சென்னை, ஜன.22- கிளாம் பாக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட நிலையில் பயணிகள் பலரும் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து விரைந்து வருவதற்கு ஏதுவாக கிளாம்பாக்கத்தில் புறநகர் ரயில் நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்போது ரயில் நிலையம் அமைக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராக உள்ள நிலையில் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைமேம்பாலம் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த பணிகள் இன்னும் 10 சதவீதம் மட்டுமே மீதம் இருப்பதாகவும், இன்னும் ஒரு மாதத்திற்குள் முழு பணிகளும் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பேருந்து நிலையம்
சென்னை – கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் சென்று வந்ததால் நகருக்குள் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், சென்னையை அடுத்த வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கபட்டது.
கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்துதான், வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து அரசு மற்றும் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போதும் பரபரப்பான இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
பிப்ரவரியில் திறப்பு
பயணிகளுக்கு தேவையான நடவடிக்கைகள் கிளாம்பக்கம் பேருந்து நிலையத்தில் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை நகரத்திற்குள் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பேருந்தில் வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாகிறது. கடுமையான போக்குவரத்து நெரிசலில் பயணித்து கிளாம்பக்கம் வந்து சேருவதற்குள் பயணிகள், கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள்.
இதனைக் கருத்தில் கொண்டு கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையமும் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு நடைமேடை அமைத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிந்து திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளன. ரயில் நிலையத்தில் இருந்து பயணிகள் நேரடியாக கிளாம்பாக்கம் செல்வதற்கு வசதியாக ஆகாய நடைமேடை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பணிகள் முடிந்து பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படது. ஆனால், தாமதம் ஆகிக்கொண்டே போவதால் பயணிகளுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. ரூ.79 கோடி மதிப்பீட்டில் 200 மீட்டர் தூரம் கட்டப்பட்டு வரும் இந்த பணியில் நிலம் கையகப்படுத்தல் காரணமாக சிறிது தாமதம் ஏற்பட்டது.
நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து பணிகள் வேகமாக தொடங்கி நடந்து வருகின்றன. பெரும்பாலான பணிகள் முடிந்து விட்ட நிலையில் இன்னும் 10 சதவீத பணிகள் மட்டுமே முடியாமல் உள்ளது. தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலைய முனையத்தில் தொடங்கி ஜி.எஸ்.டி. சாலையில் தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்தில் பணிகள் முடிந்து மேல்பகுதியில் தளம் பொருத்தப்பட்டு விட்டது.
அதிகாரிகள் விளக்கம்
ரயில் நிலையத்தில் இருந்து வரும் பகுதியில் செங்கல்பட்டு – தாம்பரம் மார்க்கத்தில் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் நடைமேம்பாலத்தை இணைக்கும் வேலை நடைபெறும். நடைமேம்பாலம் பணியை பிப்ரவரி மாதம் இறுதிக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
