காக்கிநாடா, ஜன.21- ஆந்திர மாநிலம், ரங்கம்பேட்டை காவல் நிலையத்தில் பெண் காவலராகப் பணியாற்றி வருபவர் ஜெயா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது விடுமுறை நாளில், கைக்குழந்தையுடன் காக்கிநாடா- சாமர்லகோட்டா சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, அந்தச் சாலையில் எதிர்பாராத விதமாக மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றுகொண்டிருந்தன.
இந்தநிலையில், அந்த வழியாக வந்த இரு ஆம்புலன்ஸ்கள் நெரிசலில் சிக்கி, முன்னோக்கி செல்ல முடியாமல் தவித்தன. சைரன் ஒலித்தும் வாகனங்கள் நகர முடியாத சூழல் நிலவியது. இதை கவனித்த ஜெயா, தான் பணியில் இல்லை என்பதை பொருட்படுத்தாமல், கையில் தனது கைக்குழந்தையை ஏந்தியபடியே உடனடியாக களத்தில் இறங்கினார்.
சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை, ஒரு கையில் குழந்தையை வைத்துக்கொண்டு, மறு கையால் போக்குவரத்தைச் சீர்செய்தார்.
வாகனங்களை லாவகமாக அப்புறப்படுத்தி, ஆம்புலன்ஸ் செல்ல தனி வழியை ஏற்படுத்திக் கொடுத்தார். அவரது இந்தச் செயலால் ஆம்புலன்ஸ்கள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முடிந்தது.
இந்தக் காட்சியை அங்கிருந் தவர்கள் காட்சிப் பதிவு எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இந்த காட்சிப் பதிவு மிகப் பரவலானதைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேச காவல்துறை மற்றும் உயர்மட்ட அதிகாரிகள், ஜெயாவின் இந்த அர்ப்பணிப்பு உணர்வைப் பாராட்டி கவுரவித்துள்ளனர். ஜெயாவின் இந்த நெகிழ்ச்சியான செயல், சமூக வலைதளங்களில் பரவி பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.
