சென்னை, ஜன. 21- தமிழ்நாடு பன்னாட்டு சுற்றுலா முதலீட்டாளர் மாநாடு மாமல்லபுரத்தில் பிப்.2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாக, சுற்றுலாத் துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் தெரிவித்தார்.
பன்னாட்டு முதலீட்டாளர் மாநாடு
சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் தலைமைச் செயலகத்தில் நேற்று (20.1.2026) செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.
அப்போது அமைச்சர் ராஜேந்திரன் கூறியதாவது:
தமிழ்நாடு சுற்றுலா துறையை மேம்படுத்தும் பொருட்டு சுற்றுலா துறைக்கென தனிக்கொள்கையை முதலமைச்சர் உருவாக்கிக் கொடுத்துள்ளார்.
மாநிலத்தில் 300 சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு பொருளாதாரத்தை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்துள்ளார். அந்தப் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி 12 சதவீதம் அளவுக்கு இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
பிப்ரவரி 2, 3 தேதிகளில் நடைபெறும்
தற்போது சுற்றுலாத் துறையில் முதலீட்டாளர்களை கவரும்வகையில் தமிழ்நாடு பன்னாட்டு சுற்றுலா முதலீட்டாளர் மாநாட்டை நடத்த முதலமைச்சர் முடிவெடுத்துள்ளார். இந்த மாநாடு பிப். 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் சென்னை அருகேயுள்ள மாமல்லபுரத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் முதலீட்டாளர்கள் பங்கேற்கின்றனர். மருத்துவச் சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, சாகசச் சுற்றுலா என அனைத்து வகை சுற்றுலாக்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த முதலீட்டாளர் மாநாடு நடத்தப் படும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அமைச்சர் டிஆர்பி ராஜா கூறியதாவது: இந்தியாவில் சுற்றுலா செல்வோரின் முதல் விருப்ப தேர்வாக இருப்பது தமிழ்நாடு தான். தற்போது பாரம்பரிய சுற்றுலா, கலாச்சார சுற்றுலா, ஆன்மிக சுற்றுலா போன்றவற்றுக்கு மட்டுமே முக்கித்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. டிசம்பர், ஜனவரி என்றால் இசைவிழா என்ற அளவில்தான் வெளியே தெரிகிறது. இதையும் தாண்டி ஏராளமான விஷயங்கள் உள்ளன.
அவற்றையும் நாம் கொண்டாட வேண்டியது அவசியம் என்பதுதான் முதலமைச்சரின் சிந்தனை.
தற்போது புதிய முயற்சியாக, சுற்றுலா மேம்பாட்டுக்கு தேவையான நிலங்களை எங்கள் துறையின் சிப்காட் நிறுவனம் தேர்வு செய்து வழங்கும். அதை சுற்றுலா துறை மேம்படுத்தும். இதுவரை இல்லாத புதிய முயற்சி இது.
இத்திட்டத்தின் கீழ், புதிதாக 40 இடங்களை அடையாளம் கண்டுள்ளோம். தமிழ்நாட்டில் 1,076 கி.மீ. நீள கடற்கரை இருக்கிறது. ஆனால், இந்த நீண்ட கடற்கரையை சுற்றுலா மேம்பாட்டுக்கு நாம் இன்னும் முழுமையாக பயன்படுத்தவில்லை. கடற்கரை சு்ற்றுலாத் திட்டங்களை செயல்படுத்தினால் மீனவர்களின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் உயரும் என்று அவர் கூறினார்.
முன்னதாக, தமிழ்நாடு பன்னாட்டு முதலீட்டாளர் மாநாட் டுக்கான லோகோவை அமைச்சர்கள் இருவரும் அறிமுகப்படுத்தினர். பேட்டியின் போது சுற்றுலாதுறை செயலர் கே.மணிவாசன், சுற்றுலாத் துறை ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.
