பாம்பன், ஜன.21 தமிழ்நாடு மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. அந்த வகையில், இன்று (21.01.2026) அதிகாலை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடித் தளத்திலிருந்து நேற்று (20.1.2026) நூற்றுக்கணக்கான விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி மீனவர்களைச் சூழ்ந்து கொண்டனர்.
7 ராமேஸ்வரம் மீனவர்கள். பயன்படுத்திய ஒரு விசைப்படகு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்களை நடுக்கடலிலேயே நிறுத்தி வைத்து இலங்கை கடற் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்குப் பிறகு, மீனவர்கள் யாழ்ப்பாணம் அல்லது மன்னார் பகுதியில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவம் ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார மீனவக் கிராமங்களில் பெரும் கவலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட்டு மீனவர்களையும் அவர்களின் வாழ்வாதாரமான படகையும் மீட்க வேண்டும் என மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
