சென்னை, ஜன. 20- தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு சார்பாக ரேசன் கடைகள் மூலம் ரூ. 3000 உட்பட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை பொங்கல் பரிசு பெறாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கு பரிசாக ரொக்கமாக ரூ.3,000 வீதம் ரொக்கம் ரூ.6687.51 கோடி, ஒரு கிலோ அரிசியாக ஒரு கிலோ சர்க்கரையாக ஒரு முழு நீளக் கரும்பாக பொங்கல் பரிசுத் தொகுப்பு ரூ.248.66 கோடி மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.668.12 கோடி செலவில் வேட்டி சேலை மொத்தம் ரூ.7604.29 கோடி செலவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அந்த வகையில் கடந்த 8ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் ஜனவரி 14ஆம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பானவது வழங்கப்பட்டது. அந்த வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்பானது 2,22,91,710 அரிசி பெறும் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,
கடந்த 14ஆம் தேதி வரை 2.15 கோடி பயனாளர்களுக்கு அதாவது 97 சதவீதம் பேருக்கு ரூ.6453.54 ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்னும் 7 லட்சம் பேர் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்காமல் உள்ளனர் அவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்திருந்த நிலையில் தற்போது பொங்கல் பரிசுத் தொகுப்பை நியாயவிலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை பொங்கல் பரிசு தொகுப்பு ரேசன் கடைகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
