சுதந்திர நாட்டில் பார்ப்பான் இருக்கலாமா? பறையன் இருக்கலாமா?
உயர்ந்தவன் இருக்கலாமா? தாழ்ந்தவன் இருக்கலாமா?
எல்லோரும் மனிதர்களாக இருக்க வேண்டாமா?
சென்னை, ஜன. 18– ”யார் சொல்வதையும் நம்பாதீர்கள். உன் அறிவு என்ன சொல்கிறது? அதைக் கேள் என்று கூறி சொன்னவர் தந்தை பெரியார்” என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். முன்னதாக திராவிடர் திருநாள் நிகழ்ச்சியில், எழுத்தாளர் பெருமாள் முருகன், திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோருக்கு, ”பெரியார் விருது” வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 32 ஆம் ஆண்டின் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, திராவிடன் நிதி நிறுவனம், குடும்ப விளக்கு நிதி நிறுவனம் இணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்தன. ஒவ்வொரு ஆண்டும் இயல், இசை, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்த பங்களிப்பை செய்திருக்கின்ற தமிழர்களுக்கு ‘பெரியார் விருது’ வழங்கி சிறப்பு செய்வது வழமை. அந்த வகையில் இந்த ஆண்டு, எழுத்தாளர் பெருமாள் முருகன், திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோருக்கு ‘பெரியார் விருது’ வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த நிகழ்வு எல்லோரும் பொங்கலைக் கொண்டாட வேண்டும் என்ற காரணத்திற்காக பொங்கல் முடிந்து 17.01.2026 சனிக்கிழமை அன்று சென்னை பெரியார் திடலில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நாளிலேயே தோரணங்கள், கழகக் கொடிகள், கரும்பு அலங்காரங்கள் என்று ஒளிவிளக்குகள் என்று ‘பெரியார் திடல்’ களை கட்டிவிட்டது.
கலை நிகழ்ச்சிகள்
தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் நடத்திய திராவிடர் திருநாள் நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் 17.01.2026 அன்று மாலை 4 மணியளவில் தொடங்கின. விழுப்புரம் மரபுக் கலை குழுவினரின் கலை நிகழ்ச்சிகளை பெரியார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அன்னை மணியம்மையார் சிலையருகில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே செ. கோபால் தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், ஆவடி மாவட்டத் தலைவர் வெ.கார்வேந்தன் ஆகியோர் முன்னிலையில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். அங்கிருந்து பறை இசை உடன் ஊர்வலமாக பெரியார் திடலுக்கு வந்து பறை இசை, மயில் ஆட்டம், உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளை மிக சிறப்பாக நடத்தினார்கள். கழகத் தோழர்கள் நிகழ்ச்சியை கண்டும் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். பின்னர் தொடர்ந்து, பெரியார் வீர விளையாட்டுக் கழகம் நடத்திய சிலம்பம் மற்றும் வீர விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
குழந்தைகள் முதல் தோழர்கள் வரை பறையிசைக்கேற்ப நடனமாடிக் களித்தனர்.
தொடர்ந்து நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் மரபு கலைக் குழுவினர் பறை மற்றும் பெருவங்கிய இசையுடன், இன எழுச்சிமிக்க நாட்டுப்புற பாடல்களை பாடினர். அதனைத் தொடர்ந்து கிராமிய பாடல்களுடனான ஒயிலாட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்திய விழுப்புரம் மரபு கலைக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் சசிகுமார், மற்றும் இசை ஆசிரியர் பாடகர் சுரேஷ் உள்ளிட்ட கலைஞர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. வீர விளையாட்டு சாகச நிகழ்ச்சிகளை நடத்திய பெரியார் வீர விளையாட்டு கழக மாணவர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் தமிழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வழங்கினார்.
திராவிடர் திருநாள்
முன்னதாக, பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் தலைமையில், ஆதிலட்சுமி, மாலதி, த.மரகதமணி ஆகியோரின் ஒத்துழைப்பில் தந்தை பெரியார் சிலையின்முன்பு பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. சிறுவர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. இந்நிகழ்வை தோழர் ஓவியச்செல்வன் ஒருங்கிணைத்தார்.
கவிஞர் ஈரோடு தமிழன்பன் படத்திறப்பு
திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்து, பெரியார் காட்சியகத்தைப் பார்வையிட்டார். தொடர்ந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுடன் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, எருமை மாட்டுக்கு வாழைப்பழம் வழங்கப்பட்டது. கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களும் வாழைப்பழம் வழங்கினார்.
அதே சமயம் மேடையில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, நிகழ்ச்சியின் முக்கியப் பகுதியான பெரியார் விருது வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. தொடக்கத்தில் காலம் சென்ற புரட்சிப்பாவலர் ஈரோடு தமிழன்பன் படத்தை கழகத் தலைவர், பெரியார் விருதாளர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார். பெரியார் விருது வழங்கும் நிகழ்ச்சியை கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங்கிணைத்து சிறப்பித்தார். கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அனைவரையும் வரவேற்று உரையாற்ற, கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையேற்று உரை நிகழ்த்தி சிறப்பித்தார். தமிழ்நாடு அரசின் பெரியார் விருது பெற்ற, கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி நிகழ்ச்சியின் தொடக்கவுரையை வழங்கி, விருதாளர்களை அறிமுகம் செய்துவைத்தும் உரையாற்றினார்.
பெரியார் விருது
அதைத் தொடர்ந்து பெரியார் விருது பெறும் நிகழ்வு தொடங்கியது. முதலில் பெருமாள் முருகன் அவர்களுக்கு பெரியார் விருது வழங்குவதாக அறிவிப்பு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து பெரியார் விருதுக்கான கருத்துரை ஒளிப்படம் திரையிடப்பட்டது. அதன் பிறகு கழகத் தலைவர் பொன்னாடை அணிவித்து, நினைவுப்பரிசு, பெரியார் விருது வழங்கி சிறப்பித்தார். தொடர்ந்து, பெருமாள் முருகன் ஏற்புரை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து, திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டது. அதே போல் அதற்கான கருத்துரைக் காணொலி திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பொன்னாடை அணிவித்து பெரியார் விருது வழங்கி சிறப்பித்தார். அதையடுத்து மாரிசெல்வராஜ் ஏற்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மிகப்பெரிய ஆதரவையும், உற்சாகத்தையும் கொடுத்து சிறப்பித்தனர்.
தமிழர் தலைவர் பாராட்டுரை
இறுதியாக கழகத் தலைவர், ”யார் சொல்வதையும் நம்பாதீர்கள். உன் அறிவு என்ன சொல்கிறது? அதைக் கேள் என்று சொன்னவர் தந்தை பெரியார்” என்றும், ”சுதந்திர நாட்டில் பார்ப்பான் இருக்கலாமா? பறையன் இருக்கலாமா? உயர்ந்தவன் இருக்கலாமா? தாழ்ந்தவன் இருக்கலாமா? எல்லோரும் மனிதர்களாக இருக்க வேண்டாமா?” என்று பெரியார் கேட்டார் என்றும், எழுத்து, கலை மூலம் மக்களுக்குத் தேவையான கருத்துகளை வீரியத்துடன் கொண்டு செல்கிற எழுத்தாளர் பெருமாள் முருகன், திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகிய இருவரும் தனிமனிதர்கள் அல்ல, திராவிடர் இயக்கம் அவர்களுக்கு பின்னால் இருக்கிறது. இவர்களை எங்கள் தோள் மீது ஏற்றி வைத்து பாராட்டுகிறோம். தொடர்ந்து உங்கள் பணிகளைச் செய்யுங்கள்” என்று வாழ்த்தி தனது உரையை நிறைவு செய்தார். பெரியார் வீரவிளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ்களை கழகத் தலைவர் வழங்கினார்.
அடுத்து, கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்திய கலைஞர்களுக்கு பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி சிறப்பு செய்தார். இறுதியாக அனைவரும் குழு ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். இப்படியாக 2026 ஆம் ஆண்டு திராவிடர் திருநாள் சிறப்பாக நடந்து முடிந்தது. கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் வருகை தந்து அரங்கம் நிறைந்து, மேல் மாடத்திலும் (பால்கனி)யிலும் அமர்ந்து நிகழ்ச்சியை கண்டுகளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக திராவிடன் நல நிதி மேலாளர் அருள்செல்வன் நன்றி கூறி நிகழ்ச்சியை முறைப்படி நிறைவு செய்தார். மக்கள் மிகுந்த மனநிறைவுடன் கலைந்து சென்றனர். இந்நிகழ்வு சிறக்க கடந்த. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சுரேஷ், நா.பார்த்திபன், மங்களபுரம் பார்த்திபன், வேலவன், பவானி, கலையரசன், கலைமணி, உத்ரா, விக்கி, மாலதி ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.
