லக்னோ, ஜன.22– கி.பி.8ஆம் நூற்றாண்டில் ஆதி சங்கரரால் பத்திரிநாத்தில் நிறுவப்பட்ட ஜோதிர் மடத்தின் சாமியார் மீது உத்தரப்பிரதேசம் பிரயாகையில் (அலகாபாத்) நடைபெற்ற கும்பமேளாவில் நடந்த சம்பவம் காரணமாக அரசு வழக்கு தொடுத்துள்ளது. வழக்கத்தில் ஜோதிர் மட சாமியார் தம்மை சங்கராச்சாரி என்று அழைத்துக் கொள்ளக் கூடாது என அந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மடத்தின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் பிரயாகையில் நடைபெற்ற கும்பமேளாவின்போது திரிவேணி சங்கமத்தில் குளிப் பதற்காக ஜோதிர் மட சங்கராச்சாரி சுவாமி அவிமுக்தேஸ்வர் ஆனந்த சரஸ்வதி தனது மடத்து பரிவாரங்களுடன் சாரட் வண்டியில் சென்றிருக்கிறார். அன்றைய தினம் கும்பமேளாவில் மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரிக்க, சங்கராச்சாரியாருக்கு குளிக்கச் செல்ல அனுமதியை கும்பமேளா நிர்வாகம் வழங்கவில்லை. தனக்கு அனுமதி மறுப்பதா என்ற போக்கில் அவர் அங்கிருந்த காவல் துறையினரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்.
இந்தக் கலாட்டாவில் உடன் சென்ற மடத்தினைச் சார்ந்தவர்கள் சிலர் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இறுதிவரை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அப்பொழுது நடைபெற்ற சம்பவம் குறித்து சங்கராச்சாரி மீது வழக்கு தொடுக்கப்பட்டது. ஜோதிர்மட சாமியார் தன்னை சங்கராச்சாரி என அழைத்துக் கொள்ளக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட ஜோதிர் மடத்து சாமியார் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது – அரசுக்கு எதிர் தரப்பினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. பல ஆண்டுகாலமாக திரிவேணி சங்கமத்தில், கும்பமேளா சமயத்தில் ‘புனிதக் குளியல்’ போட ஜோதிர் மடத்து சாமியாருக்கு உள்ள வழக்கம் மறுக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கிடையில் எழும் சண்டையிலிருந்து சாமியார்களுக்கு இடையில் நடைபெறும் சச்சரவு வித்தியாசமாகத்தான் இருக்கும் – கோயில் யானைக்கு வடகலை நாமமா, தென்கலை நாமமா என்று வழிபடும் பார்ப்பனர்களுக்குள் எழும் சண்டைபோல.
ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட ஜோதிர் மட சாமியாருக்கே ‘சங்கராச்சாரி’ என அழைத்துக் கொள்ள உரிமை மறுக்கப்படும் நிலையில் ஆதி சங்கரரால் நிறுவப் படாத, ஆனால் ஆதிசங்கரர் நிறுவியதாக விளம்பரப்படுத்திக் கொள்ளும் மடங்களின் நிலைமை எப்படியோ?
