

6 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

விருதுநகர்.ஜன.23, ‘‘தி.மு.க. ஆட்சி ஜூம்லா ஆட்சி அல்ல, செயல்படும் ஆட்சி!” என்றும், ‘‘பொதுமக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை பொதுக் கூட்டங்களின் வாயிலாகக் கொடுத்ததுதான் திராவிடர் இயக்கம் செய்த சாதனை” என்றும் விருதுநகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

‘‘இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பிலான தொடர் பொதுக் கூட்டங்களின் அடுத்ததாக, விருதுநகர் திராவிடர் கழகம் சார்பில், 21.01.2026 அன்று மாலை 5 மணியளவில் மொழிப்போர் வீரர் சங்கரலிங்கனார் திடலில் மிகச்சிறப்பாக அப்பொதுக் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் கா.நல்லதம்பி தலைமையில், மாவட்டச் செயலாளர் விடுதலை தி.ஆதவன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கழகப் பொதுக்குழு உறுப்பினர் வெ.புகழேந்தி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைத் தலைவா் ந.ஆனந்தம், ராஜபாளையம் மாவட்டகழகத் தலைவர் பூ.சிவக்குமார், மாவட்டச் செயலாளர் இரா.கோவிந்தன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பூ.பத்மநாபன், 97 வயது முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் தங்கசாமி, விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவரும் சாத்தூர் நகர்மன்றத் துணைத் தலைவருமான பா.அசோக் ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பித்தனர். கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து, சி.பி.அய். மாவட்டச் செயலாளர் தோழர் செந்தில்குமார், சி.பி.எம்.மாவட்டச் செயலாளர் ஆ.குருசாமி, தி.மு.க.நகரச் செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.ஆர்.மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

97 வயது பெரியார் பெருந்தொண்டருக்கு
தமிழர் தலைவர் வாழ்த்து

மாலை 7 மணியளவில் கழகத் தலைவர் நிகழ்விடத்திற்கு வருகை தந்தார். மாவட்டக் கழகத்தின் சார்பில் எழுச்சிகரமான வரவேற்பு வழங்கப்பட்டது. தொடக்க உரைக்குப் பின்னர், மாநில ஒருங்கிணைப்பாளரும், பிரச்சாரக் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான ஒரத்தநாடு இரா.குணசேகரன், இயக்கப் புத்தகங்களை அறிமுகப்படுத்தி உரையாற்றி,  பொது மக்கள் புத்தகங்களை வாங்கி வாசிக்க வேண்டுகோள் விடுத்தார். அதைத் தொடர்ந்து, சுயமரியாதைச் சுடரொளிகளான, ‘இலக்குமியம்மாள்’, ‘கோமதியம்மாள்’, ‘சிவகாசி வானவில் மணி’ ஆகியோரின் படங்களை கழகத் தலைவர் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன், கட்சிக்கு தலைமைப் பொறுப்பு ஏற்ற நாளைக் கொண்டாட மேடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திராவிடர் கழகத்தின் தலைவர் ‘இனிப்பு’ (கேக்) வெட்டி மேடையில் இருந்தவர்களுக்கு ஊட்டினார். பின்னர் “பெரியார் உலகம்” நிதியளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கழகத் தலைவர், 97 வயதான பெரியார் பெருந்தொண்டர் தங்கவேல் அவர்களை மேடைக்கு அழைத்து அவருக்கு சிறப்பு செய்து வாழ்த்தினார். கழகத் தலைவர் ஆசிரியருக்கு அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பெருமக்கள் மரியாதை செய்து மகிழ்ந்தனர். இறுதியாக ஆசிரியர் உரையாற்றினார்.

பக்தருக்குக் கேடு உண்டா?
விருதுநகரில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தின் மேடையின் பின்புறம் சிறீ பராசக்தி வெயிலுகந்தம்மன், கருப்பசாமி, அம்மன் கோயிலும், வலப்பக்கம் சிறீ பாலசுப்பிரமணியம் கோயில், எதிரில் சிறீ பராசக்தி மாரியம்மன் கோயில் என்று மூன்று பக்கமும் மொத்தம் 5 கோயில்கள் இருந்தன. இடது பக்கம் மட்டும் காமராசர் மருத்துவமனை இருந்தது. இதை முன்னமே அறிந்திருந்த கழகத் தலைவர், “முதலில் இந்தத் திடலுக்குப் பெயர் மாரியம்மன் திடல் தான். இப்போதுதான் மொழிப்போர் வீரர் சங்கரலிங்கனார் திடலாக மாறியுள்ளது. ஏராளமான பக்தர்கள் இருக்கின்றனர். அப்படிப்பட்ட இடத்தில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்கிறோமே ஏதாவது ஒரு பக்தருக்குக் கேடு நடந்தது உண்டா? காரணம், இது பண்பட்ட நாடு! இதை பண்படுத்தியது திராவிடர் இயக்கம்’’ என்றார். 

திராவிட இயக்கத்தின் மிகப் பெரிய சாதனை எது?

தொடக்கத்திலேயே, “சுயமரியாதை இயக்கத்தில் ஈரோட்டுக்கு அடுத்து விருதுநகர் தான் பெருமை பெற்றது” என்று சொல்லிவிட்டு, “1931 இல் சுயமரியாதை இயக்கத்தின் இரண்டாம் மாநாடு விருதுநகரில் நடைபெற்றது. அதில்தான், “பெண்கள் 11 வயதில் கல்வி கற்பதை நிறுத்தாமல் 30 வயது வரையிலும் படிக்க வேண்டும்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்ற வியப்பான வரலாற்று உண்மையைச் சொல்லி விட்டு, ‘‘அந்தக் காலத்தில் சரஸ்வதியே படிக்க முடியாது” என்று கல்விக்கடவுள் பெயரில் ஒரு பெண் இருந்தாலும் அந்தப் பெண்ணின் நிலையும் இதுதான் என்பதை நகைச்சுவையாக சொல்லி, வியப்பின் வசப்பட்டவர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார். மேலும் அவர், “அதனால்தான் பொதுமக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை பொதுக் கூட்டங்களின் வாயிலாகக் கொடுத்தது திராவிடர் இயக்கம். இதுதான் மிகப்பெரிய சாதனை” என்றார். அடுத்து, “பெண்களை வைத்தியத் தொழிலிலும், உபாத்திமைத் தொழிலிலும் எடுத்தால் மட்டும் போதாது. அவர்களை காவல்துறை இலாகாவிலும், இராணுவத்திலும் நியமிக்க வேண்டும் என்று இரண்டாவது தீர்மானம் போடப்பட்டதும் இதே விருதுநகரில் தான்” என்று சொன்னதும் மக்கள் வியந்து படபடவென்று கை தட்டினர். தொடர்ந்து ஆசிரியர், “தீர்மானமாக இருந்ததை முதன் முதலில் செய்து காட்டியவர் நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தான்” என்றதும், கைதட்டல் வலுத்தது. மேலும் அவர், “இந்த மாற்றத்தை ஏற்படுத்தத்தான் நீதிக்கட்சி பிறந்தது! சுயமரியாதை இயக்கம் பிறந்தது! திராவிடர் இயக்கம் தொடர்ந்தது! தமிழ்நாட்டில் கல்வி அடிப்படை உரிமை ஆனது! ஆனால், மனு தர்மம் என்ன சொல்கிறது? “மேல் ஜாதிக்காரன் மட்டும்தான் படிக்க வேண்டும் என்று சொன்னது” என்று அடுக்க, அடுக்க கைதட்டல் தொடர்ந்தது.

மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சியே!

மேலும் அவர், “மொகஞ்சதாரோ, ஹரப்பா என்பது திராவிடர் நாகரிகம் என்று ஆய்வாளர் சர் ஜான் மார்ஷல் சொன்னார். அது தவறென்று சொல்லி, வேதகால நாகரிகம் தான் முந்தியது என்று நிறுவ முயலுகிறார்கள். தமிழ்நாட்டின் கீழடி ஆய்வுகளைக் கண்டு, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கிலி பிடித்துக் கிடக்கிறது” என்று   ஓர் உண்மையை மண் பானையை போட்டு உடைத்தது போல் உடைத்து விட்டார். ‘‘அந்த அச்சத்தில் தான், ஒன்றிய அரசு, கீழடி அறிக்கையை வெளியிட மறுக்கிறது” என்று அதற்கான பொருத்தமான காரணத்தையும் சுட்டிக்காட்டினார். விடவில்லை அவர், “அதையும் தாண்டி 5,000 ஆண்டு கால பொருநை நாகரிகமும் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது” என்று ஆதாரத்திற்கு மேல் ஆதாரத்தை எடுத்து வைத்தார். தொடர்ந்து அவர், அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் எழுதிய, இந்து மதம் எங்கே போகிறது? புத்தகத்தின் ஒரு பகுதியை வாசித்து, ஆரியர்கள் வந்தேறிகள் தான் என்பதை பார்ப்பனர் ஒருவர் எழுதியதையே ஆதாரமாக்கி ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் பொய்ப் பிரச்சாரமான, “ஆரியரும் இல்லை திராவிடரும் இல்லை என்பதில் ஆணி அடித்து, “மீண்டும் திராவிட மாடல் ஆட்சிதான் வரும்” என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை குறிப்பிட்டவர் இறுதியாக, “நாங்கள் சொல்வது ஒரு தனிமனிதர் ஸ்டாலினுக்காக அல்ல, உங்கள் சந்ததிகளின் எதிர்காலப் பாதுகாப்புக்காக; கல்விக்காக” என்று கூறி, பலத்த கைதட்டல்களுக்கிடையே தமது உரையை நிறைவு செய்தார்.,

முன்னதாக திண்டுக்கல் ஈட்டி கணேசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. தி.மு.க. நகரச் செயலாளர் எஸ்.ஆர்.எஸ். தனபாலன், வி.சி.க. தொகுதிச் செயலாளர் செந்தில் கனி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் இப்ராஹிம் ஷா, தமிழ்ப்புலிகள் கட்சிச் செயலாளர் வீரபெருமாள், மாநில மகளிர் பாசறை துணைச் செயலாளர் பாக்கியலட்சுமி, மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் எரிமலை, மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் முத்துக்கருப்பன், முரம்பு கழகத் தோழர்கள் பெத்தையா, முத்தரசன், அருப்புக்கோட்டை க.எழிலன், மா.உதயகுமார், ஜனனி, ஆயை.மு.காசாமைதீன், பந்தல்குடி வே.வேங்கடசுப்பையன், மாவட்ட மகளிரணித் தலைவர் பொன்மேனி ராஜயோகம், செயலாளர் ஆ.சாந்தி ஆதவன், அருப்புக்கோட்டை கழகச் செயலாளர் மு.முனியசாமி, ஒன்றியச் செயலாளர் இரா.முத்தையா, இளைஞரணிச் செயலாளர் பா.சங்கர், இராசை மாவட்டத் துணைச் செயலாளர் ச.சுந்தரமூர்த்தி,  ராஜபாளையம் மாவட்ட ப.க செயலாளர் கோ. பொத்தையா, மாவட்ட பகுத்தறிவாளர் கழக  அமைப்பாளர் முத்தரசன், ராஜபாளையம் மாவட்டத் துணைத் தலைவர் இரா. பாண்டி முருகன், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா. அழகர், அருப்புக்கோட்டை திருவள்ளுவர், சிவகாசி மாநகர செயலாளர் நரசிம்ம ராஜ், நகரத் தலைவர்  முருகன், மாவட்ட துணைச் செயலாளர் சிவகாசி சுந்தரமூர்த்தி, சிவகாசி கண்ணன், அருப்புக்கோட்டை ராஜேந்திரன், மாவட்டத் துணைத் தலைவர் முரளி மற்றும் தோழமை இயக்கப் பொறுப்பாளர்கள், தோழர்கள் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் மற்றும் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மாவட்ட ப.க அமைப்பாளர் மா.பாரத் நன்ற்ியுரை ஆற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *