நவீன உலகில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பெரும் வளர்ச்சி கண்டு வரும் வேளையிலும், இந்தியாவில் நிலவி வரும் வழிபாட்டு முறைகள் மற்றும் மூடநம்பிக்கைகள் வெட்கக்கேடானவையே!
இயற்கையான மாற்றங்கள் அல்லது உடல்நலக் குறைபாடுகளைக் கூட தெய்வீகமாகச் சித்தரிக்கும் கேவலமான போக்கு அதிகரித்து வருகிறது – விளம்பரப்படுத்தப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பரேலியில் கோயில் ஒன்றை ஒரு நாய் நாள் முழுவதும் சுற்றியது. அதன் மூளைக்குள் சில வைரஸ் தொற்று புகுந்ததால் ஒரே இடத்தைச் சுற்றும் நிலைக்குத் தள்ளப்படும் இந்தக் காட்சி சமூகவலைதளங்களில் பரவியது. அதை சிலர் இது ‘பைரவ அவதாரம்’ என்று கூறி, புரளி கிளப்ப, அந்தக் கோயிலில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது.
இதைக் காரணமாக வைத்து அந்தக்கோயில் அர்ச்சகர் நாயைப்பிடித்து கட்டி வைத்து, அதற்கு உணவு கொடுத்தார்; அது உண்ட மயக்கத்தில் உறங்கியது. இந்த வாய்ப்பை நழுவ விடுவார்களா ஏமாற்று ஆசாமிகள்? அதற்குப் போர்வை போர்த்தி, அங்கேயே ஒரு கோயிலை உருவாக்கி விட்டார்கள். அதை கும்பிட்டுச் செல்பவர்கள் ரூபாய் நோட்டுகளை நாய்க்கு முன்பு வைத்துச் செல்கிறார்கள்.
இதே போல், கான்பூரில் உள்ள கோயில் ஒன்றில் லிங்கத்தின் மீது பாம்பு சுற்றி நின்றது. உடனே ‘சேசநாக்’ வந்துவிட்டது என்று கூறி, அந்தக் கோயிலுக்கும் மக்கள் கூட்டம் கூடியது.

பிறவிக் குறைபாடுகளான மூக்கு இல்லாமல் பிறக்கும் குழந்தை அல்லது அய்ந்து கால்கள், இரண்டு தலைகளுடன் பிறக்கும் கன்றுக்குட்டிகள் போன்றவற்றை மரபணு மாற்றமாகக் கருதாமல், கடவுளின் அவதாரம் என்று கூறி வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
ஒருபுறம் உலகம் முழுவதும் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பத் துறையில் நாளுக்கொரு பாய்ச்சலில் சென்று கொண்டு வருகிறது!
ஆனால், இங்கே அறிவியலையே 2000 ஆண்டுக்கு முன்பு கொண்டு சென்று ‘அன்றே ரிஷிமுனிகள் கூறினார்கள்’ என்று மூடநம்பிக்கைகளுக்கு ஊக்கம் கொடுத்து – அறிவியல் சிந்தனையற்ற சமூகம் உருவாக ஒன்றிய பா.ஜ.க. அரசின் அமைச்சர்களே காரணமாகின்றனர்.
பகுத்தறிவு மற்றும் அறிவியல் ரீதியான அணுகுமுறை மக்களிடையே இன்னும் ஆழமாகச் சென்றடைய வேண்டும்; ஆனால் இங்கோ, பிரதமர் மோடியே கையில் இரண்டு உடுக்கையை வைத்துக் கொண்டு, உடுக்கையின் ஓசையில் ‘கெட்ட சக்திகள் ஓடும்’ என்று கூறி, ரோட்டில் குடுகுடுப்பைக் காரன் போல உடுக்கை அடித்துச் செல்கிறார்!
2014ஆம் ஆண்டு அக்டோபர் 25 அன்று மும்பையில் நடைபெற்ற மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டு உலகமே சிரித்தது.
அப்படி என்ன தான் பேசினார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி?
‘‘பழங்கால இந்தியாவில் பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது. அதனால்தான் யானைத் தலையை வெட்டி மனிதத் தலையில் பொருத்தினார்கள்’’ என்று நகைக்கத்தக்க வகையில் பேசினார்!
இது குறித்து நோபல் பரிசு பெற்ற இந்தியரான விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் ‘‘மகாபாரத்தில் உள்ள பழங்காலக் கதைகளில் – ‘இன்டர்நெட் இருந்தது அல்லது பழங்கால இந்தியர்களுக்கு விமானங்கள் இருந்தன. பிளாஸ்டிக் சர்ஜரி தெரிந்திருந்தனர்’ என்பதெல்லாம் அறிவியலுக்குப் புறம்பானது’’ என்று சொன்னதோடு ‘‘இந்தியாவில் நடக்கும் இதுபோன்ற மாநாடுகளில் பங்கேற்க மாட்டேன்’’ என்றும் சொல்லவில்லையா?
‘மக்களிடம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் – அது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை’ என்று இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) கூறுகிறது. ஆனால் ஒரு பிரதமரே அதற்கு நேர் எதிராகப் பேசுகிறார்.
நாய்களும், பன்றிகளும் கடவுளாகவும், கடவுள் அவதாரங்களாகவும் ஆக்கப்பட்ட ஒரு துணைக் கண்டம்தான் பாரத ‘புண்ணிய’ பூமியாம்!
ஆர்.எஸ்.எஸ். – பிஜேபி அதிகாரத்திற்கு வந்த பிறகு மக்களிடம் அரைகுறையாகயிருந்த மூடநம்பிக்கைகளை ஊதிப் பெரிதுபடுத்தி அரசியல் ஆதாயக் குளிர் காய்கின்றனர்!
மதச் சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்கள் – பகுத்தறிவாளர்களுக்கு நிரம்பப்பணி இருக்கிறது. முட்டாள்தனமான மூடநம்பிக்கைகளை ஒழித்து அறிவியல் பார்வையை உருவாக்குவதே முக்கிய கடமை என்பதை வலியுறுத்துகிறோம்.
