ஆ.இரா.வேங்கடாசலபதி
தமிழ் மண்ணில் தடம் பதித்த பேராளுமைகளின் அறிவார்ந்த வரலாற்றை உலக அரங்கில் அடையாளப்படுத்தி வருபவர் ஆ.இரா.வேங்கடாசலபதி. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன (எம்அய்டிஎஸ்) பேராசிரியரும், வரலாற்றாளருமான இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். ஆ.இரா.வேங்கடாசலபதி தொகுத்து (இணைத் தொகுப்பாசிரியர்: கார்த்திக் ராம் மனோகரன்) கொண்டு வந்திருக்கும் The Cambridge Companion to Periyar நூலை ஒட்டி அவருடன் உரையாடியதிலிருந்து…
புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ் மூலம் பெரியாைர அணுகும் நூலை நீங்கள் கொண்டுவந்தது எப்படி?
அரை நூற்றாண்டுக்கு முன்புவரை பெரியார், திராவிட இயக்கம் தொடர்பான ஆங்கில ஆய்வுகளைப் பெரும்பாலும் அயல்நாட்டுப் பல்கலைக்கழகத்தினரே மேற்கொண்டுவந்துள்ளனர். அதாவது. மண்டல் பரிந்துரைத்த பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு, பாபர் மசூதி இடிப்பு, டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டு ஆகியவற்றுக்குப் பிறகு, இந்தியக் கல்விப்புலத்திலும் வெளியிலுமாக ஆங்கிலத்தில் நூல்கள் வெளிவரலாயின. இந்திய அரசியல், சமூகச் சூழலில் பெரியார் சிந்தனைகளின் பொருத்தப்பாடு உணரப்பட்டதே இதற்குக் காரணம்.
பெருந்தொற்றுக்கு முன்பு கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகப் பதிப்பகத்தின் தலைமைப் பதிப்பாசிரியர் இந் நூலை உருவாக்க வேண்டும் என என்னை அணுகினார். பெரியாருடைய சிந்தனைகளின் முக்கியத்துவத்தைக் கல்விப்புலத்தினர் உணரத் தொடங்கிவிட்டதை அறிந்து, இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.
நூலாக்கப் பணியில் கார்த்திக் ராம் மனோகரன் இணைந்தது எப்படி ?
கடந்த பத்தாண்டுகளில் தமிழ் இளையோர் பலர் சமூக அறிவியல் துறைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருப்பது முக்கிய மாற்றமாகும். எனவே, அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவரை இணைத்துக்கொள்ள வேண்டும் எனக் கருதினேன். இங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் கோட்பாட்டுத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற கார்த்திக் ராம் மனோகரன் என்னுடன் இணைந்தார். திராவிட இயக்கமும் வேளாளரும் பற்றிய ஆய்வை நான் 1980களில் மேற்கொண்டிருந்தபோது, அவர் பிறந்திருக்கவே இல்லை என்பதுதான் இதில் விசேஷம்!
இந்நூலில் யார் யார் என்னென்ன கோணங்களில் பங்களித்திருக்கிறார்கள்?
எம்.விஜயபாஸ்கர், சொர்ணவேல் ஈஸ்வரன், ராம் மகாலிங்கம் முதலான மூத்த ஆய்வாளர்களோடு விக்னேஷ் கார்த்திக், ஆண்டனி அருள் வளன், விலாசினி ரமணி ஆகிய இளம் ஆய்வாளர்களும் பங்களித்துள்ளனர். தமிழ்ச் சூழலில் நன்கு அறியப்பட்ட பழ.அதியமான், ஆ.திருநீலகண்டன், சுந்தர் காளி ஆகியோரும் எழுதியுள்ளனர். மாத்யூ பாக்ஸ்ட்டர் (சிரக்கியூஸ் பல்கலைக்கழகம்), தாரிணி அழகர்சாமி (சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்) முதலாக லெய்டன், மிஷிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்களும் பங்களித்துள்ளனர். இந்திய அளவில் தாகூர், காந்தி, சையது அகமது கான் ஆகியோருக்கு மட்டுமே (டாக்டர் அம்பேத்கர் பற்றிய நூல் விரைவில் வெளிவரவுள்ளது) இதுவரை கேம்பிரிட்ஜ் துணைவன் வரிசையில் நூல்கள் வந்துள்ளன என்னும்போது பெரியார் இதில் இடம்பெற்றிருப்பதை எண்ணிப் பூரிப்படையலாம்.
வ.உ.சி., பாரதி, புதுமைப்பித்தன் முதலான ஆளுமைகள் பற்றிய உங்களுடைய புத்தகங் களுக்குப் பின்னால் நெடுங்கால ஆராய்ச்சி இருந்துள்ளது. இந்த நூல் சார்ந்த ஈடுபாடும் தேடலும் உங்களுக்கு எங்கிருந்து தொடங்கியது?
நவீனத் தமிழ் மரபு என்கிற சரடில் இணைந்தவர்கள்தானே இவர்கள் அனைவரும்? வ.உ.சி. மூலமாகத்தான் நான் ஆராய்ச்சித் துறையில் நுழைந்தேன். ஆனால், அதே காலத்தில் பெரியாரும் எனக்கு அறிமுகமாகிவிட்டார். எனது முதல் ஆசிரியரான ‘முகம்’மாமணி, பெரியாரியர். அவருடைய செல்வாக்குக்கு ஆட்பட்டிருந்தவன் நான். வ.உ. சி. யும் பெரியாரும் நண்பர்கள்; அரசியல் தோழர்கள். இப்போது இருவரையும் எதிரெதிராக நிறுத்தும் முகநூல் வாயாடிகளை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது.வ.உ.சி. பற்றிய ஆவணங்களைத் தேடித்தான் முதன்முதலில் பெரியார் திடலுக்குச் சென்றேன். எனது தமிழாசிரியர் புலவர் இ.கோமதிநாயகம் மூலமாகத் திராவிடர் கழகத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்த அ.இறையன் எனக்கு அறிமுகமானார். ‘குடி அரசு’, ‘திராவிடன்’ முதலான இதழ்களைப் படிக்கும் நல்வாய்ப்பு 15 வயதிலேயே அமைந்தது. தமிழ்ச் சூழலில் முற்போக்கு வட்டாரங்களில் பெரியார் பற்றிய ஒவ்வாமை இருந்த காலம் முதல் இன்று அவருடைய முக்கியத்துவம் அனைத்துத் தரப்பினராலும் உணரப்பட்டுள்ள காலம்வரை பெரியாரைத் தொடர்ந்து கற்றுவருகிறேன். பெரியாரின் முழுமையான வாழ்க்கை வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளேன்.
தமிழில் முதல் முறையாகப் புனைவு சாராத வரலாற்று எழுத்துக்கு சாகித்ய அகாடமி விருது உங்களுடைய ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உசியும்: 1908’ நூலுக்குத்தான் கிடைத்தது. தமிழ் எழுத்துலகில் அபுனைவு வகைமைக்கு உங்களை அழைத்து வந்தது எது? புனைவைக் காட்டிலும் அபுனைவு முக்கியம் எனக் கருதுவது ஏன்?
இளம் வயது முதல் புனைவு எழுத்தை வாசித்து வந்தாலும் அபுனைவு எழுத்தில் எனக்கு எப்போதுமே ஈடுபாடு உண்டு. கட்டுரை வடிவத்தைத் தமிழில் நன்கு கையாண்டவர்கள் மிகவும் குறைவு என்பது என் கருத்து. பாரதி இதிலும் ஒரு முன்னோடிதான். புதுமைப் பித்தன் கட்டுரைகளில் மேதைமையின் தெறிப்புகள் உண்டு. அவர் எழுதிய ‘உங்கள் கதை’ ஒரு கிளாசிக். ‘மணிக்கொடி ‘ காலத்தில் வெளியான வ.ரா.வின் கட்டுரைகளும் குறிப்பிடத்தகுந்தவை. கு.அழகிரிசாமி, தொ.மு.சி.ரகுநாதன் ஆகியோரிடம் புதுமைப்பித்தனின் சாயலைக் காணலாம். சுந்தர ராமசாமியிடம் தமிழ்க் கட்டுரை, கலை வடிவம் பெற்றுவிடுகிறது. ஜெயகாந் தனைப் போல் பத்தி எழுத்தைக் கையாண்டவர்கள் எவரும் இல்லை. கட்டுரை எழுதினால் காசு பேறாது என்பதாலோ என்னவோ பல எழுத்தாளர்கள் கட்டுரை எழுதுவதில்லை. இதற்குப் பெரிய விதிவிலக்கு அசோகமித்திரன். முழு நேரத் தமிழ் எழுத் தாளராக இருந்தும் அவர் கட்டுரைகளை எழுதியது வியப்புத்தான். அ.முத்துலிங்கம், சுகுமாரன், பழ.அதியமான், பெருமாள் முருகன், மு.இராமநாதன் ஆகியோரின் கட்டுரைகளை நான் ஆர்வத்துடன் வாசிக்கிறேன்.
பெண்கள் பரவலாகக் கட்டுரை எழுதாமல் இருப்பது தமிழ்ச் சமூகத்தில் நிலவும் பாலினச் சமனின்மையைக் காட்டுவதாகக் கொள்ளலாம். பெண்கள் தங்கள் அனுபவங்களை எழுதலாம், கருத்துகளை வெளியிடக் கூடாது என்கிற எழுதப்படாத சட்டம் அமலில் உள்ளதாகத் தோன்றுகிறது. அடுத்த தலைமுறையில் இது மாறும் என்று நம்புகிறேன்.
நன்றி: ‘இந்து தமிழ்திசை’ 23.1.2026
