மலேசிய நாட்டில் அகத்தியருக்கு மாநாடா?
மலேசியத் தமிழர்கள், தங்கள் நாட்டில் அகத்தியர் மாநாட்டினை நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது!
மலேசியத் தமிழர்கள், தங்கள் நாட்டில் அகத்தியர் மாநாட்டினை நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
மலேசிய நாட்டில் அகத்தியருக்கு மாநாடா? மலேசியத் தமிழர்கள், தங்கள் நாட்டில் அகத்தியர் மாநாட்டினை நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது. ‘‘உண்மையான’’ தமிழ் அறிஞர்கள், செ ம்மொழிக் காவலர்கள், நடுநிலைச் சிந்தனையாளர்கள் சிந்திக்கவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
- மலேசிய நாட்டில் அகத்தியருக்கு மாநாடா? மலேசியத் தமிழர்கள், தங்கள் நாட்டில் அகத்தியர் மாநாட்டினை நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது!
- தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
- தமிழ்நாடு அரசு கண்டிப்பு
- வரும் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அகத்தியர் மாநாடாம்!
- மலேசியத் தமிழர்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்!
- மலேசியத் தமிழர்கள், தங்கள் நாட்டில் அகத்தியர் மாநாட்டினை நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது!
புராணக் கதைகளில் இடம்பெறும் அகத்தியருக்கு மலேசிய நாட்டில் மாநாடு நடத்தப் போவதாகத் தகவல்கள் வெளியாகி வருவது பெரும் கண்டனத்துக்கு உரியது. தொல்காப்பியத்தின் சிறப்பும், பெருமையும் உலக நாடுகளில் அண்மைக் காலமாகப் பரவி வரும் இந்த வேளையில் தொல்காப்பியத்தின் பெருமையை இருட்டடிப்புச் செய்யும் வேலையில் காவிக் கும்பல் கடந்த பல மாதங்களாகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தமிழ் உணர்வு நிறைந்த மலேசியத் தமிழர்களிடத்து அகத்தியருக்கு மலேசியாவில் மாநாடு நடத்த வேண்டும் என்று ஓர் ஆசையைத் தூண்டி, அகத்தியருக்கு மாநாடு நடத்தும் ஒரு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கண்டிப்பு
அகத்தியர் கருத்தரங்குகளைத் தமிழ்நாட்டில் நடத்துவதற்கு ஒன்றிய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு இந்திய அரசு நிறுவனங்கள் தாராளமாக நிதியுதவி செய்துவருகின்றன. இதனைப் பயன்படுத்திக்கொண்டு, ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் சிலர் அகத்தியரைப் பற்றி ஆராய்ச்சி செய்வதாகவும், கருத்தரங்குகள் நடத்துவதாகவும், மாநாடுகள் நடத்துவதாகவும் ஒன்றிய அரசிடமிருந்து பெரும் நிதியுதவிகளைப் பெற்று வருகின்றனர். தமிழ் அழிப்பு வேலைகளுக்குத் தாராளமாக நிதியுதவி செய்யும் ஒன்றிய அரசின் இந்த இழிசெயலைத் திரா விடர் கழகம் உள்ளிட்ட இயக்கங்கள் கண்டித்தன. உடனடியாகத் தமிழ்நாடு அரசு இத்தகைய போலி அகத்தியர் கருத்தரங்குகள் தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களில் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று கண்டிப்புக் காட்டியது. இதனால் அகத்தியர் ‘ஆராய்ச்சி யாளர்கள்’ தமிழ்நாட்டில் அடங்கிக் கிடந்தனர்.
வரும் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அகத்தியர் மாநாடாம்!
இப்பொழுது மலேசிய நாட்டில் நுழைந்து அங்குள்ள தமிழ் உணர்வாளர்களை ஏமாற்றி அகத்தியர் மாநாடு நடத்துவதற்கு உரிய ஆசை வார்த்தைகளைக் கூறி, வரும் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அகத்தியர் மாநாடு நடத்துவதற்கு உரிய முன்னேற்பாடுகளைச் செய்துவருவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. இந்தப் போலி அகத்தியர் மாநாட்டுக்கு மலேசியாவில் உள்ள செல்வந்தர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் உண்மைநோக்கம் அறியாமல் உதவிசெய்ய முன்வந்துள்ளதை நினைத்து வருந்துகின்றோம். தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிரான அகத்தியர் மாநாட்டுக்கு ஆதரவு தருவது என்பது நம் தலையில் நாமே கொள்ளி வைத்துக்கொள்வதற்குச் சமமாகும்.
மலேசியாவின் தமிழ்ப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு வழிகாண்பது, மலேசியக் குழந்தை களுக்குத் தமிழ்மொழி மீது ஈடுபாட்டை ஏற்படுத்து வது, மலேசியாவில் தமிழ் ஆசிரியர்களுக்கு உரிய பயிலரங்குகளை நடத்துவது, மலேயா பல்கலைக்கழ கத்தில் தமிழ் பயிலும் மாணவர்களுக்கும், ஆராய்ச்சி செய்யும் மாணவர்களுக்கும் தேவைப்படும் வசதிகளை ஏற்படுத்தித் தருவது முதலியன இன்றைய தேவையாக மலேசியாவில் உள்ளது. இதனை விடுத்து, போலி அகத்தியர் மாநாடு போன்ற தேவையற்ற செயல்களில் மலேசியத் தமிழர்கள் ஈடுபடுவதை அங்குள்ள தமிழ் உணர்வாளர்களும், அரசியல் தலைவர்களும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மலேசியத் தமிழர்களுக்கு
நினைவூட்ட விரும்புகின்றோம்!
நினைவூட்ட விரும்புகின்றோம்!
இந்தியப் பிரதமர் மோடி அவர்கள் 2024 இல் திருவள்ளுவர் இந்திய ஆய்வுகள் இருக்கை (Thiruvalluvar Chair of Indian Studies) தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட பிறகு, 2025 இல் ஆய்வு இருக்கை செயல்பாட்டுக்கு வந்தது. தமிழறிஞர்களின் எதிர்ப்பையும் மீறி, அகத்தியரைப் பற்றி காஞ்சிபுரம் சிறீ சங்கரா கலை அறிவியல் கல்லூரியில் 10.2.2025 இல் ‘தமிழ்ப் பண்பாட்டு நாயகர் அகத்தியர்’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை படித்த பேராசிரியர் ஒருவரைத்தான் இப்பொழுது இந்திய அரசு, மலேயா பல்கலைக்கழகத்தில் நிறுவியுள்ள திருவள்ளுவர் இருக்கையின் தலைவராகப் பணியமர்த்தியுள்ளது என்பதையும் மலேசியத் தமிழர்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம். தமிழ்நாட்டிலும், மலேசியாவிலும் தமிழ் படித்த எண்ணற்ற தமிழறிஞர்கள், ஆன்றவிந்த தமிழ்ப் பேராசிரியர்கள் இருக்கும்பொழுது, வேறு துறைப் பேராசிரியரான இவரைத் திருவள்ளுவர் இருக்கையில் ஒன்றிய அரசு அமர்த்தியதன் உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ளவேண்டும். தமிழையும், தமிழர்களை யும் காட்டிக்கொடுக்கும் இழிசெயல்களில் ஈடுபடுப வர்களைத் தேடிப் பிடித்து இந்திய ஒன்றிய அரசு இவரை மலேசியாவில் பணியமர்த்தியுள்ளது. தமிழ் அழிப்பு வேலைக்குத் துணைபோன ஒருவருக்கு இந்திய மக்களின் வரிப்பணத்தை இந்திய அரசு வழங்கி வருகின்றது.
மலேசியத் தமிழர்கள், தங்கள் நாட்டில் அகத்தியர் மாநாட்டினை நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது!
புராண, இதிகாச, கட்டுக்கதைகளை உண்மை என நம்பும் இவர்களைப் போன்ற சிலர் எங்கும் உள்ளனர். இவர்களைப் போன்ற ஆரிய அடிவருடிகளைப் பயன்படுத்தி, அகத்தியர் மாநாட்டை மலேசியாவில் நடத்துவதன் வழியாகத் தொல்காப்பியருக்கு முந்தியவர் அகத்தியர் என்றும், அகத்தியர்தான் தமிழுக்கு இலக்கணம் வகுத்தார் என்றும், அகத்தியர் என்பவர் ஆரியர் என்பதையும் நிலைநாட்டுவதற்கு மனப்பால் குடிக்கும் காவிக்கும்பலின் உண்மைநோக்கத்தை மலேசியத் தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும். தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவால் தமிழ் உணர்வும், பகுத்தறிவுச் சிந்தனையும் பெற்ற மலேசியத் தமிழர்கள், தங்கள் நாட்டில் அகத்தியர் மாநாட்டினை நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது. இது செம்மொழி தமிழுக்குச் செய்யும் அழிவு வேலையாகும்.
‘‘உண்மையான’’ தமிழ் அறிஞர்கள், செம்மொழிக் காவலர்கள், நடுநிலைச் சிந்தனையாளர்கள் சிந்திப்பார்களாக!
சென்னை தலைவர்,
18.1.2026 திராவிடர் கழகம்
