பெங்களூரு, ஜன.22 கருநாடக அரசியலில் ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில், ஆளுநர் தாவர்சந்த் கெலாட் தனது உரையைத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பாதி யிலேயே நிறுத்திவிட்டு அவையை விட்டு வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
அவையில் நடந்தது என்ன?
கருநாடக சட்டமன்ற மற்றும் சட்ட மேல வையின் கூட்டுக் கூட்டம் இன்று (22.1.2026) தொடங்கியது. பேரவைத் தலைவர் யு.டி. காதர், முதலமைச்சர் சித்தராமையா, அமைச்சர்கள் எச்.கே.பாட்டீல், பிரியங்க் கார்கே உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் ஆளுநரின் வரு கைக்காகக் காத்திருந்தனர்.
ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அவைக்கு வந்து, தனது உரையை வாசிக்கத் தொடங்கி னார். ஆனால், முதல் 2 அல்லது 4 வரி களை மட்டுமே வாசித்தவர், திடீரென உரையை நிறுத்திவிட்டு காகிதங்களை மேசை மீது வைத்தார். அதன்பின், எவரது கோரிக்கையையும் ஏற்காமல் அவையை விட்டு வெளியேறினார். காங்கிரஸ் எம்.எல்.சி பி.கே. அரிபிரசாத் அவரைத் தடுக்க முயன்றும் ஆளுநர் நிற்கவில்லை.
மோதலுக்குக் காரணம் என்ன?
கருநாடக அரசு தயாரித்து வழங்கிய ஆளு நர் உரையில் உள்ள சில பகுதிகள் தொடர்பாக, கடந்த சில நாள்களாகவே ஆளுநருக்கும், அரசுக்கும் இடையே இழுபறி நீடித்து வந்தது. முதலில் உரையை ஹிந்தியில் தயாரித்துத் தரவேண்டும் என்று கூறினார்.
அதற்கும் கருநாடக அரசு தயாராக இருந்தது, மேலும் நேற்று (21.1.2026) இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, சட்ட விவ காரங்கள் துறை அமைச்சர் எச்.கே.பாட்டீல் தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் குழு ஆளுநரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது, ‘‘அரசாங்கத்தின் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் கருத்துகளின் பிரகடனமே ஆளுநர் உரை. இதனை அப்படியே வாசிப்பது ஆளுநரின் அரசியலமைப்புச் சட்டக் கடமை; இதில் அரசியல் செய்யக்கூடாது’’ என்று அரசுத் தரப்பில் கறாராகத் தெரிவிக்கப்பட்டது.
எட்டப்பட்ட தீர்வு
நீண்ட நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஆளுநர் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு, அரசு தயாரித்துக் கொடுத்த உரையை வாசிக்கச் சம்மதித்தார். இதன் மூலம் திட்டமிட்டபடி இன்று (22.1.2026) காலை 11 மணிக்கு ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது
ஆனால், அவைக்கு வந்த ஆளுநர், அரசு கொடுத்த உரையை தவிர்த்து அவராகவே தயாரித்து கொண்டுவந்த உரையை வாசிக்க ஆரம்பித்தார். அதையும் முழுமையாகப் படிக்காமல், சில நிமிடங்கள் மட்டுமே பேசி வெளிநடப்பு செய்தார்.
அரசியல் சாசன சர்ச்சை
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தயாரித்துக் கொடுக்கும் உரையை ஆளுநர் வாசிப்பது என்பது நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் ஜனநாயக மரபு. ஆனால், ஆளுநர் இன்று உரையை முழுமையாக வாசிக்காமல் வெளியேறியது, ஆளுநரின் அதிகாரம் மற்றும் ஜனநாயக மரபுகள் குறித்த புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
சித்தராமையா தலைமையிலான அரசுக்கு இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடர் மிக முக்கியமானது எனக் கருதப்பட்ட நிலை யில், ஆளுநரின் முரண்பட்ட இந்த நட வடிக்கை கருநாடக அரசியலில் அனலைக் கூட்டியுள்ளது.
