திருச்சி, ஜன. 17- திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் ஒன்றிணைந்து நடத்திய சமத்துவப் பொங்கல் விழா 13.1.2026 அன்று காலை 11.30 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு வருகை தந்த பெரியார் கல்விக் குழுமங்களின் தாளாளரும், திராவிடர் கழகப் பொதுச் செயலாளருமான முனை வர் வீ. அன்புராஜ் அவர்களுககு மழலையர் பிரிவு மாணவர்கள் பூங் கொத்துக் கொடுத்து வரவேற்றனர்.
பொங்கல் விழாவினை திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் வீ. அன்புராஜ் தலைமையேற்று விழாவினைச் சிறப்பித்தார். விழாவில் முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணித் தோழர்கள் மற்றும் மாணவ, மாணவியர் அனைவரும் வண்ணமயமான ஆடைகளை அணிந்து வருகை தந்திருந்தனர். மேலும் தமிழர் பாரம்பரிய முறைப்படி இசைக்கு ஏற்ப உற்சாகமாக நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து, வளாகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து, புதுப்பானையில் பொங்கலிட்டு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சமத்துவ உணர்வுடன் கொண்டாடினர்.
விழாவில் பங்கேற்ற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் அனைவருக்கும் திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் வீ. அன்புராஜ் தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, மழலையர் பிரிவு மாணவர்களுக்குத் தனது கையால் பொங்கல் ஊட்டி மகிழ்ந்த அவர், மாணவர்களுடன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். நிர்வாகத்தின் சார்பில் மாணவர்கள் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.
சமத்துவப் பொங்கல் விழாவை முன்னிட்டு கல்வி வளாகம் விழாக்கோலம் பூண்டு, சமத்துவக் கொள்கையைத் பறைசாற்றும் வகையில் இவ்விழா அமைந்திருந்ததோடு, மாணவ மாணவியரின் உற்சாகக் குரல்கள் வளாகம் முழுவதும் எதிரொலித்து மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்தது.
