‘‘நான் பெற்ற புக்கர் பரிசு திராவிட இயக்கக்
கருத்தாக்கத்திற்கு உலக அளவில் கிடைத்த அங்கீகாரம்!
‘எங்கே திராவிடம்’ என்று கேட்கும் மூடர்களுக்கு
கடந்த 16, 17, 18 மூன்று நாட்கள் சென்னையில் சீரும் சிறப்புடன் வெற்றிகரமாக நடைபெற்ற பன்னாட்டுப் புத்தகக் காட்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கன்னட எழுத்தாளர் பானு முஸ்தாக்கின் உரை மிகவும் அறிவார்ந்ததாகவும், செறிவானதாகவும் அமைந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
உலக அளவில் இலக்கியத்திற்காகத் தரப்படும் புக்கர் பரிசு அவருடைய ‘ஹார்ட் லாம்ப்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காகக் கடந்த (2025) ஆண்டில் வழங்கப்பட்டது. பெண்ணியம், சுயமரியாதை, சமூக நீதி, சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறை, மத அரசியலால் ஏற்படும் சீர்கேடுகள் எனப் பல கூறுகளை இச்சிறுகதைகள் பேசுகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு கருநாடகாவில் தசரா நிகழ்ச்சியைப் பானு முஸ்தாக் தொடங்கி வைப்பார் என்று முதலமைச்சர் சித்தராமையா சொன்னபோது, அங்குள்ள வலதுசாரி மத வெறியர்கள் அதனை எதிர்த்தனர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டதை நாம் அறிவோம். மத வெறியர்களின் கூச்சல்களும், கூப்பாடுகளும் உச்ச நீதிமன்றத்தால் முறியடிக்கப்பட்டுத் திட்டமிட்டபடி பானு முஸ்தாக்கே தொடங்கி வைத்தார் என்பது சிறப்பு.
மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்ட நேற்றைய (18.1.2026) பன்னாட்டுப் புத்தக விழா நிறைவுநாள் நிகழ்ச்சியில் உரையாற்றத் தொடங்கிய பானு முஷ்தாக் எளிமையாகத்தான் தன் உரையைத் தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக அவர் உரை சூடு பிடிக்கத் தொடங்கியது. தான் இன்றைக்கு எழுத்தாளராகப் பரிமளிப்பதற்கு மிக முக்கிய காரணம் தந்தை பெரியாருடைய கருத்துகளை உள்வாங்கியதே என்றார்.
மரபு ரீதியாகத் திணிக்கப்பட்ட படிநிலைகளைக் கேள்வி கேட்கவும், மூடத்தனமான கீழ்ப்படிதலை நிராகரிக்கவும் தந்தை பெரியார் நமக்குக் கற்பித்தார். பாரம்பரியத்தை விட ‘மனித மாண்பே’ உயர்ந்தது என்பதே பெரியாரியம். வர்ணம், மதம் அல்லது வம்சாவளியால் மனித மதிப்பு நிர்ணயிக்கப்படுவதில்லை; மனிதனாகப் பிறந்ததாலேயே ஒவ்வொருவருக்கும் மதிப்பு வருகிறது என்பதே திராவிட உலகப்பார்வை.
மேலும் அவர் உரையில், “இந்திய மொழி இலக்கியங்களுக்கு ஓர் ஆழமான உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கத் தருணத்தில் பன்னாட்டுப் புத்தகக் காட்சி சென்னையில் நடைபெற்றுள்ளது. மண்ணின் மணம், மவுனம் மற்றும் தமிழ் வாழ்வின் போராட்டங்களை உலகுக்கு உரக்கச் சொன்ன தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் புத்தகமும் என்னுடைய புத்தகத்துடன் சேர்ந்து 2025 புக்கர் பரிசுப் பட்டியலுக்குத் தேர்வானது. இறுதியில் பரிசு பெரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தாலும் தமிழ், கன்னடம் என இவ்விரு மொழிகளிலிருந்தும் புத்தகங்கள் உலக அளவில் சென்றது நமக்குக் கிடைத்த பெருமை. இது தற்செயலாக நடந்த நிகழ்வு அல்ல. அதுமட்டுமல்ல – எங்கள் இருவரின் தனிப்பட்ட சாதனைகளும் அல்ல; மாறாக, இதனைத் திராவிட இயக்கக் கருத்தாக்கத்திற்கும், அதன் வலிமைக்கும் உலகளவில் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுகிறேன்.
திராவிட மொழிகள் ஒருபோதும் வெறும் அலங்கார மொழிகளாகவோ, வழிபாட்டு மொழிகளாகவோ இருந்ததில்லை. அவை விவாதம், எதிர்ப்பு, அறம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வைப் பேசும் மொழிகளாகும். ஜாதி, ஆணாதிக்கம், அதிகாரம் மற்றும் அநீதி ஆகியவற்றைக் கேள்வி கேட்கும். பல நூற்றாண்டுக்கால மரபை அவை தங்களுக்குள் சுமந்து நிற்கின்றன.
இன்று உலகம் திராவிட இலக்கியங்களின் பக்கம் தனது பார்வையைத் திருப்புகிறது என்றால், மொழியின் நடை அழகிற்காகவோ அல்லது புதுமைக்காகவோ அல்ல; அந்த எழுத்துகளுக்குப் பின்னால் இருக்கும் ஆழமான ‘அறச் சீற்றத்தை’ (Moral Seriousness) உலகம் உணர்ந்திருக்கிறது. எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாத, அதிகாரத்தைப் புகழாத, எக்காலத்திலும் மக்களைக் கைவிடாத திராவிட இலக்கியத்தை உலகம் இன்று அடையாளம் கண்டுள்ளது.
இந்த அறச்சீற்றத்தின் மய்யப் புள்ளியாக விளங்குவது நவீன இந்தியாவின் உன்னதக் கொள்கையான ‘சமூக நீதி’ ஆகும். சமூக நீதி என்பது வெறும் தேர்தல் முழக்கமோ அல்லது வெற்று வாக்குறுதியோ அல்ல; அது அன்றாடம் தொடரும் ஓர் ஓயாத போராட்டம்.
நமது அரசியலமைப்புச் சட்டம் ஒரு புரட்சிகரமான உண்மையை அங்கீகரித்தது: முறையாகச் ‘சரிசெய்யாமல்’ (Correction) சமத்துவம் பிறக்காது.
‘கண்ணியம் இல்லாத சுதந்திரம்’ வெறும் வெற்றுக் கூடு.
‘சமூக நீதி இல்லாத ஜனநாயகம்’ எப்போதும் பலவீனமானது.
இந்த அரசியலமைப்புச் சட்டத்தின் கனவை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் தென்னகத்தின் திராவிட மாநிலங்கள் எப்போதும் முன்னணியில் உள்ளன.
கொள்கைகள், மக்கள் இயக்கங்கள், இலக்கியங்கள் மற்றும் சமூகச் சீர்திருத்தங்கள் வாயிலாகத் தொடர்ந்து செயல்பட்டு குரல் அற்றவர்களின் குரலை வெளிப்படுத்துவதிலும், அனைவருக்கும் எல்லா வாய்ப்பு களையும் பெற்றுத் தருவதிலும் குறிப்பாக, கல்வி பரவலாகச் சென்று அடைவதிலும் நாம் தொடர்ந்து பணி யாற்றி வருகிறோம்.
இந்த மகத்தான மரபு, தந்தை பெரியார் எனும் மாபெரும் ஆளுமை யிடமிருந்து பெறப்பட்டது. மரபு ரீதியாகத் திணிக்கப்பட்ட படிநிலைகளைக் கேள்வி கேட்கவும், மூடத்தனமான கீழ்ப்படிதலை நிராகரிக்கவும் தந்தை பெரியார் நமக்குக் கற்பித்தார். பாரம்பரியத்தை விட ‘மனித மாண்பே’ உயர்ந்தது என்பதே பெரியாரியம். வர்ணம், மதம் அல்லது வம்சாவளியால் மனித மதிப்பு நிர்ணயிக்கப்படுவதில்லை; மனிதனாகப் பிறந்ததாலேயே ஒவ்வொருவருக்கும் மதிப்பு வருகிறது என்பதே திராவிட உலகப்பார்வை. தந்தை பெரியார், ‘சுயமரியாதை’ என்பதை நீதியின் அடிப்படையாக முன்வைத்து, அதனை ஒரு வலிமையான அறம் சார்ந்த அரசியல் இயக்கமாக மாற்றினார். திராவிடக் கட்டமைப்பில் சமூக நீதி என்பது தர்மமோ அல்லது சலுகையோ அல்ல; அது பல நூற்றாண்டுகளாகப் பறிக்கப்பட்ட உரிமைகளைத் திரும்பப் பெறும் மீட்டெடுப்பதாகும் (Restoration).
‘திராவிட மனநிலை’ என்பது வெறும் அரசியல் மட்டுமல்ல, அது ஒரு கலாச்சாரப் பண்பு. அது நமக்கு மூன்று முக்கியப் பாடங்களை உணர்த்துகிறது:
‘கல்வி’யே சமத்துவத்தின் அடிப்படை.
‘பகுத்தறிவே’ சுதந்திரச் சிந்தனைகளுக்கு அடித்தளம்.
‘சுயமரியாதை’யே சமூகநீதியின் உயிர் மூச்சு.
உண்மையான இலக்கியம் அதிகாரத்திற்குத் துணை போகாது; மாறாக, அதனை அசைத்துப் பார்க்கும். அநீதிக்கு அலங்காரம் செய்யாமல், அதனை வேரறுக்கத் துணியும். மக்களை வலிமைப்படுத்தும் இலக்கியமே ஜனநாயகத்தையும் வலிமைப்படுத்தும். பரிவுணர்வை வளர்க்கும் எழுத்துகள் சமூக நீதியைக் கட்டியமைக்கின்றன.
அந்த வகையில், இன்றைய எழுத்தாளர்கள் வெறும் கதை சொல்லிகள் மட்டுமல்ல; அவர்கள் காலத்தின் அறச் சாட்சிகள். ‘‘திராவிட இலக்கியம் என்பது துன்பங்களைக் கொண்டாடும் கலை அல்ல, துயரங்களின் காரணங்களை விசாரணை செய்யும் ஓர் அறிவுப்புரட்சி” எனப் பானு முஸ்தாக் உணர்ச்சிகரமான உரையினை நிகழ்த்திய போது அரங்கம் ஆர்ப்பரித்தது. கையொலி எழுப்பி அங்கீகரித்தது. தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்டி வெளியே சென்றால், எங்கே திராவிடம் என்று கேட்கும் மூடர்களுக்கும் வறட்டுவாதிகளுக்கும் பானு முஸ்தாக்கின் கருத்துரை சம்மட்டியாக விழுந்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டியதில்லை.
திராவிடம் என்பது மானுடத் தத்துவம், அது உலகை வெல்லும்; உலகை ஆளும். தந்தை பெரியார் என்னும் மாபெரும் தலைவர் அதன் அச்சாணியாக விளங்குவார். வாழ்க பெரியார், வளர்க பகுத்தறிவு.
– முனைவர் கோ. ஒளிவண்ணன்
