அமெரிக்காவின் கேரி நகரத்தில் அங்கு வாழும் தமிழர்கள் அங்குள்ள தமிழரல்லாத மற்ற அமெரிக்கர்களுக்கு விருந்தளித்துப் பொங்கல் விழா கொண்டாடினார்கள் !
சனவரி 18 அன்று அமெரிக்காவில் மருத்துவர்கள் சோம & சரோ இளங்கோவன் வாழும் பகுதியில் சிறப்பாகப் பொங்கல் விழா கொண்டாடினார்கள்.

தமிழரல்லாத அமெரிக்கர்கள் 50 பேர் , வட நாட்டு இந்தியர்கள் 30 பேர் குடும்பங்களாக விருந்தினர்களாக வந்திருந்தனர். தமிழ் நண்பர்கள் பொங்கல், காய் கறிகள் செய்து கொண்டு வந்து விருந்து வைத்தனர்.
முதலில் அமெரிக்க வாழ்த்தும், தமிழ்மொழி வாழ்த்தும் பாடப்பட்டது. பின்னர் பொங்கல் என்றால் என்னவென்று ஒளிப்பதிவு காட்டப்பட்டது. பின்னர் அனைவரும் உணவருந்தினர்.
தமிழில் நல்ல ஈடுபாடு உடைய இளைய தலைமுறை அமரன் அவர்கள் தமிழ் பற்றியும் தமிழ்ப் பண்பாடு கலைகள் பற்றியும் படங்கள் காண்பித்துப் பேசினார். ஏறு தழுவுதல் காட்சிகள் காண்பித்தார் .திருக்குறள் பற்றிச் சொன்னார். எப்படி மதச்சார்பற்ற நன்றித் திருவிழா பொங்கல் , உழைக்கும் மாட்டிற்கும் நன்றி தெரிவித்துக் கொண்டாடப்படுகின்றது என்று விளக்கினார்.
கார்த்திகா ஜெகதீசன் தமிழ்த் கலைகள் பற்றிப் படங் களுடன் காண்பித்து விளக்கினார்.

இளைய தலைமுறை கதிர் வீரசேகர் தான் தஞ்சையில் எடுத்த சிலம்பம், கத்தி வீச்சு ஒளிப்பதிவுகளையெல்லாம் காண்பித்தார். அதில் பங்கேற்ற தென்றல் வீரசேகரும் விழாவில் பங்கேற்றது மிகச் சிறப்பாக இருந்தது .
அமெரிக்காவில் மாற்றுத் திறனாளிகளுக்காகச் சிறப்பாகப் பணியாற்றும் ஸ்காட், எரிக் ஸ்டைன் இணையர்களுக்கு நன்றி தெரிவித்து நன்கொடை அளிக்கப்பட்டது. அவர் களைப் பாராட்டி கேரி நகர மன்ற உறுப்பினர் சரிகா பன்சால் அம்மையார் பேசினார்கள். எப்படி நமது மக்கள் சமூகத் தொண்டர்களாகப் பணியாற்றுகின்றனர் என்பதை பெருமையுடன் கூறினார்.
பின்னர் நமது மகளிருடன் அவர்களும் சேர்ந்து கும்மி, கோலாட்டம் ஆடினர். சொர்ணா அம்மையார் கோலாட்டத் திற்குப் பாட்டுப் பாடினார்கள். அவருடைய வாழ்விணையர் கிருட்டிணமூர்த்தி தமிழ்நாட்டில் ஆண்டு தோறும் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளுக்கு எதிர் காலம் பற்றிய பயிற்சி முகாம் நடத்தி வருகின்றார் என்று அறிமுகப் படுத்தப்பட்டார் .
பலர் பொங்கல் பற்றியும் ஏறு தழுவுதல் பற்றியும் பல கேள்விகள் கேட்டனர். பரிசளிக்க குலுக்கல் நடத்தி பரிசு பெற்றவர்களுக்குத் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டன .
விருந்து படைத்த நிகழ்ச்சிக்கு உதவிய அனை வர்க்கும் சரோ அம்மையார் நன்றி தெரிவித்தார்கள்.
அனைவரும் மிக்க மகிழ்சியுடன் ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டு “பொங்கலோ பொங்கல்” என்று கூறி விடை பெற்றனர்.
– சோம. இளங்கோவன்
