எடப்பாடி, ஜன.22– மேட்டூர் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் எடப்பாடி சின்னமணலி – தந்தை பெரியார் படிப்பகத்தில் 18.01.2026 காலை 11 மணியளவில் மேட்டூர் மாவட்டத் தலைவர் கா.நா.பாலு தலைமையில் நடைபெற்றது.
மேட்டூர் நகரத் தலைவர் இரா.கலையரசன் கடவுள் மறுப்புக் கூற கூட்டம் தொடங்கியது. மேட்டூர் மாவட்டச் செயலாளர் ப.கலைவாணன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
அந்தந்தப் பகுதிப் பொறுப்பாளர்கள், அரசியல் பிரமுகர்களையும், முக்கிய கடை வியாபாரிகளையும், தொழில் அதிபர்களையும், கூட்டணித் தோழர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறும், அந்தந்தப் பகுதிகளுக்கு மாவட்டத் தலைவராகிய நானும், பிற தோழர்களும் வரத் தயாராக இருப்பதால், அதற்குண்டான பணிகளைச் செய்யுமாறும், 30ஆம் தேதி (ஜனவரி)க்குள் வசூலை முடிக்க வேண்டும். பிப்ரவரி 1 முதல் 4ஆம் தேதி வரை கடை வீதி வசூலிலும், குடிமக்களைச் சந்தித்து துண்டறிக்கைகள் வழங்கவும் இருப்பதால் கழகத் தோழர்கள் அதைத் தம் கடமையாகக் கருதி, பணியாற்ற வேண்டுமாய் மாவட்ட கழகத் தலைவர் கா.நா.பாலு கேட்டுக் கொண்டார்.
பெரியார் உலகத்திற்கு இதுவரை நிதி வழங்குவதாக அறிவித்தவர்கள் விவரங்கள்:-
- கை.அறிவுமணி – வாழ்விணையர் கா.நா.பாலு (மாவட்டக் கழகத் தலைவர்) ரூ.ஒரு லட்சம்.
- பிரியதர்ஷினி – வாழ்விணையர் ப.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) ரூ.ஒரு லட்சம்.
- சாந்தி -வாழ்விணையர் கோவி.அன்புமதி (மாவட்டத் தலைவர், ப.க.) ரூ.ஒரு லட்சம்.
- பா.எழில் (மாவட்டத் தலைவர், மகளிர் பாசறை) வாழ்விணையர் அ.செல்வராஜ் ஆகியோர் ரூ.ஒரு லட்சம்.
- அ.தமிழ்ச்செல்வி – வாழ்விணையர் சி.மதியழகன் (மாவட்டச் செயலாளர், ப.க.) ரூ.ஒரு லட்சம்.
- சிந்தாமணியூர் கி.சப்பிரமணியன் (மாவட்டக் காப்பாளர்) வாழ்விணையர் ரஞ்சிதம் ஆகியோர் ரூ.25,000.
- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் எடைக்கு எடை நாணயம் வழங்குவோர் -பா.அன்புமணி – வாழ்விணையர் கோ.பாபு நாயக்கன்பட்டி, சேலம் ஆகியோர் ரூ.50,000 வழங்குகிறார்கள்.
ஆக, 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பெரியார் உலகத்திற்கு நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்கள்.
மாநில ஒருங்கிணைப்பாளர் பா.ஜெயராமன் மேடை அமைப்பது, கழகக் கொடிகள் கட்டுதல், பதாகைகள் வைத்தல் ஆகிய பணிகள் குறித்தும், தயக்கமின்றி நிதி வசூல் கேட்டுப் பெறுவது குறித்தும், மாவட்டத் தலைவர் கா.நா.பாலுவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பங்களிப்புச் செய்வது குறித்தும் நெகிழ்ச்சியுடன் கூறினார்கள்.
கூட்டச் செலவிற்கு ரூ.5,000 – மேட்டூர் நகரத் தலைவர் இரா.கலையரசன் வழங்கினார்.
அழைப்பிதழ் செலவினை பா.சிந்தனை – வாழ்விணையர் வழக்குரைஞர் என்.ரமேஷ்குமார் -அர.செட்டிப்பட்டி ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர் சேலம் மாவட்டத் தலைவர் வீரமணி ராஜி அவர்கள், மேட்டுர் மாவட்டத்திற்கு தொடர்ந்து தன்னுடைய ஆதரவை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் கோவி.அன்புமதி -21ஆம் தேதி முதல் வசூல் பணிகளை மேற்கொள்ளலாம் எனவும், அழைப்பிதழ்களை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பது குறித்தும் பேசினார்.
ப.க. மாவட்டச் செயலாளர் சி.மதியழகன், தன்னுடன் கல்லூரியில் படித்த சக தோழர்களைச் சந்தித்து நிதி திரட்டலாம் என்றும் கூறினார்.
கலந்துரையாடலில் தீர்மானங்கள்
திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களுக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2025ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது மற்றும் விருதுத் தொகையாக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் தகுதியுரை ஆகியவற்றை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியையும், தந்தை பெரியார் விருது பெற்ற அ.அருள்மொழிக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் மேட்டூர் மாவட்ட கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
விரைவில் அருள்மொழி அவர்களுக்கு மகளிரணி சார்பாக பாராட்டு விழா நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
எடப்பாடிக்கு 6.2.2026 அன்று வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது எனவும், எடைக்கு எடை நாணயம் வழங்கவும் கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட்டது.
விரைந்து நிதி வசூலில் ஈடுபடுவது எனவும், தோழர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
எடப்பாடி நகரச் செயலாளர் சி.மெய்ஞான அருள் நன்றி கூற கலந்துரையாடல் கூட்டம் இனிதே நிறைவேறியது.
