கதக், ஜன.18 கருநாடகாவின் கதக் மாவட்டம் லக்குன்டி கிராமத்தில், வீரபத்ரேஸ்வரர் கோயிலுக்கு அருகே, வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, 475 கிராம் பழங்கால தங்க நகைகள் கிடைத்தன. இந்த புதையல் கிடைத்ததன் எதிரொலியாக, அப்பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் துவங்கின.
கருநாடகாவின் கதக் மாவட்டம் லக்குன்டி கிராமத்தில், வீரபத்ரேசுவரர் கோயில் உள்ளது.
இக்கோயிலுக்கு அருகே வசிக்கும் கங்கவ்வா பசவராஜ் ரிட்டி என்ற பெண், புதிய வீடு கட்டுவதற்காக, சமீபத்தில் தன் நிலத்தில் பள்ளம் தோண்டிய போது, செம்பு பாத்திரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில், 475 கிராம் தங்க நகைகள் இருந்தன.
இதையடுத்து, லக்குன்டி கிராமம் முழுதும் புதையல் உள்ளதாக தகவல்கள் பரவின.
இதையடுத்து, வீரபத்ரேசுவரர் கோவில் வளாகத்தில், நேற்று (17.1.2026) அகழ்வாராய்ச்சிப் பணிகள் துவங்கின. சுற்றுலாத்துறை, தொல்லியல் துறை, லக்குன்டி பாரம்பரிய மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து இப்பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக, கருநாடக அரசு, 25 லட்சம் ரூபாய் விடுவித்துள்ளது.
நேற்று, 10 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலத்துக்கு அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடந்தன. 48 பேர் தோண்டும் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. ஓர் அடி ஆழத்துக்கு மேல் தோண்டப்பட்டது. ஆனால், தங்க நகைகள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை.
இதுகுறித்து, கதக் மாவட்ட பொறுப்பு அமைச்சர் எச்.கே.பாட்டீல் கூறியதாவது:
லக்குன்டி கிராமத்தில் உள்ள ஒவ்வொரு கோவிலின் கீழும் ஏராளமான தங்க நகைகள் இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. வரலாற்று உண்மைகளை வெளிக்கொண்டு வர முழு கிராமத்திலும் அகழ்வாராய்ச்சிப் பணிகள் நடத்துவது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
‘ஒரே இந்தியா, ஒரே தங்கம் விலை’
மலபார் கோல்டு தலைவர் அஹமத் வலியுறுத்தல்
புதுடில்லி, ஜன.18 இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயத்தில் சில வியாபாரிகள் தன்னிச்சையாகச் செயல்படுவதாகவும், இது வர்த்தகத்தின் நம்பகத்தன்மையைப் பாதிப்பதாகவும் மலபார் கோல்டு நிறுவனத் தலைவர் அஹமத் குற்றம் சாட்டியுள்ளார்.
தங்கத்தின் விலை பொதுவாக பன்னாட்டு சந்தை நிலவரம், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் இறக்குமதி வரி ஆகிய மூன்று முக்கிய காரணிகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. வழக்கமாக, வர்த்தக சங்கங்கள் வெளிப்படையான முறையில் விலையை அறிவிப்பது நடைமுறை. ஆனால், சமீபகாலமாக சில வியாபாரிகள் நுகர்வோருக்கு முறையான விளக்கம் அளிக்காமல், தன்னிச்சையாக விலையை உயர்த்தி வருவதாக அஹமத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய செயல்பாடுகள் தங்கச் சந்தையின் மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
இறக்குமதி வரி நாடு முழுவதும் ஒன்றாக இருக்கும் நிலையில், தங்கத்தின் விலையும் இந்தியா முழுவதும் ஒரே சீராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். பன்னாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, நாடு தழுவிய அளவில் ஒரே விலையை அமல்படுத்த ‘ஒரே இந்தியா, ஒரே விலை’ என்ற புதிய முயற்சியைத் தங்களது நிறுவனம் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்கம் விலை நிர்ணயத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம். பன்னாட்டு சந்தை மற்றும் ரூபாய் மதிப்புக்கு ஏற்ப விலையை மாற்ற வேண்டும். நாடு முழுவதும் தங்கம் விலை ஒரே அளவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி , ‘ ஒரே இந்தியா , ஒரே விலை’ என்ற முயற்சியை துவங்கி உள்ளோம் . இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எச்சிஎல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
அரியர்ஸ் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஜன.18 பிரபல அய்டி நிறுவனமான எச்சிஎல் (எச்சிஎல் டெக்) சோழிங்கநல்லூர் கிளையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான நேரடி நேர்காணல் (Walk-in Interview) குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பட்டதாரிகள் மற்றும் அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்களுக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
பணியின் பெயர்: வாய்ஸ் பிராசஸ் கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளங்கலை டிகிரி (ஆட்ஸ் & சயின்ஸ் 2025-ல் முடிக்கும் எம்பிஏ., எம்ஏ., எம்.எஸ்சி.,எம்.காம்., மாணவர்களும் பங்கேற்கலாம். அனுபவம் தேவையில்லை அனுபவம் இருப்பின் 1 வருடத்திற்குள் இருக்க வேண்டும்.
முக்கிய நிபந்தனை: அரியர்ஸ் இருப்பவர்களும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். இரவு நேர ஷிப்ட் (Night Shift) உட்பட எந்த நேரத்திலும் பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும்.
தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப நேர்காணலின் இறுதிச் சுற்றில் முடிவு செய்யப்படும். பன்னாட்டு பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் செல்ல வசதி உண்டு. நேர்காணல் நடைபெறும் நாள்: 20.1.2026 நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 03:00 மணி வரை. இடம்: எண் 602/3/138, எல்காட் எகனாமிக் ஜோன் (Elcot SEZ), மேடவாக்கம் மெயின் ரோடு, சோழிங்கநல்லூர், சென்னை – 600 119. நேர்காணலுக்குச் செல்வோர் தங்களது லேப்டாப் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
