உடல் பருமன் ஒருவர் குழந்தையாய் இருக்கும் போதிலிருந்தே தொடங்கி விடுகிறது. பெரும்பான்மையான பெற்றோர்கள் தங்கள் குழந்தை கொழு கொழுவென்று குண்டாக இருப்பதையே விரும்புகின்றனர். இதற்காக குழந்தைகளுக்கு அதிகமாக உணவூட்டி எடையை அதிகரிக்க வைக்கின்றனர். ஆகையால் இதய நோய்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆரம்பித்து விடுகின்றன.
உட்கொள்ளும் கலோரி எடையைக் கூட்டுகிறது. உடல் அசைவுகளும் உடற்பயிற்சியும் எடையைக் குறைக்கிறது.
சிலருக்கு அதிகமான உணவு சாப்பிட்டாலும், பானங்கள் அதிகமாகக் குடித்தாலும் உடல் எடை கூடுவது கிடையாது. பருத்த உடல் கொண்டவர்களுக்கு சிறிதளவு உணவு கூடினால்கூட எடை அதிகரித்து விடுகிறது.
அதிகப்படியான உணவு உட்கொள்வதையும், குடிப்பதையும் தவிர்ப்பதற்கு இரும்பு போன்ற மனஉறுதி வேண்டும்.
அளவுக்கு அதிகமான எடையுள்ளவர்கள் இதய நோய்களுக்கு ஆளாகின்றனர். பருமனான உடலைக் கொண்டவர்களுக்கு மிகை இரத்த அழுத்தநோய் ஏற்பட்டு கூடுதலான சிரமத்தை இதயத்திற்கு ஏற்படுத்துகிறது.
இந்தக் கூடுதல் எடை கால்களில் உள்ள எடையைத் தாங்கும் மூட்டுகளில் முழங்கால் மூட்டுவலியை ஏற்படுத்துகிறது. மேலும், குடல் இறக்கம், நீரிழிவு நோய்களும் ஏற்படும்.
எப்படி உடல் பருமனைக் குறைப்பது?
பருமனைக் குறைக்க எவ்வளவு கடினமாக உடற்பயிற்சி செய்கிறோம் என்பது மட்டும் போதாது. இதனால் மட்டும் எடை குறைந்து விடாது. ஒரு மைல் மெதுவான ஓட்டம் ஓடினாலும், 4 மைல் வேகமாக ஒடினாலும் ஒரு இட்லித் துண்டில் கிடைத்த கூடுதல் கலோரியைத்தான் குறைக்க முடியும். இதிலிருந்து நாம் அறிவது, உடற்பயிற்சி மிகக் குறைவாகவே உடல் பருமனைக் குறைக்க உதவும் என்பதே.
ஒருவரின் எடையைக் குறைக்க மிகச் சிறப்பான ஒரே ஒரு வழி உணவுக் கட்டுப்பாடே. ஒருவர் உணவு மூலமாகக் கிடைக்கும் கலோரியில் உடல் இயக்கத்தாலும், உடற்பயிற்சியாலும் குறைவான கலோரியைத்தான் செலவிடுகிறார்.
நார்ச்சத்து மிக்க உணவு தேவை!
பெரும்பாலான தமிழ் நாட்டு உணவு வகையில் அதிக நார்ச்சத்துள்ளது. இந்த அதிக அளவிலான உணவு குறைவான மாவுச்சத்தைப் பெற உதவுகிறது.
ஒப்பீட்டளவில் நன்கு சுத்திகரித்த உணவு, பதப்படுத்தப்பட்ட மேலைநாட்டு ரெடிமேட் உணவைவிட அதிக மாவுச்சத்து கொண்டதாக உள்ளது. இதில் நார்ச்சத்து குறைவேயாகும்.
நார்ச்சத்தான உணவு குறைவான மாவுச் சத்தைக் கொண்டிருப்பதோடு முழுமையாகச் சாப்பிட்ட உணர்வையும் தருகிறது. ஆனால், ரெடிமேட் உணவை மிக அதிக அளவில் உண்டால்தான் முழுமையாகச் சாப்பிட்ட உணர்வைத் தருகிறது.
ஆப்பிரிக்க கிராம மக்கள் அதிக அளவிலான உணவை உட்கொள்கின்றனர். ஆனால், அவர்கள் பருத்த உடலைப் பெறுவதில்லை. காரணம், அவர்களின் உணவில் நார்பொருளே அதிகம். அதில் கொழுப்புச் சத்து இருப்பதில்லை.
மிகச் சிறப்பாக எடையைக் குறைக்க ஒருவர் நீண்டகாலத் திட்ட அடிப்படையில் உணவு உட்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். எப்போதாவது உணவுக் கட்டுப்பாட்டை அனுசரிக்க முயற்சிக்கக் கூடாது. ஒரு வாரத்திற்கு ஒரு பவுண்ட் மட்டுமே குறைப்பது சிறந்தது.
எடையைக் குறைக்கவேண்டும்; ஆனால், திடீரென்று வேகமாகக் குறைக்கக் கூடாது. கண்டிப்புடன் உணவைத் திடீரெனக் குறைப்பதால் எடையைக் குறைக்கலாம். ஆனால், திரும்பவும் வழக்கமான உணவு உண்ண ஆரம்பித்தவுடன் மீண்டும் எடை கூடிவிடும்.
எடையைக் குறைக்க, சிறந்த செயலூக்கமான வழி என்னவெனில், நீண்டகாலத் திட்டத்தைக் கொண்டு அதைப் பின்பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாக எடையைக் குறைப்பதே.
இம்முறையில் ஒருவரின் உணவு முறையில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவது என்று அர்த்தமல்ல. இதன் பொருள் ஒருவரின் உணவுப் பொருட்களில் மிகக் குறைவான அளவே எடுத்துக்கொள்ள வேண்டுமென்பதே ஆகும்.
குறிப்பாக, சிலவகை எடையைக் கூட்டும் உணவுப் பொருள்களான மாவு, சர்க்கரையில் செய்த பொருள்கள், எண்ணெய், நெய், வெண்ணெய், வனஸ்பதி போன்ற கொழுப்பு வகைகளை அடிக்கடி உண்பதைத் தவிர்க்க வேண்டும். இடைப்பட்ட வேளையில் உணவை உண்ணக்கூடாது. அதிகமாக டீ, காபி போன்ற பானங்களையும், நொறுக்குத் தீனியையும் உண்ணவோ அருந்தவோ கூடாது.
ஒருவர் பலவகை உணவை உண்ணலாம். இதனால் எடையைக் குறைக்கும் முயற்சி என்பது ஒருவரை அச்சுறுத்துவதாக இருப்பதில்லை. நாம் எதை விரும்புகிறோமோ அதையெல்லாம் உட்கொள்ளலாம். ஆனால், மிகக் கண்டிப்பாக அது அளவில் இருக்க வேண்டும். உட்கொள்ளும் உணவிலிருந்து கிடைக்கும் கலோரி உடலியக்கம், உடற்பயிற்சி மூலமாகச் செலவிடப்படும் சக்தியைவிடக் கூடுதலாக இருக்கக் கூடாது.
எடையைக் குறைக்க நாளை ஒத்திப்போட்டுக் காத்திருக்கத் தேவையில்லை. இன்றே தொடங்குவது நல்லது. இது ஒரு வரவு செலவு போன்றதே. வரவைக் குறைப்பது துவக்கத்தில் சிரமமாக இருக்கும். சாதாரணமாக எடைகுறைவதை உணர்ந்தபின் இழந்ததைவிட ஆர்வம் உண்டாகும். நன்றாக உடல் வாழ்வு அமைந்ததை உணர்ந்தபின் தொடர்வது மிக எளிதாகிவிடும்.
